சிறுகதை

எதிர் வினை – ஜூனியர் தேஜ்

திருமணலூர். இயற்கை எழில் கொஞ்சும் கிராமம்.

“நாங்க ஆஸ்பத்திக்குப் போய் வரோம்!” என்று தாய் தந்தையரிடமும் குழந்தைகளிடமும் சொல்லிக் கொண்டு புறப்பட்டனர் கார்டியாலஜிஸ்ட் டாக்டர் இருள் – அவர் மனைவியும் ஃபார்மஸிஸ்டுமான சந்திரமதி இருவரும்.

***

பேரன் பேத்திகளுக்கு பாட்டி கேப்பைக் கூழ் ஊட்டிவிட, எதிரில் அமர்ந்து வில்லி பாரதம் கதை சொல்லிக் கொண்டிருந்தார் தாத்தா அமாவாசை. அனைவரும் அவர்களுக்குக் கையசைத்தனர்.

வழக்கப்படி கிராமத்து அழகை ரசித்துகொண்டே வந்து இருளப்ப சாமியைக் கை கூப்பிக் கும்பிட்டு விட்டு மருத்துவமனையை அடைந்தனர் டாக்டர் இருள் – சந்திரமதி இணையர்.

***

நெஞ்சு வலியால் துடித்த ராமநாதன், மூச்சு விடச் சிரமப்பட்டார். மயங்கி விழுந்தார்.

அக்கம் பக்கத்தார் பரபரத்தனர். அடுத்தடுத்து ஆக வேண்டியதை ஆலோசித்தனர்.

“திருமணலூர் கிராமத்துல பிரபல இருதய நோய் நிபுணர் மருத்துவர் இருள் வாராந்திர விசிட் இன்னிக்கு வந்திருப்பாரு.. அங்கே கொண்டு போயிடலாமே…!” என்ற ஏகோபித்த கருத்துக்கு யாரும் மாற்று கருத்து சொல்லவில்லை.

அருகாமை நாட்டு வைத்தியர் வந்து நாடி பிடித்துப் பார்த்துவிட்டு, “சீக்கிரம் ஆகட்டும்!” என்றார்.

வீரசோழனூர் கிராமத்திலிருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திருமணலூருக்குக் ஆட்டோவில் வைத்துக் கொண்டு போனார்கள்.

ஓட்டுக் கட்டடத்தில் இயங்கியது அந்த மருத்துவமனை.

நோயாளியை அவசரமாய் அட்மிட் செய்து முதலுதவிகள் துரிதகதியில் நடைபெற்றன.

“ரத்தக் குழாய்ல அடைப்பு இருக்கும்னு தோணுது; பைபாஸ் அறுவை சிகிச்சை செய்து ‘ஸ்டண்ட்’ வைக்க வேண்டியிருக்கலாம் …!” டைக்னோஸ் செய்து சொன்னார் டாக்டர் இருள்.

ராமநாதனின் வெளிநாடு வாழ் மகனுக்கு செய்தி பறந்தது.

செய்தி அறிந்ததும் மகன் மின்னஞ்சல் மூலம் அறுவை சிகிச்சைக்கு அனுமதிக் கடிதம் அனுப்பினார்.

முதலுதவிக்குப் பிறகு அடுத்தகட்டமாக மாநகரில் உள்ள ‘இருள் பல்நோக்கு மருத்துவமனை’க்கு ஆம்புலன்ஸில் பயணமானார் ராமநாதன்.

அறுவை சிகிச்சையின் போது போடப்படும் பச்சை நிற கவுன் அணிவித்து ராமநாதனை ஆபரேஷன் டேபிளில் கிடத்தினார்கள்.

***

மாநகரின் ‘இதய’ப் பகுதியில் இயங்கியது அந்தப் பல்நோக்கு மருத்துவமனை. பயாப்ஸி முதல், பைபாஸ் சர்ஜரி வரை செய்ய, அதி நவீன தொழில் நுட்பங்கள் நிறைந்த மருத்துவமனை அது.

நியாயமான கட்டணம் வசூலிப்பதாலும் கைராசி மருத்துவர் என்று பெயர் எடுத்து விட்டதாலும் நடுத்தர வர்க்க மற்றும் ஏழை நோயாளிகனின் கூட்டம் எப்போதும் ஈசலாய் குவியும் அங்கு.

***

சில ஆண்டுகளுக்கு முன்….

கழுவடையான், இருளப்பசாமி, மாடசாமி, நொண்டி வீரன்… என வரிசைக் கிரம மரபு மாறாமல் அதே சமயம் காலத்திற்கேற்ப புதுமையாகவும் கோலாகலமாகவும் படையல் முடிந்தது.

அந்த நேரத்தில் தான் -…

“………. இருள் பயலப் பாத்தா புத்திசாலியாத் தெரியுது. எதுக்குடா அவன இன்னும் பள்ளிக் கூடத்துல போடல.?.” என்று அமாவாசையிடம் அக்கரையோடு கேட்டார் திருவிழாவுக்கு குடும்பத்தோடு காரில் வந்திருந்த ஆபீசர் மாடசாமி.

“——————-“

“யே..அம்மாசி…!!,

என்னா !

நான் கேக்குறேன் கம்முன்னு இருந்தா எப்புடி..?”

“பதினோரு வயசுல கொண்டுபோயி ஒண்ணாப்புல உட்கார வெச்சா சரியா வருமாண்ணே…?”

“ஏன் ஒண்ணாப்பு…? நான் சொல்லுற படி செய்யி..!” என்று வழிமுறைகள் விளக்கினார் ஆபீசர் மாடசாமி.

***

ஆபீசர் மாடசாமி காட்டிய வழியில்…

ஓய்வு பெற்ற ஆசிரியர் சிவராமன் அய்யாவிடம் இருளுக்குத் தனிப்படிப்பு ‘பிரைவேட் ஸ்டடி’ போட்டு, திருமணலூர் அரசு நடுநிலைப் பள்ளிக்கூடத்தில் ஆறாம் வகுப்பில் சேர்த்தாகிவிட்டது.

முதல்நாள், வருகைப் பதிவு எடுத்த ஆசிரியர், “உன் பேரு அருளா..? இருளா..?” என்று வாய் கோணி நக்கலாகக் கேட்டபோது…

‘இருள்’ சார்..!” என உறுதி செய்தார்கள் மற்ற மாணவர்கள்.

முதல் நாள் மதிய உணவோடு பள்ளிக்கு வந்தனர் அப்பாவும் அம்மாவும். அம்மா சோறு ஊட்டும்போது அப்பாவிடம் இதுவரை கேட்காத ஒரு கேள்வியைக் கேட்டான்.

“ஏன்ப்பா எனக்கு ‘இருள்’ னு பேர் வெச்சீங்க..?”

“வெச்சோம். பிடிக்கலேன்னா மாத்திக்கிடலாம்..” என்றார் அப்பா.

“பேருல என்னலே இருக்கு; இருளப்பசாமிக்கு நேந்து வெச்சோம். பிடிக்கலேன்னா அப்பாரு சொல்றாப்புல பள்ளிக் கூடத்துல பெரிய சார் கிட்டே சொல்லி மாத்திக் கிட்டாப் போச்சு. உன் விருப்பம்தான் ராசா…!” என்றாள் தாய் மூக்காயி.

பெற்றோர்கள் கைநாட்டுதான் என்றாலும் அவர்களிடத்தில் இருந்த தெளிவு கண்ட இருள்:

“சும்மா தெரிஞ்சிக்கலாம்னுதான் கேட்டேன்..இந்தப் பேரே இருக்கட்டும்” என்று அந்த உரையாடலுக்கு முற்றுப் புள்ளி வைத்தான்.

***

“ஹ…! ஹ…! ஹ…! இருள்’னு ஒரு பேராடா…. ஹ…! ஹ…!”

“இருளாவது… வெளிச்சமாவது.. பேரைச் சொல்லுடா..”

“அருள்னு பேரா இருக்கும்…! இருள்னு எந்த அப்பன் ஆத்தாவும் பேரு வைக்க மாட்டாங்க…”

“செவத்த தோலுதானே உனக்கு, நிலா, சூரியன், ஒளி, கதிர்… இப்படி பேரு வைக்காம ஏன் இருள்…’னு…?.”

இப்படி அவன் பெயரை வைத்து ஆயிரமாயிரம் கேள்விகள், கருத்துகள், அபிப்ராயங்கள், எள்ளல்கள், கிண்டல்கள் ,கமெண்டுகள்…

ஒரே தடவையில் எவரும் அந்தப் பெயரை அங்கீகரித்ததாக அவன் வாழ்வில் சரித்திரமில்லை.

பள்ளிப் பருவத்தில் வட்ட அளவில்,குறுவட்ட அளவில் மாவட்ட அளவில் மாநில அளவில் பெற்ற பற்பல வெற்றிச் சான்றிதழ்களில் முக்கால்வாசி ‘அருள்’ என்று எழுதி பிறகு ‘அ’ லாகவமாக ‘இ’ ஆக்கப்பட்டு இருள் என மாற்றப்பட்டிருக்கும்.

பட்டிமன்ற, வழக்காடு மன்றத் தலைப்பைப்போல ‘அருளா…? இருளா…?’ என்ற கேள்வியை பள்ளி, கல்லூரி வாழ்க்கையில் சவாலாகச் சந்தித்தவர் டாக்டர் இருள்.

***

இது கருக்கல்ல …பல்லு விளக்கறதுக்கு முன்னே முழுங்கிடணும்…! சரியா…?”

“ம்…”

“சாப்பாட்டுக்கு பத்து நிமிசம் முன்ன இது…ம்…?”

“செரி…”

சோறு தின்னப்புறம் இது ரெண்டும்…”

“ம்…ம்…! ”

“இந்த மாத்திரை சப்பிச் சாப்பிடணும்…!”

“சரிம்மா…”

“ம்…சரி…! னு சொன்னா விட மாட்டேன். நீங்க ஒரு வாட்டி சொல்லுங்க…” என்றும் சரியாகச் சொல்லும்வரை திரும்பித் திரும்பிக் கேட்டு எந்த மாத்திரையை எப்போது, எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற விபரத்தை முழுவதுமாய் நோயாளிக்குக் கற்பித்துத்தான் அனுப்புவாள் டாக்டர் இருளின் மனைவி மருந்தாளுனர் சந்திரமதி.

அது மட்டுமில்லை.. மாத்திரைகள் விழுங்க வேண்டிய முறைகளை விளக்குவார்.

அதில் அன்பு அழகு அர்த்தம் ஆயிரம் இருக்கும்….

‘‘நாம் விழுங்கும் மாத்திரைகளில் அடங்கியுள்ள சத்தையோ சக்தியையோ உடல் முழுவதும் எடுத்துச் செல்ல முக்கியமானது தண்ணீர்தான்.

காபி, டீ யுடன் மாத்திரை மருந்துகள் எடுத்துக் கொள்வது முற்றிலும் தவறு. அவ்வாறு எடுத்தால் மாத்திரை மருந்தின் தன்மையை அது முற்றிலும் கெடுத்துவிடும். மருந்து சாப்பிடுதலின் நோக்கமே கெட்டுவிடும்.

சாதாரணமாக வீரியம் அதிகம் கொண்ட மாத்திரைகள், கேப்ஸ்யூல்களை, ஆரவைத்த தண்ணீர் குடித்துத்தான் விழுங்க வேண்டும்.

வைட்டமின் டி , கால்சியம் போன்ற மாத்திரைகளை பால் அருந்தி உட்கொள்வதில் தவறில்லை.

கேப்ஸ்யூலை சூடான தண்ணீர் ஊற்றி விழுங்குவதை தவிர்க்க வேண்டும். காரணம் நாக்கில் ஒட்டிக்கொண்டுவிடும் அபாயம் அதில் உண்டு.

பாரசிட்டமால் போன்ற காய்சல் மாத்திரைகளை உள்கொள்ளும் போது வெதுவெதுப்பான நீரைப் பயன்படுத்தலே சிறந்தது. காரணம் சீக்கிரம் கரையும்.

தொண்டை வலி, இருமல் இவற்றிற்காகப் போடும் மாத்திரை மருந்துகளை ஓரளவு சூடான தண்ணீரில் போட்டுக் கொள்ளலாம். விரைவில் கரைவதோடு தொண்டைக்கும் இதமாக இருக்கும்.

ஒரே ஒரு வாய் தண்ணீர் ஊற்றிக் கொண்டு மாத்திரை விழுங்கியதாகப் பேர் பண்ணவே கூடாது. அப்படிச் செய்தால் வயிறு எரிச்சல், வாயுக் கோளாறு, அஜீரணக் கோளாறு ஏற்படும்.

மாத்திரை விழுங்கிய பின் போதுமான அளவு நீர் அருந்த வேண்டும். அப்போதுதான் மாத்திரை வயிற்றுப் பகுதியில் சென்று கரைந்து அதன் வேலையைத் திறம்படச் செய்யும்.

ஆகாரம் சாப்பிட்ட கையோடு ‘ஒரு காரியம் ஆச்சு..!’ மாத்திரை போட்டுக் கொள்ளும் பழக்கமும் சரியல்ல. உணவு உண்டபின் குறைந்த பட்சம் 15 நிமிடங்களாவது கழித்துத்தான் மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

பொதுவாக அதிக சூடும் இன்றி, அதிக ஜில்லிப்பும் இன்றி மிதமான வெதவெதப்பான நீரில் மாத்திரை விழுங்குவது சாலச் சிறந்தது.

ஏதோ மாத்திரை மருந்து வித்தோமா கல்லா கட்டினோமா என்றில்லாமலும் லாப நோக்கில்லாமலும் மருத்துவமனையோடு இணைந்த மருந்துக் கடையில் வாடிக்கையாளர்கள், சந்திரமதியின் கையால் மருந்து வாங்குவதையும் அறிவுரை கேட்பதையும் பெரிதும் விரும்புவார்கள். எத்தனை பேர் வந்தாலும் சிரித்த முகம் மாறாமல் ஒவ்வொருவருக்கும் விளக்கமாய்ச் சொல்லி சந்தோஷமாய் அனுப்பி வைப்பாள் அவள்.

கடையில் மட்டுமில்லை; அருகாமை வீட்டுக்காரர்களும் இவளிடம் மருந்து, சிகிச்சை பற்றியெல்லாம் ஆலோசனை கேட்பார்கள்.

பிரபல இதய நோய் நிபுணரின் மனைவி என்கிற இருமாப்பு சிறிதும் இல்லாமல் பொறுப்புடனும் பொறுமையுடனும் பதில் சொல்வதில் அவளுக்கு நிகர் அவள்தான்.

***

“அய்யா…”, ஆபரேஷன் டேபிளில் கண்மூடிய நிலையில் படுத்திருந்த ராமனாதனை மெதுவாக அழைத்தார் டாக்டர் இருள்.

ஏதேதோ யோசனைகளில் இருந்த ராமநாதன் டாக்டர் குரல் கேட்டு கண் திறந்தார். அனிச்சையாய் கை கூப்பினார்.

மயக்கமருந்து தயாராகும் வரை ராமநாதனிடம் பேச்சு கொடுத்தார் டாக்டர் இருள்.

“எப்படி இருக்கீங்க..?”

“நல்லாருக்கேன் டாக்டர்.”

“உங்களுக்கு ஒரே மகனா?”

“ஆமாம் டாக்டர்.?”

“தம்பி படிச்சதெல்லாம்…?”

“ஆரம்பக் கல்விலேர்ந்து ஊட்டி கான்வென்ட்ல படிக்க வெச்சேன்.”

“.ஓ! ………………..”

“அது மட்டுமில்லை..? வீட்டுக்கு வந்தா படிப்பு கெட்டுப் போகும்னு கோடை லீவுல கூட ஹாஸ்டல்லயே தங்க வெச்சி இந்தி, அபாகஸ் னு கோர்ஸ்ல சேர்த்து பல துறைகளிலும் அறிவாளி யாக்கினேன் அவனை..?”

“.ஓ..! அப்படிங்களா..?…………..”

“ஏகப்பட்ட பணத்தைக் கொட்டி படிக்க வெச்சேன்.. டாக்டர்..அவனை.”

“பணத்தைக் கொட்டி” என்ற வார்த்தைகளைக் கேட்டதும்

‘..நான் ரொம்ப பிஸி ! என்னால நேர்ல வரமுடியாது. நீங்க கேக்கற பணத்தை அனுப்பறேன், செலவு பத்திப் பார்க்காம அப்பாவுக்கு என்ன வைத்தியம் தேவையோ செய்யுங்க டாக்டர்’, என்றானே இவர் மகன்.!

‘இது தான் வினைக்கேற்ற எதிர்வினையோ…?’ டாக்டர் இருள் எண்ணிப் பார்த்தார்.

“டாக்டர், உங்களை நினைச்சா ரொம்பப் பெருமையா இருக்கு.” என்றார் ராமநாதன்.

“ஏன்..?”

மாநகரத்துல புகழ்பெற்ற டாக்டரான நீங்க, வாரம் தவறாம கிராமத்துக்கு வந்து மருத்துவத் தொண்டு செய்யறீங்களே..!

“சார் நானும் என் மனைவி குழந்தைகளோட வாரா வாரம் கிராமத்துக்கு வர்றது எங்க சந்தோஷத்துக்காவும் என் பேரண்ட்ஸ் சந்தோஷத்துக்காகவும் கிராமத்து இயற்கைக் காத்து வாங்கியபடியே, தாத்தா பாட்டி கையால கதை கேட்டபடியே சாப்பிட்டு குதூகலிக்கற குழந்தைகளோட சந்தோஷத்துக்காகவும்தான். அப்படியே மருத்துவத் தொண்டும் செய்யறேன். அவ்வளவுதான்.” என்றார் டாக்டர்.

டாக்டர் இருள் வார்த்தைகள் அருள் வார்த்தைகள் போல ராமநாதன் இதயத்தை இலேசாக்கியது.

Leave a Reply

Your email address will not be published.