போஸ்டர் செய்தி

எந்த துறையிலும் தவறு நடக்கவில்லை: எடப்பாடி பழனிசாமி பேட்டி

சேலம், செப். 11–
எந்த துறையிலும் தவறு நடக்கவில்லை. வேண்டுமென்றே திட்டமிட்டு எதிர்க்கட்சிகள் குற்றச் சாட்டுகளை கூறுகிறார்கள் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (11–ந் தேதி), சேலம் விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

கேள்வி: மேகதாது அணை தொடர்பாக கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி நேற்று பிரதமரை சந்தித்திருக்கின்றார். ஒரு சுமூகமான பேச்சு வார்த்தையை தமிழகத்துடன் நடத்திக் கொடுங்கள் என்று கேட்டிருக்கின்றார். இதில் தமிழக அரசின் நிலைப்பாடு என்ன?

பதில்: ஏற்கனவே தமிழக அரசால் தெளிவாக குறிப்பிடப்பட்டுவிட்டது. உச்சநீதிமன்றத்திலும் தமிழக அரசினுடைய அனுமதி இல்லாமல் எந்த அணையும் கட்டக்கூடாது என்று தெளிவான தீர்ப்பு கூறப்பட்டிருக்கிறது. மேகதாதுவில் எக்காரணம் கொண்டும் அணை கட்டக்கூடாது என்பதுதான் தமிழக அரசின் நிலைப்பாடு. ஏனென்றால், கடுமையான வறட்சி ஏற்பட்டபொழுது, கர்நாடக அணைகளில் தண்ணீர் இருப்பு இருந்தும், குடிப்பதற்குக்கூட தண்ணீர் திறக்க அவர்கள் மறுத்துவிட்டார்கள். அந்த நிலையில், மேலும் ஒரு அணை கட்டப்பட்டால் தமிழகம் கடுமையாக பாதிக்கப்பட்டுவிடும்.

குற்றச்சாட்டு சொன்னால் குற்றவாளியா?

கேள்வி: பாலாறு அருகே அணைகள் கட்டப்பட்டு வருகிறதே?

பதில்: சட்ட ரீதியாக நாம் சந்திக்கிறோம்.

கேள்வி: கடந்த காலங்களில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, ஒரு அமைச்சரைப் பற்றி குற்றச்சாட்டோ அல்லது ஒரு அதிகாரியைப் பற்றி குற்றச்சாட்டோ இருந்தால், அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, அவர்களை உடனடியாக பதவி நீக்கம் செய்வார்கள். சி.பி.ஐ. விசாரணை செய்தும் இதுவரை அமைச்சர் விஜயபாஸ்கர் மீது நடவடிக்கை எடுக்காததற்குக் காரணம் என்ன?

பதில்: குற்றச்சாட்டு சொன்னவுடன் அவர் குற்றவாளியாகிவிட முடியாது. குற்றம் நிரூபிக்கப்பட்டால்தான் குற்றவாளியாகக் கருதப்படுவார்.

கேள்வி: குற்றச்சாட்டு வந்தவுடன் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நடவடிக்கை எடுத்தாரே?

பதில்: அப்படி ஒன்றும் எடுத்த மாதிரி தெரியவில்லை. நானும் அமைச்சரவையில்தானே இருக்கிறேன்.

தவறு நடக்கவில்லை

கேள்வி: அமைச்சர் வேலுமணி மீதும்……

பதில்: நான்தான் ஏற்கனவே சொல்லியிருக்கின்றேனே. இந்த ஆட்சி சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது, மக்களிடத்திலே செல்வாக்கு அதிகரித்துக் கொண்டிருக்கிறது. வேண்டுமென்றே திட்டமிட்டு, அதை பல்வேறு வழிகளிலே தடை செய்ய முற்பட்டார்கள், எதிலும் அவர்களால் சாதிக்க முடியவில்லை. ஆகவே, இப்படிப்பட்ட ஒரு வழியைப் பின்பற்றி ஒரு குற்றச்சாட்டை சுமத்திக் கொண்டிருக்கின்றார்கள், அது உண்மையல்ல. ஆகவே, அம்மாவினுடைய அரசு சட்ட ரீதியாக அனைத்தையும் செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. எந்தத் துறையிலும் தவறு நடந்துள்ளதாக எங்களுக்குப் புகார் வரவில்லை. அரசைப் பொறுத்தவரை சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. கடந்தகால தி.மு.க. ஆட்சியில் பல்வேறு குற்றச்சாட்டுகள் நிலவியிருந்தன. அவையெல்லாம் இனி வெளியிலே வரும்.

கேள்வி: திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலுக்கு இப்பொழுதே அண்ணா தி.மு.க. பணம் கொடுத்திருப்பதாக…

பதில்: பணம் கொடுத்தது என்பது தவறான செய்தி. ஒரு தேர்தலில் பணம் கொடுப்பதும் குற்றம், வாங்குவதும் குற்றம். அப்படிப்பட்ட நிலைமையில் எங்களுடைய கழகம் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

கேள்வி: வரப்போகும் பாராளுமன்றத் தேர்தலில் பாரதீய ஜனதா பெரும்பான்மை பெறுவோம் என்று அமித்ஷா சொல்லியிருக்கிறார்.

பதில்: அது அவர்களுடைய நிலைப்பாடு. தமிழகத்தைப் பற்றித்தான் பேசமுடியும். அகில இந்திய அளவில் நம்முடைய கட்சி இல்லை. தமிழகத்தைப் பொறுத்தவரைக்கும் அண்ணா தி.மு.க. பலம் பொருந்திய கட்சியாக இருந்து கொண்டிருக்கிறது. நிச்சயமாக, புரட்சித் தலைவி அம்மா கடந்த பாராளுமன்றத் தேர்தலில் 37 இடங்களில் தமிழகத்தில் வெற்றி பெற்றார். அந்த அளவிற்கு, இப்பொழுதும், கழகத்தினுடைய வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள்.

வெற்றி பெறுவோம்

கேள்வி: ஜெயலலிதா இல்லா சூழ்நிலையில் நீங்கள் முதல் தேர்தலை சந்திக்கப் போகின்றீர்கள், எதை முன்னிறுத்தி பிரச்சாரம் செய்வீர்கள்?

பதில்: புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித் தலைவி அம்மா, இருபெரும் தலைவர்கள் கொண்டு வந்த திட்டங்களை நாங்கள் நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றோம். தமிழகத்திலே இன்னும் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்படவிருக்கின்றன. அப்படிப்பட்ட திட்டங்களை எல்லாம் நிறைவேற்ற வேண்டுமென்று சொன்னால், மத்திய அரசினுடைய உதவி தேவை, நிதி தேவை. ஆகவே, யார் எங்களுக்கு நிதி உதவி செய்கின்றார்களோ, உதவி செய்கின்றார்களோ அவர்களுக்கு அம்மாவினுடைய அரசு நிச்சயம் துணை நிற்கும். அந்தவகையில் முன்னிறுத்தி எங்களுடைய செயல்பாடு இருக்கும். புரட்சித் தலைவி அம்மா கடந்த தேர்தலில் 37 இடங்களில் வெற்றி பெற்ற காரணத்தினால் தான், காவிரி நதிநீர் பிரச்சினை வருகின்றபொழுது, நம்முடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து 23 நாட்கள், நாடாளுமன்ற அவை செயல்பட முடியாத அளவிற்கு உருவாக்கினார். ஆகவே, பலம் பொருந்திய கட்சியாக இருந்த காரணத்தினாலே, அதிக எண்ணிக்கையிலே நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெற்றி பெற்ற காரணத்தினாலே, நம்முடைய கோரிக்கையை வலியுறுத்தி நாடாளுமன்றத்தை முடக்கச் செய்தோம். அதன் மூலமாக நமக்கு நல்ல தீர்ப்பு கிடைக்கப் பெற்றது.

கேள்வி: மதிப்புக் கூட்டு வரியை தமிழகம் குறைப்பதற்கான வாய்ப்பு இருக்கிறதா? ஏனென்றால் விலை உயர்ந்துகொண்டே செல்கிறது.

பதில்: அதை மத்திய அரசு தான் குறைக்க வேண்டும். மாநில அரசு எப்படி குறைக்க முடியும்? மத்திய அரசு தான் உயர்த்திக் கொண்டே போகிறது. மாநில அரசு உயர்த்தவில்லை. மாநிலத்தின் நிதிநிலை உங்களுக்கு நன்றாகத் தெரியும். ஒவ்வொரு துறையிலும் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்துக் கொண்டிருக்கின்றோம். தேவையான நிதி ஆதாரத்தைப் பெருக்குவதுதான் மாநில அரசினுடைய நிலை. அப்படி நிதி ஆதாரத்தைப் பெருக்கினால் தான் துறையில் இருக்கின்ற திட்டங்களை எல்லாம் நிறைவேற்ற முடியும். போக்குவரத்துக் கழகத்தில் எவ்வளவு இழப்பு ஏற்பட்டிருக்கிறது என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். அதையெல்லாம் சரி செய்ய வேண்டுமென்றால், அதற்குத் தேவையான நிதி தேவைப்படுகின்றது. இருந்தாலும், நீங்கள் வைக்கின்ற கோரிக்கைகளை எல்லாம் அரசு சிந்திக்கும்.

கேள்வி: பல்வேறு நிலைகளில் நீங்கள் மத்திய அரசோடு இணைந்து செயல்படுவதாக சொல்கிறீர்கள். ஆனால், தம்பித்துரை சி.பி.ஐ. ரெய்டுக்கு மத்திய அரசுதான் காரணம் என்கிறாரே?

பதில்: அது அவருடைய கருத்தாக இருக்கலாம், அரசாங்கத்தினுடைய கருத்தல்ல. அரசாங்கத்தைப் பொறுத்த வரைக்கும், மத்திய அரசோடு இணக்கமான உறவிருந்தால் தமிழகத்திற்குத் தேவையான திட்டங்களை செயல்படுத்த முடியும். தேவையான நிதியைப் பெற்று, போடப்பட்ட திட்டங்களை நிறைவேற்ற முடியும்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *