சிறுகதை

எதிர்பாராதது – டாக்டர் கரூர். அ. செல்வராஜ்

கொரோனா நோய் குறையத் தொடங்கியதன் காரணமாக திறக்கப்பட்ட பள்ளிக்கு மாணவர்கள் வருகை தந்திருந்தனர்.

காலை வேளையின் முதல் பாட வேளை. வகுப்பு ஆசிரியர் வருகை தந்து மாணவர்களை வரவேற்று இனிப்பு வழங்கி வருகைப் பதிவு செய்தார்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்தித்த மாணவர்களை நலம் விசாரித்த பின்பு மாணவர்களிடம் பேச தொடங்கினார் ஆசிரியர் விஜயகுமார்.

“மாணவர்களே! இப்பொழுது நீங்கள் எல்லாம் 9ஆம் வகுப்பு படிக்கிறீங்க. கொரோனா காலத்திலே உங்களுக்குப் பல அனுபவங்கள் கிடைச்சிருக்கும். கொரோனா காலத்தில் நீங்க ஏதாவது நல்ல செயலும் செய்திருக்கலாம். அதன் அடிப்படையிலே உங்களுக்கு ஒரு கட்டுரைப் போட்டி நடத்தப் போறேன். கட்டுரைப் போட்டியின் தலைப்பு “கொரோனா காலத்தில் எனது நற்செயல்”. இந்த தலைப்பிலே ½ மணி நேரத்துக்குள் ஒரு பக்க கட்டுரை எழுதணும். வாங்கிக்க கட்டுரை எழுதுவதற்கான பேப்பர் ” என்று சொல்லி ஆளுக்கு ஒரு பேப்பர் தந்தார்.

கட்டுரை எழுதப் பேப்பரை வாங்கிய ஒரு மாணவன், தன் வகுப்பு ஆசிரியரிடம் ‘‘சார்! முன் அறிவிப்பு எதுவும் தராத கட்டுரைப் போட்டியை எப்படி எழுத முடியும்?’’ என்று கேள்வி கேட்டான்.

கேள்வி கேட்ட மாணவனைப் பார்த்த வகுப்பு ஆசிரியர் “தம்பி! முடியாதது எதுவுமில்லை. முடியும் என்று நினைச்சுக்கிட்டு முயற்சி செய்” என்று ஊக்கம் தந்தார்.

வகுப்பு ஆசிரியரிடம் பேப்பரை வாங்கிய மாணவர்கள் அமர்ந்தனர். கட்டுரையை எழுதத் தொடங்கிய மாணவர்கள் அனைவரும் தங்களுக்கு தரப்பட்ட ½ மணி நேர கால அவகாசத்தில் எழுதி முடித்து வகுப்பு ஆசிரியரிடம் தந்தனர்.

மாணவர்களிடமிருந்து கட்டுரைகளை வாங்கிய வகுப்பு ஆசிரியர் “மாணவர்களே! முன் அறிவிப்பில்லாத கட்டுரைப் போட்டியில் கலந்துகிட்ட உங்களைப் பாராட்டுகிறேன். கட்டுரைப் போட்டியில் பரிசு பெற்றவர்கள் விவரம் மாலை 3 மணிக்கு தெரிவிக்கிறேன்” என்று சொல்லிவிட்டு ஆசிரியர்கள் அறைக்குச் சென்றார்.

ஆசிரியர்கள் அறைக்கு வந்த விஜயகுமார் தனது வகுப்பு மாணவர்கள் எழுதி தந்த கட்டுரைகளை எடுத்து ஒவ்வொரு கட்டுரையாக பொறுமையாகப் படிக்கத் தொடங்கினார்.

கட்டுரை எழுதிய மாணவர்களில் ஒருவன் கொரோனா காலத்தில் வீட்டு வேலைகளில் தன் அம்மாவுக்கு உதவி செய்ததாக எழுதியிருந்தான். இன்னொரு மாணவன் தன் தாத்தாவுக்கு நாள்தோறும் காலை நேரத்தில் செய்தித்தாள் வாசித்து காட்டியதாகவும் மாலை நேரத்தில் நடை பயிற்சிக்கு அழைத்துச் சென்றதையும் எழுதியிருந்தான். கட்டுரை எழுதிய மாணவி ஒருத்தி கொரோனா காலத்தில் தனது அம்மாவுக்கு நாள்தோறும் சமையல் செய்வதில் உதவியாகவும் வீட்டில் இருந்த தையல் மெஷின் மூலம் தையலின் அடிப்படை பாடத்தை கற்றுக் கொண்டதாகவும் எழுதியிருந்தாள்.

வகுப்பு மாணவர்களின் கொரோனா கால அனுபவங்களைப் படித்துக் கொண்டிருந்த ஆசிரியருக்குப் பெரும்பாலான கட்டுரைகள் சாதாரணமாக தெரிந்தன. கட்டுரைகளைப் படிப்பதே தொடர்ந்த போது அதில் முதல் பரிசு பெறுவதற்குத் தகுதியான கட்டுரை எது? என்பதை தெரிந்து கொள்வதற்காக மேலும் தீவிர கவனம் செலுத்தினார்.

கட்டுரைகள் அனைத்தையும் கவனமாகப் படித்து முடித்த போது தன் மனதுக்கு மிக மிகப் பிடித்தமான 3 கட்டுரைகளைத் தேர்வு செய்தார். அதில் முதல் பரிசு பெறுவதற்குத் தகுதியான கட்டுரையை மீண்டும் ஒருமுறை படித்து இறுதி முடிவு செய்தார்.

மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு வகுப்பாசிரியர் விஜயகுமார் கட்டுரைப் போட்டியில் முதலாவது, 2 வது மற்றும் 3 வது பரிசு பெறுவோரின் பெயர்ப் பட்டியலைத் தயார் செய்தார்.

மாலை 3 மணிக்கு ஆசிரியர் விஜயகுமார் தனது வகுப்புக்குச் சென்றார். கட்டுரைப் போட்டியின் முடிவுகளை அறிவிக்கும் முன்பு போட்டியில் பங்கேற்ற 21 மாணவ மாணவிகளைப் பாராட்டினார். போட்டிகளில் பரிசு பெறுவதை விட சிறந்தது பங்கேற்பது தான் என்று சொல்லிப் போட்டிகளில் மிகவும் ஆர்வத்தோடு பங்கேற்ற அனைத்து மாணவ மாணவிகளுக்கும் ஊக்கப் பரிசாக 10 ரூபாய் மதிப்புள்ள பேனாவை வழங்கினார். அதைத் தொடர்ந்து வெற்றி பெற்றவர்களை அறிவித்தார்.

3 வது பரிசு பெற்ற மாணவனின் பெயரை முதலில் அறிவித்து அந்த மாணவனுக்கு 100 ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கிப் பாராட்டினார். 2 வது பரிசு பெற்ற மாணவனின் பெயரை அறிவித்து அந்த மாணவனுக்கு 200 ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கிப் பாராட்டினார்.

முதல் பரிசு பெற்ற மாணவனின் பெயரை அறிவிக்கும் முன்பு ஆசிரியர் விஜயகுமார் மாணவர்களிடம் பேசினார்.

“மாணவர்களே! முதல் பரிசு பெறும் மாணவன் யார்? என்பதை உங்களுக்கு அறிவிக்கும் முன்பு அந்த மாணவன் எழுதிய கட்டுரையின் முக்கியமான பகுதிகளின் சுருக்கத்தை வாசிக்கிறேன் கேளுங்கள்.

“ஐயா! கொரோனா காலத்தில் என் வீட்டிலும் எனது தெருவில் வசிக்கும் 10 வீடுகளில் தினமும் சேரும் குப்பைகளை மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் என்று தரம் பிரித்துச் சேகரித்து மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களிடம் கொடுத்தேன். எனது தந்தையின் உதவியோடு ஏழை மக்களுக்கு ஒருமுகக்கவசங்களும் கைகழுவ சோப்புகளையும் கொடுத்தேன். பள்ளிக் கூடம் சென்று படிக்க முடியாத தொடக்கப் பள்ளி குழந்தைகளுக்கு காலை நேரத்தில் தினமும் 1 மணி நேரம் பாடங்களைக் கற்றுக் கொடுத்தேன். கொரோனா காலத்தில் நடைபெற்ற நெருங்கிய உறவினர்களின் இல்லத் திருமணத்தில் கலந்து கொண்டவர்களுக்கு மரக்கன்று தந்தேன். வீட்டு வேலைகளில் அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி ஆகியோருக்கு என்னால் இயன்ற உதவிகளைச் செய்தேன் ” என்று படித்து முடித்த ஆசிரியர் முதல் பரிசு பெறும் மாணவன் தமிழ்ச்செல்வன் என்று அறிவித்து அந்த மாணவனுக்கு 500 ரூபாய் ரொக்கப் பரிசு தந்து கை குலுக்கி பாராட்டுத் தெரிவித்தார்.

எதிர்பாராத நிலையில் கட்டுரைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற மாணவன் தமிழ்ச்செல்வன் என்று அறிந்ததும் மாணவர்கள் தமிழ்ச்செல்வன் ஒரு மாற்றுத்திறனாளி. போலியோவின் பாதிப்பால் நன்றாக நடக்க இயலாதவன் என்பதை நினைத்த போது அவனைப் போல நாம் சமூக சேவை செய்ய முடியவில்லையே என்று மனம் வருந்தினார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *