செய்திகள்

எத்தியோப்பியாவில் கடும் நிலச்சரிவு: 200-க்கும் மேற்பட்டோர் பலி

Makkal Kural Official

அடிஸ் அபாபா, ஜூலை 24-

ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவின் தெற்கு பகுதியில் நேற்று முன்தினம் கனமழை பெய்ததால், அங்கு ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி சுமார் 200-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர்.

இந்த சம்பவத்துக்கு பிறகு அங்கு குவிந்த மக்கள் நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்க முயற்சிகளை மேற்கொண்டனர். இதுவரை 148 ஆண்கள் மற்றும் 81 பெண்கள் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நிலச்சரிவில் இருந்து 5 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். கோபா மண்டலத்தில் கெஞ்சோ–ஷாச்சா பகுதியில் இந்த பேரிடர் சம்பவம் நடந்துள்ளது. இந்த இடம் அந்நாட்டின் தலைநகர் அடிஸ் அபாபாவில் இருந்து சுமார் 450 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

நிலச்சரிவு ஏற்பட்ட பிறகு சிக்கி இருந்தவர்களை மீட்க சென்றவர்கள் மீது 2வது முறையாக மண் சரிந்த காரணத்தால் அதில் சிக்கியவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிகிறது. சுமார் 500 வீடுகளுக்கு செஞ்சிலுவை சங்கம் நிவாரண உதவி பொருட்களை அனுப்பியுள்ளது. உணவு, மருந்து மற்றும் தண்ணீர் போன்றவை மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஆப்பிரிக்க கண்டத்தில் அதிக மக்கள் தொகை கொண்ட 2வது நாடாக எத்தியோப்பியா உள்ளது. மொத்தம் 120 மில்லியன் மக்கள் அங்கு வசிக்கின்றனர். வெள்ளம் மற்றும் வறட்சி என காலநிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்பட்டு வருகிறது. கடந்த மே மாதம் இந்த பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சுமார் 50 பேர் உயிரிழந்தனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *