‘‘யார் யாரோ கிளம்பி தி.மு.க.வை அழித்துவிடலாம், ஒழித்துவிடலாம் என கனவு காண்கின்றனர்’’
சென்னை, நவ. 7–
‘‘இன்றைக்கு யார் யாரோ கிளம்பி தி.மு.க.வை அழித்துவிடலாம் ஒழித்து விடலாம் என்று கனவு காண்கிறார்கள், எந்த கொம்பனாலும் தி.மு.க.வை தொட்டுக் கூட பார்க்க முடியாது’’ என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதன் மூலம் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யை மறைமுகமாகத் தாக்கினார்.
‘‘சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடைபெற்ற செங்குன்றம் மிசா ஏழுமலை பேரனும், பாபு–கலைவாணி தம்பதியரின் மகனுமான திலீபன் பாபு மற்றும் செல்வகுமார் – பர்வதவர்த்தினி தம்பதியரின் மகள் கவுதமதி பிரபா ஆகியோர் திருமண விழாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையேற்று நடத்தி வைத்து, மணமக்களை வாழ்த்தினார். இதில் அமைச்சர் எஸ்.எம்.நாசர், அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த திருமண நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
நெருக்கடி நிலை காலத்தில் தி.மு.க.வில் தலைவர் முதல் தொண்டர்கள் வரை பலர் கொடுமைகள் அனுபவித்தனர். ஜனநாயகத்தை பாதுகாக்க எந்த தியாகத்துக்கும் தயாராக இருப்பவர்கள் தி.மு.க.வினர். அதனால் தான் இன்றைக்கும் கம்பீரமாக இருக்கிறார்கள்.
இன்றைக்கு யார் யாரோ கிளம்பி தி.மு.க.வை அழித்துவிடலாம் ஒழித்து விடலாம் என்று கனவு காண்கிறார்கள், எந்த கொம்பனாலும் இந்த இயக்கத்தை தொட்டுக் கூட பார்க்க முடியாது.
‘சாருக்கு’ எதிராக
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணிகளை எதிர்த்து அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டி, வழக்கு தொடர்ந்திருக்கிறோம். சட்ட போராட்டம் ஒருபுறம் நடந்தாலும், வாக்காளர் திருத்த பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன, அதை கவனிக்க வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது. இளம் தலைவர் ராகுல்காந்தி SIR-க்கு எதிராக பெரிய போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறார். கர்நாடகா, அரியானா பகுதிகளில் நடந்த வாக்குத் திருட்டை ஆதாரப்பூர்வமாக வெளியிட்டிருக்கிறார். அப்படி ஒரு நிலை தமிழ்நாட்டில் நடக்கவிடக் கூடாது. வரும் முன் காப்பது நமது கடமை.
11ம் தேதி ஆர்ப்பாட்டம்
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்திற்கு எதிராக 11ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் மதச்சார்பாற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கிறோம். வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் படிவங்களில் அளிக்கும் பெயர்கள் மட்டும் தான் வாக்காளர் பட்டியலில் இடம்பெறும் என்ற நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. தேர்தல் அதிகாரிகள் வரும் போது நாம் வீட்டில் இல்லாமல் போய்விட்டால் வாக்குகளை இழக்கும் சூழல் ஏற்படும். ஏழைகள், கிராமப்புற மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.
மணமக்கள் தங்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயரை சூட்ட வேண்டும்.
![]()





