செய்திகள்

எனது தந்தைப் பெயரை களங்கப்படுத்த முயற்சி: சரத்பவார் மீது மனோகர் பாரிக்கர் மகன் குற்றச்சாட்டு

ராஞ்சி, ஏப். 16–

தன்னுடைய தந்தை பெயரை அரசியல் காரணங்களுக்காக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் பயன்படுத்தி வருவதாக மனோகர் பாரிக்கரின் மகன் உத்பால் பாரிக்கர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

உச்சநீதிமன்றம் ரபேல் குறித்த சீராய்வு மனுவை விசாரிப்பதாக தெரிவித்துள்ள நிலையில், மீண்டும் இந்த விவகாரம் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜக அரசு மீது எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு தொடர்ந்து வருகின்றன.

இந்நிலையில், ரபேல் விவகாரம் காரணமாகவே அப்போதைய பாதுகாப்பு மத்திய அமைச்சராக இருந்த மறைந்த மனோகர் பாரிக்கர் தனது பதவியை ராஜினாமா செய்தார் என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் விமர்சனங்களை முன்வைத்தார்.

குற்றச்சாட்டுக்கு பதிலடி

இவருடைய குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் விதமாக, மனோகர் பாரிக்கரின் மகன் உத்பால் பார்க்கர் கடிதம் எழுதியுள்ளார். அதில், சரத்பவார் தனது தந்தை மனோகர் பாரிக்கர் பெயரை அரசியல் காரணங்களுக்காக பயன்படுத்தி வருகிறார். தனது தந்தை உயிருடன் இருந்த போது, அப்போது எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுக்கு அவர் தகுந்த பதிலடி கொடுத்தார்.

ஆனால் அவர் இப்போது உயிருடன் இல்லை என்பதால், அவருடைய பெயரை வைத்து அரசியல் செய்ய தொடங்கிவிட்டனர். தன் தந்தை மனோகர் பாரிக்கர் மிகவும் நேர்மையானவர். அவர் பாதுகாப்பு அமைச்சராக இருந்த போது பல்வேறு முக்கிய முடிவுகளை எடுத்தார். அதில் ரபேல் ஒப்பந்தமும் அடங்கும்.

இந்நிலையில், கோவா மாநில மக்கள் விடுத்த அழைப்பின் பேரில் முதல்வராக அவர் பொறுப்பேற்றுக்கொண்டார். கடைசி மூச்சு வரை அவர் முதல்வர் பணியை சிறப்பாக செய்தார். சரத்பவாரின் இந்த குற்றச்சாட்டு கோவா மக்களை அவமதிப்பதிற்கு சமம் என உத்பால் பாரிக்கர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *