சிறுகதை

எதைத் தேர்ந்தெடுப்பது? – ராஜா செல்லமுத்து

சமீப காலமாக தான் சார்ந்து இருந்த தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு மிகவும் துன்பப்பட்டுக் கொண்டிருந்தான் வேலன். இந்த வேலையை விட்டு விடுவதா? அல்லது தொடர்வதா ? என்ற போராட்டம் அவருக்குள் கடிகாரமுள்ள விட வேகமாக ஓடிக் கொண்டிருந்தது.

தொழிலில் ஏற்பட்ட நட்டத்தைச் சொன்னால் புலம்பல் என்பார்கள். சொல்லாமல் இருந்தால் கௌரவம் என்பார்கள். தொழிலில் ஏற்படும் சிக்கல்களைச் சிலரிடம் சொல்லிப் பார்த்தான். அவர்கள் செவி மடித்து கேட்டு விட்டு வேலன் இல்லாத சமயம் அவனைக் கேலி செய்து சிரித்தார்கள்.

இந்த மனிதர்கள் எல்லாம் முகத்துக்கு முகம் பேசும் போது முகவரியாக இருப்பேன் என்று சொல்வார்கள்.

முதுகுக்கு பின்னால் முள்ளைப் போல் குத்துவார்கள் என்று வேலனுக்குத் தெரிந்தது.

அவன் கஷ்டப்பட்டு கொண்டு இருக்கும் போது அவனைத் தூக்கி விடுவதற்கு கைகள் இல்லை. இன்னும் அதல பாதாளத்தில் தள்ளி விடுவதற்குத் தான் கால்கள் முன்னோக்கி வந்தன . அவன் நம்பிய மனிதர்கள் எல்லாம் அவன் முன்னால் சிரித்து பேசுவார்களே ஒழிய, அவனை உயர்த்துவதற்கு ஒரு படி கூட முயற்சி செய்யவில்லை .அதை அவன் ஒரு பொருட்டாகவும் எடுத்துக் கொள்ளவில்லை. அவனவன் குடும்பத்திற்கு அவனவன் செய்வான். நாம் யாரோ தானே ? இவர்களுக்கு நாம் உயர்ந்தால் என்ன ஆகப் போகிறது? அதனால் தான் எல்லோரிடமும் பற்றற்று இருந்தான்.

தொட்ட தொழிலை விட முடியாமல் போராடிக் கொண்டிருந்தான் வேலன்.

ஒரு நாள் , தன் வீட்டிலிருந்து பேருந்தில் ஏறுவதற்கு சென்று கொண்டிருந்தான். அவன் வீட்டிற்கும் பேருந்து நிலையத்திற்கும் சற்று தூரம் என்பதால் சில சந்தடிகளை விலக்கிவிட்டு முன்னேறினான்.

பிரதான சாலைக்கு வந்தபோது அவனுக்கு 100 அடிக்கு முன்னால் ஒரு பேருந்து சென்று கொண்டிருந்தது. இன்னும் சில வாகனங்கள் அதைப் பின் தொடர்ந்து சென்று கொண்டிருந்தன. இந்தப் பேருந்தை ஓடிப் போய் பிடிக்கலாமா ? இல்லை அடுத்த பேருந்தில் பயணம் செய்யலாமா? என்ற எண்ண அலைகள் அவனுள் வந்து வந்து போயின. அவன் நினைப்பதற்கு முன்னாலேயே அவன் பின்னால் இருந்து ஒருவன் கையில் பையுடன் விரையும் பேருந்து நோக்கி ஓடிக் கொண்டிருந்தான்.

அட நாம தான் கௌரவம் யாரும் பாப்பாங்க. அசிங்கம், அவமானம் பஸ் பிடிக்கிறதுக்கு ஓடுறான் அப்படின்னு நினைப்பார்கள்? என்று வெட்கப்பட்டு நடந்து போயிட்டு இருந்தோம். ஆனா அந்த பேருந்தில ஏறித்தான் ஆகணும் அப்படின்னு ஒரு மனுஷன் விடாம துரத்தி போயிட்டு இருக்கான். இதுதான் நம்பிக்கை என்று அந்தப் பேருந்து நோக்கி ஓடிக் கொண்டிருக்கும் மனிதனை கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டே நடந்து கொண்டிருந்தான் வேலன். அவன் பேருந்தை நோக்கி ஓடுவதை சாலையில் இருந்தவர்களும் பார்த்துக் கொண்டுதான் இருந்தார்கள். எப்படியும் அவன் பேருந்தைப் பிடித்து விடுவானா? இல்லை அவன் ஓட்டத்திற்கு நிற்காமல் பேருந்து ஓடிப் போய்விடுமா? என்ற குழப்பத்தில் அந்த மனிதன் ஓடுவதையே சாலை இருந்த சிலர் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

நாம் ஓடினாலும் நம்மையும் இப்படித்தான் இவர்கள் பார்த்துக் கொண்டிருப்பார்கள். ஒருவேளை அந்தப் பேருந்தை நாம் ஓடிப் பிடிக்க முடியவில்லை என்றால் நமக்கு அசிங்கம், அவமானம் அன்று தனக்குத்தானே நினைத்துக் கொண்ட வேலன், சரி அடுத்த பேருந்துக்கு போகலாம் என்று சாதாரணமாக நடந்து வந்து கொண்டிருந்தான்.

ஆனால் எப்படியும் அந்த பேருந்தில் ஏறி விட வேண்டும் என்ற முனைப்பில் ஓடிய அந்த மனிதன் அந்தப் பேருந்தில் ஏறிப் பயணப்பட்டான். இதுதான் மனித வாழ்க்கை. நாமளும் தோற்ற இடத்துல இருந்து அந்த மனுஷன் ஓடிப் போய் பேருந்தப் புடிச்சது மாதிரி வேகமாப் போயிருந்தா நம்ம தோல்வியக் கடந்து இந்நேரம் அத வெற்றியா மாத்திருக்கலாம். அந்த மனிதனுக்கு இருக்கக் கூடிய நெஞ்சுரம் நமக்கு இல்லையே ? ஏன் அந்தப் போராட்ட குணம் நமக்கு இல்லாமல் போச்சே என்று வருத்தப்பட்டுக் கொண்டே அவன் பேருந்து நிலையத்தை அடைந்து திரும்பிப் பார்த்தபோது, பட்டென்று இன்னொரு பேருந்து வந்து நின்றது.

இதுவும் ஒரு விதமான நம்பிக்கைதான். ஓடுற பேருந்த பிடிப்பதற்காக நாம ஓடி இருந்தோம்னா, அந்தப் பேருந்து கிடைக்காம போய் இருக்கலாம். இல்ல அந்தப் பேருந்தில ஏறி இருக்கலாம் .ஆனா எந்த முன்னேற்பாடும் இல்லாமல் நாம வந்து நிற்கிறோம், ஒரு பேருந்து நம்ம பின்னால வந்து நிக்குது. இதுவும் ஒரு விதமான அதிர்ஷ்டம். இப்போ நாம எதைத் தேர்ந்தெடுக்கிறது ?என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டே ஓடி அந்தப் பேருந்தில் ஏறி தான் செல்ல வேண்டிய இடத்திற்கான பயணச்சீட்டை வாங்கினான் வேலன்.

அவனுக்குள் இரண்டு விதமான கருத்துக்கள் ஓடிக் கொண்டிருந்தன. நமக்கு முன்னால் ஓடிக் கொண்டிருக்கும் ஒரு விஷயத்தை தேடி ஓடி தேடிப் பிடிப்பது ஒரு வகை . நாம் சாதாரணமாக இருந்து அந்த வாய்ப்பை நம்மை தேடி வருவதும் ஒரு வகை நாம் ஏறிய பேருந்து போல. இதில் எந்த வகையை நாம் தேர்ந்தெடுத்து நம் வாழ்க்கையை நகர்த்துவது? என்று பேருந்து சென்று கொண்டிருக்கும் போதே சிந்தனையை ஓட விட்டான் வேலன்.

அவன் மனதில் சாதாரணமாக இருந்து வாய்ப்பு வரும் அதில் பயணப்பட்டு ஜெயித்து விடலாம் என்பது மடத்தனமான விஷயம். நமக்கு முன்னால் சென்று கொண்டிருந்த பேருந்தை எட்டிப் பிடிப்பதற்காக ஓட்டம் எடுத்துச் சென்று அந்த பேருந்தில் ஏறி பயணப்பட்டானே அந்த மனிதன், அவனின் எண்ணம் தான் நமக்கு வேண்டும் . அப்போதுதான் இந்த போட்டியான உலகத்தில் ஜெயிக்க முடியும் என்ற எண்ணத்தை தன் மனதில் நங்கூரமாக விதைத்தான் வேலன்.

அவன் ஏறிய பேருந்து முன்னைவிட இப்போது சற்று வேகம் எடுத்திருந்தது.

முழுநம்பிக்கையுடன் வேலன் வெற்றிப்பயணத்தைத் தொடந்தான்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *