செய்திகள்

எத்தனை மொழிகள், மதங்கள் இருந்தாலும் அவை நம்மைப் பிரித்து விடவில்லை: ஜனாதிபதி திரவுபதி முர்மு பெருமிதம்

புதுடெல்லி, ஜன. 26-

நம்மில் எத்தனையோ மதங்கள், மொழிகள் இருந்தாலும் அவை நம்மைப் பிரித்து விடவில்லை என ஜனாதிபதி திரவுபதி முர்மு பெருமிதத்துடன் கூறினார்.

நமது நாட்டின் 74-வது குடியரசு தினம் இன்று மிகுந்த உற்சாகத்துடனும், கோலாகலத்துடனும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஜனாதிபதி திரவுபதி முர்மு, நாட்டு மக்களுக்கு நேற்று இரவு 7 மணிக்கு உரை ஆற்றினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

நமது குடியரசு தினத்தை கொண்டாடுகிறபோது, நாம் சாதித்ததை ஒரே தேசமாக ஒன்றிணைந்து கொண்டாடுகிறோம். நமது அரசியலமைப்பு சட்டத்தின் வரைவுக்குழுவுக்கு தலைமை வகித்த டாக்டர் அம்பேத்கருக்கு இந்தியா எப்போதும் நன்றியுடன் இருக்கும். கடந்த ஆண்டு நமது நாடு உலகின் 5-வது பெரிய பொருளாதார நாடாக மாறியது. உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற தன்மைக்கு எதிராக இந்தியா இந்த சாதனையை படைத்தது. திறமையான தலைமை மற்றும் வலிமை வாய்ந்த போராட்டத்தின் உதவியுடன், நாம் மந்த நிலையில் இருந்து விரைவாக வெளியேறி, வளர்ச்சிப்பயணத்தை மீண்டும் தொடங்கினோம். நாம் அனைவரும் ஒன்று

உலக அரங்கில் இந்தியா ஏழையான, கல்வியறிவற்ற நாடு என்ற நிலையில் இருந்து தன்னம்பிக்கை கொண்ட நாடாக மாறி இருக்கிறது. நமது அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கியவர்களின் கூட்டு விவேகத்தின் வழிகாட்டுதல் இல்லாமல், இந்த முன்னேற்றம் நிகழ்ந்து இருக்காது. இந்திய விண்வெளி வீரர்கள் விண்வெளிக்கு செல்லும் ககன்யான் திட்டம் செயல்பாட்டில் இருக்கிறது. இது, இந்தியாவின் முதல் மனித விண்வெளி பயணம் ஆகும்.

நாம் அனைவரும் ஒன்று. நாம் அனைவரும் இந்தியர்கள். நம்மில் எத்தனையோ மதங்கள், மொழிகள் இருந்தாலும் அவை நம்மைப் பிரித்து விடவில்லை. எனவேதான் நாம் ஜனநாயக குடியரசாக வெற்றி பெற்றிருக்கிறோம். இதுதான் இந்தியாவின் சாராம்சம் ஆகும். இந்தியா மிக வேகமாக முன்னேறுகிற பொருளாதார நாடுகளில் ஒன்றாக விளங்குகிறது.

பெண்களுக்கு அதிகாரம் வழங்குதலும், பாலின சமத்துவமும் இனியும் வெற்று கோஷங்களாக இருக்க முடியாது. நாம் சமீப ஆண்டுகளில் இந்த லட்சியங்களை நோக்கி மாபெரும் முன்னேற்றத்தை அடைந்திருக்கிறோம். நாளைய இந்தியாவை வடிவமைப்பதில் நமது பெண்களின் பங்கு மகத்தானது என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை. ‘ஜி-20’ அமைப்புக்கு இந்தியா தலைமை ஏற்றிருப்பது, ஜனநாயகம் மற்றும் பன்முகத்தன்மையை மேம்படுத்துவதற்கான ஒரு வாய்ப்பு ஆகும்.

குடியரசு தினத்தையொட்டி, நமது எல்லையை காத்துக்கொண்டிருக்கிற, நாட்டுக்காக எந்தவொரு தியாகத்தையும் செய்வதற்கு தயாராக இருக்கிற நமது படை வீரர்களுக்கு எனது சிறப்பான பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன். நான் துணிச்சல் மிக்க நமது துணை ராணுவ படையினர், போலீஸ் படையினரையும் பாராட்டுகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *