செய்திகள்

எதிர்க்கட்சி துணைத் தலைவர் விவகாரம்: எடப்பாடி பழனிசாமி, எம்.எல்.ஏ.க்கள், சட்டசபையிலிருந்து வெளியேற்றம்

அண்ணா தி.மு.க.வினர் அமளி

ஒரு நாள் மட்டும் பங்கேற்க தடை

சென்னை, அக். 18–

தமிழக சட்டசபையின் எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமார் நியமனத்தை அங்கீகரிக்க கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பு ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் சட்டசபையில் முழக்கங்களை எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவர்கள் சபையிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

அண்ணா தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் காலை 9.25 மணிக்கு சட்டசபை வளாகத்துக்கு வந்தனர். எடப்பாடி பழனிசாமி அவரது அறையில் அமர்ந்து இருக்க மற்ற அண்ணா தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சட்டசபை வளாகத்தில் சபாநாயகர் அப்பாவுவை சந்தித்தனர். அப்போது எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஓ.பன்னீர்செல்வத்துக்கு பதிலாக ஆர்.பி. உதயகுமாரை நியமிக்க கோரியதை அங்கீகரிக்க வலியுறுத்தினர்.

அப்போது எதிர்க்கட்சி துணைத் தலைவர் யார் என்பதை சட்டசபையில் அறிவிப்பதாக எடப்பாடி பழனிசாமி தரப்பு எம்.எல்.ஏ.விடம் சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.

அருகருகே

எடப்பாடி, ஓ.பி.எஸ்.

இதைத்தொடர்ந்து சபாநாயகர் சொன்ன விஷயத்தை எடப்பாடி பழனிசாமியிடம் சென்று அண்ணா தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தெரிவித்தனர். அதன் பிறகு அவர் உள்பட அனைத்து அண்ணா தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும் சட்டசபைக்குள் வந்தார்கள்.

அருகருகே எடப்பாடி, ஓ.பி.எஸ்.

அதற்கு முன்னதாகவே சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரான ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், அய்யப்பன் ஆகிய 4 பேரும் சபையில் அமர்ந்திருந்தனர். சபை தொடங்கும் சமயத்தில் எடப்பாடி பழனிசாமி வேகமாக வந்து ஓ.பன்னீர்செல்வத்தின் அருகே தனது இருக்கையில் அமர்ந்தார். இருவரும் பரஸ்பர வணக்கம் கூட தெரிவிக்கவில்லை. அருகருகே அமர்ந்திருந்தாலும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளவில்லை. அவர்களுக்கு எதிரே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர்கள், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அமர்ந்திருந்தனர்.

10 மணிக்கு சபாநாயகர் அப்பாவு வந்ததும் 2வது நாளாக சபை நடவடிக்கைகள் தொடங்கின.

எடப்பாடி கேள்வி

முதல் நிகழ்ச்சியாக கேள்வி நேரம் எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த சமயத்தில் எல்லோரும் அமர்ந்திருக்க எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி எழுந்து இருக்கை விவகாரம் தொடர்பாக நாங்கள் கொடுத்த கடிதத்தின் மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கேள்வி கேட்டார்.

உடனே சபாநாயகர், நான் இப்போது கேள்வி நேரத்துக்கு அனுமதித்துள்ளேன். எனவே உட்காருங்கள். கேள்வி நேரம் முடிந்ததும் உங்களுக்கு பேச வாய்ப்பு தருகிறேன் என்றார்.

ஆனால் எடப்பாடி பழனிசாமி தான் சொன்ன கருத்தை சபாநாயகரிடம் மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார். அப்போது எடப்பாடி பழனிசாமிக்கு மைக் இணைப்பு கொடுக்கப்படாததால் அண்ணா தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் எல்லோரும் எழுந்து நின்றனர்.

எடப்பாடி பழனிசாமிக்கு மைக் இணைப்பு கொடுங்கள் என்று உரத்த குரலில் தெரிவித்தனர். ஆனால் மைக் இணைப்பு கொடுக்கப்படவில்லை. தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி தான் சொன்ன கருத்தை திரும்ப திரும்ப வலியுறுத்தி பேசினார்.

அப்போது அமைச்சர் துரைமுருகன் குறுக்கிட்டு. ‘சட்டசபையில் கேள்வி நேரம் என்பது மிக முக்கியமானது. சபாநாயகர் கேள்வி நேரத்தை அனுமதித்த பிறகு நீங்கள் இப்படி பேசுவது முறையல்ல’ என்றார்.

அமளி

ஆனாலும் அண்ணா தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சட்டசபையில் எழுந்து நின்று சபாநாயகருக்கு எதிராக முழக்கம் எழுப்ப தொடங்கினார்கள். இதனால் சட்டசபையில் அமளி ஏற்பட்டது. அமளிக்கு இடையே சபாநாயகர் அனைவரிடமும் உட்காரும் படி கூறினார். எந்த பிரச்சினையாக இருந்தாலும் அதற்கு பதில் சொல்ல தயாராக இருக்கிறேன். ஆனால் கேள்வி நேரத்தின் போது சமரசம் செய்துகொள்ள மாட்டேன். கேள்வி நேரத்துக்கு பிறகு உங்கள் பிரச்சினையை சொல்லுங்கள் பதில் சொல்கிறேன்’ என்றார்.

ஆனாலும் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து நின்றுகொண்டே பேசினார்.

அப்போது மீண்டும் சபாநாயகர் அப்பாவு எழுந்து, “நீங்கள் பேசும் எதுவும் அவைக் குறிப்பில் பதிவு செய்யப்படாது. நீங்கள் முதலமைச்சராக இருந்திருக்கிறீர்கள். உங்களுக்கு தெரியாதது அல்ல. சட்டசபை விதி என்ன சொல்கிறதோ அதைத்தான் செய்வேன். ஆனால் நான் சொல்வதை நீங்கள் கேட்பதாக தெரியவில்லை. நீங்கள் களங்கம் விளைவிக்க இங்கு வந்தீர்களா? உங்கள் நடவடிக்கை அப்படித்தான் தெரிகிறது. ஏற்கனவே 1988ம் ஆண்டு ஜானகி அம்மாள் பதவி பிரமாணத்தின் போதும் இதேபோல் தான் செய்தீர்கள். எனவே சபை அமைதியாக நடைபெற ஒத்துழையுங்கள். பிரச்சினை செய்யாதீர்கள், நான் உங்களுக்கு பேசுவதற்கு நேரம் கொடுக்கிறேன். கேள்வி நேரம் முடிந்ததும் எதிர்க்கட்சி துணைத்தலைவர் விவகாரம் குறித்து விளக்கம் அளிக்கிறேன்என்றார்.

ஆனாலும் எடப்பாடி பழனிசாமி அவரது இருக்கையில் அமராமல் நின்று கொண்டே பேசினார்.

மீண்டும் சபாநாயகர் எழுந்து, சபையின் மாண்பை குலைக்க அனுமதிக்க மாட்டேன். மக்கள் பிரச்சினையை பற்றி பேசத்தான் இந்த அவை. ஆனால் மக்கள் பிரச்சினை பற்றி பேச நீங்கள் தடையாக இருக்கிறீர்கள். பேரவை விதி 22ல் என்ன சொல்லப்பட்டுள்ளது என்றால் முதல் ஒரு மணிநேரம் கேள்வி நேரம் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று உள்ளது. நீங்கள் கொண்டு வந்த விதியை நீங்களே மீறலாமா? மக்கள் பிரச்சினைக்கு முக்கியத்துவம் கொடுங்கள்’ என்றார்.

ஆனால் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி தரப்பு ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் அமளியில் ஈடுபட்டனர்.

துரைமுருகன் குற்றச்சாட்டு

அமைச்சர் துரைமுருகன்:- சபாநாயகர் எவ்வளவோ சொல்லியும் அண்ணா தி.மு.க. உறுப்பினர்கள் கேட்கவில்லை. சட்ட சபையில் இன்று ஜெயலலிதா மரணம் தொடர்பான நீதிபதி ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை, தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பந்தமான அறிக்கை, இந்தி எதிர்ப்பு தீர்மானம் ஆகியவை தாக்கல் செய்யப்படுகிறது. எனவே இதை தவிர்ப்பதற்காக நீங்கள் சபையில் அமளி ஏற்படுத்துவதாக தெரிகிறது. இதை சபாநாயகர் அனுமதிக்க கூடாது’ என்றார்.

தர்ணா

அப்போது அண்ணா தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கோஷமிட்டபடி சபாநாயகர் இருக்கை முன் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

அப்போது ‘இருக்கைக்கு செல்லாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என சபாநாயகர் எச்சரிக்கை விடுத்தார்.

தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் அமளியில் ஈடுபட்டதால், அவர்களை சட்டசபையிலிருந்து வெளியேற்ற அவை காவலர்களுக்கு சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார்.

இதை தொடர்ந்து சபை காவலர்கள் எடப்பாடி பழனிசாமி ஆதரவு எம்.எல்.ஏக்கள் சட்டசபையிலிருந்து வெளியேற்றப்பட்டனர். அப்போது சட்டசபை வாயிலிலும் நின்றபடி சில எம்.எல்.ஏக்கள் கோஷமிட்டனர். அவர்களையும் அங்கிருந்து வெளியேற்றினார்கள்.

இதைத் தொடர்ந்து அண்ணா தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் சட்டசபை நிகழ்ச்சியில் பங்கேற்க தடை விதித்து சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார். இது தொடர்பாக சட்டசபையில் அவர் வெளியிட்ட அறிவிப்பில் அண்ணா தி.மு.க. உறுப்பினர்கள் அவையின் மாண்பை குலைக்கும் வகையில் நடந்து கொண்டதால் இன்றும், நாளையும் அவர்கள் பங்கேற்க முடியாது என்று தெரிவித்தார்.

ஒரு நாள் தடை

இதையடுத்து பேசிய அவை முன்னவர் துரைமுருகன், அண்ணா தி.மு.க. உறுப்பினர்களுக்கு 2 நாள் தடை என்பது அதிகபட்சம் என்று கருதுகிறேன். சபாநாயகர் முடிவில் நான் தலையிட முடியாது என்றாலும் அவர்களுக்கான 2 நாள் தடையை இன்று ஒருநாள் மட்டும் குறைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இதனை சபாநாயகர் அப்பாவு ஏற்றார். இதையடுத்து அண்ணா தி.மு.க. உறுப்பினர்களுக்கு இன்று ஒருநாள் தடைவிதிப்பது தொடர்பான தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. அதனை துரைமுருகன் வாசித்தார்.

இதனையடுத்து அவை முன்னவரின் கோரிக்கையை ஏற்று இன்று ஒரு நாள் மட்டும் எடப்பாடி பழனிசாமி தரப்பு எம்.எல்.ஏ.க்கள் சட்டசபை நிகழ்வுகளில் தடை விதிக்கப்படுகிறது என சபாநாயகர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *