…
அன்று மகளிர் தினம். ரொம்பவே பரபரப்பாக இருந்தது, எத்திராஜ் மகளிர் கல்லூரி.
“இன்னைக்கு யார் சிறப்பு விருந்தினர் ? “
‘‘திருமதி.சுடர்க்கொடி கண்ணன். கல்லூரி முதல்வர், பெரிய எழுத்தாளர். சமூக சீர்திருத்தவாதி. நம்ம கல்லூரியின் முன்னாள் மாணவி. பெண்கள் முன்னேற்றத்திற்காகப் போராடும் போராளி. அவங்களப் பத்தி உங்களுக்குத் தெரியாதா?”
“தெரியும் . ஆனா, சந்திச்சதில்ல. அவங்க பொண்ணு கூட இங்க தான் படிச்சிட்டு இருக்காங்கன்னு தெரியும்”.
“எஸ். அவங்க தான் இன்னைக்கு நம்ம எத்திராஜ் கல்லூரிக்கு சிறப்பு விருந்தினர்”
என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே, சுடர்க்கொடி கண்ணன் வந்து சேர்ந்தார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
“வணக்கம் அம்மா. நீங்க எங்க கல்லூரிக்கு வந்ததை ரொம்பப் பெருமையா நினைக்கிறோம்.”
“நன்றி.. நானும் இந்தக் கல்லூரிக்கு வந்தத மிக மிகப் பெருமையா நினைக்கிறேன் “
என்றார், சுடர்க்கொடி கண்ணன்.
மேடையில் இருந்த வரவேற்புப் பெண், சுடர்க்கொடி கண்ணனை மேடைக்கு அழைத்தார். மேடையேறியவருக்குச் சிறப்பு செய்யப்பட்டது.
“நம் கல்லூரியின் சிறப்பு விருந்தினர் திருமதி. சுடர்கொடி கண்ணன் அவர்கள் சிறப்புரை ஆற்றுவார் “என்று சொல்ல, ஒலிபெருக்கியின் முன்னால் சென்றார் சுடர்க் கொடி கண்ணன்
“எல்லாருக்கும் வணக்கம். இந்தக் கல்லூரிக்குச் சிறப்பு விருந்தினரா நான் வந்ததுக்கு ரொம்ப கொடுத்து வச்சிருக்கணும். காரணம் . பொருளாதாரத்தில மிகவும் பின் தங்கி இருந்த நான் இந்தக் கல்லூரியில படிச்சுதான் உயர்ந்த இடத்துக்கு வந்தேன். நான் மட்டுமல்ல. என் பொண்ணும் இப்ப இங்க தான் படிச்சிட்டு இருக்கா. நாம எல்லாம் இவ்வளவு தூரம் படிச்சு முன்னுக்கு வந்திருக்கோம்னா அதுக்குக் காரணம்வி.எல். எத்திராஜ் ஐயா தான். அவர் மட்டும் இந்தக் கல்லூரியை நிறுவ உதவி செய்யலன்னா இந்தக் கல்லூரி இங்க இல்ல. நாமளும் இங்க படிச்சிருக்க முடியாது. “
என்று அவர் பேசப் பேச மாணவர்கள் ரொம்ப உன்னிப்பாகக் கவனித்தார்கள்.
இந்தக் கல்லூரியில படிக்கிற நாம அவருடைய வாழ்க்கையப் பற்றித் தெரிஞ்சுக்கறது ரொம்ப முக்கியம். 1910- 1920ல பெரிய கிரிமினல் லாயரா இருந்தவர் தான் எத்திராஜ் அப்போதே ஒரு வழக்குக்கு 2500 ரூபாய் வாங்கி இருக்கிறார் . எப்பவும் குற்றவாளிகளாேட தொடர்பு உடையவர். லண்டன்ல படிச்சு பாரிஸ்டர் பட்டம் பெற்றவர். வேலூர்ல சாதாரணமான குடும்பத்தில பிறந்தவர் அப்பா கட்டிட மேஸ்திரி. லண்டன்ல படித்துக்கொண்டிருக்கும் போது, கேத்ரீன் அப்படிங்கிற ஒரு லண்டன் பொண்ணத் திருமணம் செஞ்சிட்டார். ‘‘அலைபாயுதே’’ திரைப்படம் மாதிரி, வேலூருக்கு வரும் போது, கல்யாணமான பொண்ண லண்டன்லயே விட்டுட்டு வந்திட்டார். வீட்டில் இருப்பவர்களுக்கு இவர் திருமணம் முடித்தது தெரியாது. அப்புறம் அது தெரிய வரும்போது, வீட்டுல பெரிய பிரச்சனை ஏற்பட்டு இருக்கு. அவருடைய சகோதரி என்னுடைய பொண்ணக் கல்யாணம் பண்ணாம லண்டன் பொண்ணக் கல்யாணம் பண்ணிட்டேன்னு சொல்லி எத்திராஜ் ஐயா மேல வழக்கு போட்டு இருக்காங்க. வாக்குறுதி மட்டும் தவறிப் போச்சு, மற்றபடி குற்றமில்லன்னு எத்திராஜ் ஐயாவுக்கு சாதகமா தீர்ப்பு வந்திருக்கு.
என்று சுடர்க் கொடி கண்ணன் பேச,
“என்ன நாம எத்திராஜ் கல்லூரியில படிக்கிறோம். இது எல்லாம் நமக்குத் தெரியலையே ? “
என்று மாணவிகள் முணுமுணுக்க தொடர்ந்து சிறப்பு விருந்தினரின் பேச்சைக் கேட்க ஆரம்பித்தார்கள்.
“எத்திராஜ் ஐயா, கார்கள் மேல ரொம்ப விருப்பமுள்ளவர் .rolls-roy கார்ல இருந்து எல்லா வகையான கார்லயும் ஆறு கார் வச்சு இருந்திருக்காரு. விமானத்தில் போறதுக்கு விருப்பப்பட மாட்டாராம். அவர் பீச் ரோட்ல கார் ஓட்டிட்டுப் போறத வேடிக்கை பார்க்கவே கூட்டம் கூடி நிப்பாங்களாம். ஒரு நாள், சேத்தன் அப்படிங்கிற ஒருத்தர் மெட்ராஸ்ல பெண்களுக்குக் கல்லூரி இல்ல. அவங்களுடைய முன்னேற்றத்திற்கு நாம ஏதாவது செய்யணும் அப்படின்னு சொல்லும்போது 10 லட்ச ரூபாய் நன்காெடையா கொடுத்து இருக்கிறாரு. அந்தப் பணத்தில 1948ல உருவானது தான், நம்ம எத்திராஜ் மகளிர் கல்லூரி”
என்று அவர் சொன்னபோது, மாணவிகளின் கை தட்டல் விண்ணை முட்டியது.
“இன்னைக்கு நம்ம மாதிரி சாதாரணமான மாணவிகள் படிச்சு முன்னுக்கு வாரதுக்கு காரணம் எத்திராஜ் ஐயா தான்.. எளிமையான மேற்கத்திய வாழ்க்கை வாழ்ந்தவர். வீட்டில் பட்லர் இருந்திருக்காங்க. அவர் கடைசியில இறக்கும்போது கூட இந்த கல்லூரிக்காக 50 லட்சம் ரூபாய் சொத்தை உயிலா எழுதி வைத்து இருக்கார். அவருடைய கனவின் அடையாளமா இந்தக் கல்லூரி இருக்கு. எளிமையான வாழ்க்கை வாழ்ந்தவர் வேப்பங்குச்சியில தான் பல் துலக்கி இருக்கிறார்.
இப்படிப்பட்டவரை அங்கீகரிக்கும் விதமா தான் தமிழ்நாடு அரசு எத்திராஜ் சாலைன்னு பேர் வச்சிருக்காங்க. தமிழகத்தில இந்தச் சாலை சென்னையில இருக்கிற முக்கியமான சாலை. இந்தச் சாலைக்கு முன்னால இருந்த பெயர் கமாண்டர் – இன் – சீப் சாலை அதாவது தலைமைச் சாலை ன்னு பெயர் இருந்தது. இப்படிப்பட்ட மாமனிதரின் பெயரில் உள்ள கல்லூரியில் படிப்பதை உயர்வாக எண்ணுங்கள் “
என்று சுடர்க்கொடி கண்ணன் பேசியபோது, அங்கு படித்துக் கொண்டிருந்த மாணவிகளுக்கு அப்போது தான் எத்திராஜ் அவர்களின் வாழ்க்கை தெரிந்தது.
” இவ்வளவு நாள் இந்தக் கல்லூரியில படிச்சிட்டு இருக்கோம். ஆனா, நம்ம கல்லூரி நிறுவனர் எத்திராஜ் ஐயாவுடைய வாழ்க்கை நமக்கு தெரியாம இருந்திருக்கே இது தப்பு “
என்று வருத்தப்பட்டனர். மாணவிகள். ” இப்பவாவது தெரிஞ்சதே சந்தோசம். சுடர்க் கொடி அம்மாவுக்கு ரொம்ப நன்றி” என்று பெருமிதப்பட்டனர்,
எத்திராஜ் சாலையில் உள்ள எத்திராஜ் கல்லூரியில், எத்திராஜைப் பற்றி இன்னும் பேசிக் கொண்டிருந்தார், திருமதி. சுடர்க்கொடி கண்ணன்.
![]()





