பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மதக்கலவரம் ஏற்படும்; அரசியல் சட்டத்தை மாற்றுவார்கள்
விழுப்புரம், ஏப்.6-–
இடஒதுக்கீடு, சமூகநீதிக்கு எதிரான கட்சி பாரதீய ஜனதா, எத்தனை முறை படையெடுத்தாலும் மோடியால் தமிழ்நாட்டை கைப்பற்ற முடியாது என்றும் விழுப்புரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் இந்தியா கூட்டணி கட்சிகளின் சார்பில் விழுப்புரம், கடலூர் தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டு, இந்தியா கூட்டணியில் விழுப்புரம் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் போட்டியிடும் ரவிக்குமாருக்கு பானை சின்னத்திலும், கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் விஷ்ணுபிரசாத்திற்கு கை சின்னத்திலும் வாக்கு சேகரித்து, பேசினார். அப்போது அவர் பேசியதாவது:–-
இந்த தேர்தல் 2-வது விடுதலை போராட்டம். ஏன் என்றால் நாடு மிகப்பெரிய ஆபத்தில் சிக்கி இருக்கிறது. பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட பட்டியலின, பழங்குடியின, சிறுபான்மையின இட ஒதுக்கீட்டுக்கு ஆபத்து வந்துள்ளது.
நாட்டை நிர்வகிக்கும் ஒன்றிய அரசு செயலாளர்களில் 3 சதவீதம் கூட பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்கள் இல்லை. ஒன்றிய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் உள்ள பேராசிரியர், உதவி பேராசிரியர்கள் போன்ற பணிகளில் இதர பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடியின சமூகத்தை சேர்ந்தவர்கள் இட ஒதுக்கீடு முறையில் தேர்வாகுவது இல்லை. இதுபற்றி நீங்கள் சிந்திக்க வேண்டும்.
இடஒதுக்கீடு இருக்காது
இடஒதுக்கீட்டுக்கும், சமூக நீதிக்கும் முற்றிலும் எதிரான கட்சி பாரதீய ஜனதா. அவர்கள் மீண்டும் ஒருமுறை ஆட்சிக்கு வந்தால், இந்தியாவில் இடஒதுக்கீடு முறை இருக்காது. சமூக நீதிக்கு சவக்குழி தோண்டி விடுவார்கள்.
நமது மக்களை 100 ஆண்டுகள் பின்நோக்கி இழுத்து சென்றுவிடுவார்கள். இதற்காக தான் நாம் பாரதீய ஜனதாவை எதிர்க்கிறோம்.
இடஒதுக்கீடு கிடைக்க ஆண்டாண்டு காலமாக போராடுகிறோம். தி.மு.க. ஆட்சி சாமானிய மக்களுக்கான ஆட்சி.
பிற்படுத்தப்பட்டோர் 21 சதவீத இடஒதுக்கீட்டை 31 சதவீதமாகவும் ஆதிதிராவிடர் சமுதாயத்துக்கு 16 சதவீத இடஒதுக்கீட்டை 18 சதவீதமாகவும் உயர்த்தினார் கருணாநிதி. 3-வது முறை முதலமைச்சராக இருந்த போது, மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 20 சதவீதமும், பழங்குடியினருக்கு 1 சதவீத விழுக்காடும் வழங்கினார். இப்போது தமிழ்நாட்டில் 69 சதவீத இடஒதுக்கீடு இருக்க காரணமாக இருப்பவர் கருணாநிதி தான்.
மண்டல் கமிஷன் மூலம் ஒன்றியத்தில் இடஒதுக்கீடு வழங்கவும் காரணமானவர். இப்படி ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வில் ஒளியேற்றி, ஒட்டுமொத்த நாட்டுக்கும் சமூக நீதி பாதையை காட்டியவர் தான் கருணாநிதி.
நமது கோரிக்கையை காங்கிரஸ் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் ராகுல் காந்தி அறிவித்துள்ளார். இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்ததும், நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும். ஒன்றியத்தில் இடஒதுக்கீடு உச்ச வரம்பை 50 சதவீதம் என்பதை உயர்த்த சட்ட திருத்தம் செய்யப்படும்.
எஸ்.சி., எஸ்.டி. ஓ.பி.சி. பிரிவினருக்கான காலிப்பணியிடங்கள் ஓராண்டுக்குள் ஒதுக்கப்படும், இவர்களுக்கான கல்வி உதவித்தொகை 2 மடங்கு ஆக்கப்படும் என்று அறிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை, நமது நாட்டை படுகுழியில் தள்ளிய பாரதீய ஜனதாவிடம் இருந்து மீட்கும் தேர்தல் அறிக்கை. 100 ஆண்டுகள் பின்நோக்கி இழுத்து செல்ல பாரதீய ஜனதா தீட்டியுள்ள திட்டங்களுக்கு தடை போடும் தேர்தல் அறிக்கை.
இந்திய ஜனநாயகத்தை மீட்கும் தேர்தல், சர்வாதிகாரத்தை விரட்டியடிக்கும் தேர்தல். சமத்துவம், சகோதரத்துவம், நமது உயிர் மூச்சான சமூக நீதியை பாதுகாக்கிற தேர்தல் இது.
இந்தியாவை பாதுகாக்க…
சமூக நீதியை நிலைநாட்ட போராடும் நமக்கும், சமூக நீதியை இழைத்து வரும் பாரதீய ஜனதாவுக்கும் நடக்கும் தேர்தல். மொத்தத்தில் இந்தியாவை பாதுகாக்க இந்தியா கூட்டணியை உறுதியாக வெற்றிப்பெற செய்ய வேண்டிய தேர்தல்.
நமது நாட்டை மொழி, மதம், இனம், சாதி அடிப்படையில் பிளவுபடுத்தி, இடஒதுக்கீட்டை ரத்து செய்ய 10 ஆண்டுகாலத்தில் எல்லாவற்றையும் செய்தது பாரதீய ஜனதா அரசு.
தமிழகத்திற்கு ஒரு சிறப்பு திட்டம் கூட கொடுக்காமல் வஞ்சித்தது. சாதி வாரி கணக்கெடுப்பு கூடாது என்று சொல்லும் கட்சி பாரதீய ஜனதா. ஆனால் அங்கு பல்லாக்கு தூக்குவது டாக்டர் ராமதாஸ். தனது உயிர் என்று சொல்கிற சமூக நீதிக்கு பரம எதிரியான பாரதீய ஜனதாவுடன் கூட்டணி வைத்து, அவர்களை போற்றி புகழ்கிறார்.
சில நாட்களுக்கு முன்பு வரை என்ன சொன்னார். மோடி ஆட்சிக்கு எவ்வளவு மதிப்பெண் கொடுப்பீர்கள் என்று ஒரு பேட்டியில் ஒருவர் கேட்கிறார். அப்போது ராமதாஸ் சைபருக்கும் கீழ் ஒன்றும் இல்லை. இருந்தால் அதை தான் கொடுப்பேன் என்று பாரதீய ஜனதாவை கடுமையாக விமர்சித்தார். இப்போது அவர்களோடு கூட்டணி வைத்துள்ளார்.
இந்த சந்தர்ப்பவாத கூட்டணியின் ரகசியம் அவருக்கு மட்டும் தான் தெரியும் என்று நினைக்கிறார். அவரை விட உங்களுக்கு நன்றாக தெரியும்.
தி.மு.க.வுக்கு சமூக நீதி என்பது உயிர் மூச்சான கொள்கை. அதனால் தான் ஒரு கொள்கை கூட்டணி அமைத்து, வாக்கு கேட்க வந்துள்ளேன். அமைய உள்ள இந்த கூட்டணி அரசு, சமூக நீதி அரசாக இருக்கும்.
பிரதமர் வருவது ஏன்?
தமிழ்நாட்டில் வெள்ளம், புயல் வந்தபோது எட்டிப்பார்க்காத மோடி, நிவாரண நிதி கொடுக்க மனம் வராத மோடி, தேர்தலுக்காக 4 முறை தமிழகத்துக்கு வந்தார். இன்னும் 4 முறை வரப்போகிறாராம்.
தமிழ்நாட்டு மக்களுக்கு தமிழில் வணக்கம் சொன்னால் போதும், வேட்டி கட்டினால் போதும். இட்லி, பொங்கல் பிடிக்கும் என்று சொன்னால் போதும் என்று நினைக்கிறார்.
மக்கள் தங்களுக்கு தேவையான நேரத்தில் உதவி செய்பவர்களை தான் நினைத்து பார்ப்பார்கள். அவர்களை மதிக்கவில்லை என்றால் அவர்கள் மதிக்கமாட்டார்கள். மோடி மீண்டும், மீண்டும் எத்தனை முறை படையெடுத்து வந்தாலும், தமிழ்நாட்டை ஒருபோதும் பாரதீய ஜனதா கைப்பற்றவே முடியாது.
இது பெரியார் மண், அண்ணா மண், கருணாநிதி மண். தி.மு.க. இருக்கும் வரை உங்கள் எண்ணம் பலிக்கவே பலிக்காது. பாரதீய ஜனதா வீட்டுக்கும் கேடு, நாட்டுக்கும் கேடு. ப.சிதம்பரத்தின் ஒரு பேட்டியை பார்த்தேன், பாரதீய ஜனதாவுக்கு ஏன் வாக்களிக்க கூடாது என்பதற்கு அவர் கூறிய கருத்தை வழிமொழிந்து நான் கூடுதலாக சொல்ல விரும்புகிறேன்.
பாரதீய ஜனதாவுக்கு வாக்களித்தால் நாடெங்கும் மதக்கலவரம் உருவாகும். அரசியல் சட்டத்தை மாற்றுவார்கள். படிப்பதால் தான் உரிமையை கேட்கிறார்கள் என்று கல்வியை பறிப்பார்கள். மாநிலங்களின் உரிமைகளை பறித்து நகராட்சி போன்று நடத்துவார்கள். மக்கள் சின்ன பிரச்சினைக்கு கூட ஒன்றிய அரசை எதிர்பார்த்து நிற்க நேரிடும்.
ஒரே நாடு, ஒரே கலாசாரம், ஒரே உணவு, ஒரே அரசு, ஒரே கட்சி, ஒரே தலைவர் என்று ஒரே…ஒரே…என்று நாட்டை நாசமாக்கிவிடுவார்கள்.
தமிழ்நாட்டை வஞ்சித்த பாரதீய ஜனதா, அதற்கு துணை போகும் பா.ம.க., தமிழகத்தை பாழ்படுத்திய அண்ணா தி.மு.க. ஆகிய கட்சிகளை ஒரு சேர வீழ்த்துங்கள். உங்கள் வாக்கு இந்தியாவையும், தமிழ்நாட்டையும் காப்பாற்றும் வாக்காக அமையட்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.