செய்திகள்

எதிர்க்கட்சி தலைவர் யார்? 10–ந்தேதி அண்ணா தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் முடிவு

சென்னை, மே 8–

சட்டமன்ற அண்ணா தி.மு.க. தலைவரை (எதிர்க்கட்சி தலைவர்) தேர்ந்தெடுப்பதற்காக அண்ணா தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் 10–ந்தேதி காலை 9.30 மணிக்கு சென்னையில் நடைபெறுகிறது.

தமிழக சட்டசபையில் அண்ணா தி.மு.க. கூட்டணி 234 தொகுதிகளில் போட்டியிட்டு 75 தொகுதிகளை கைப்பற்றியது. இதில் அண்ணா தி.மு.க. மட்டும் 65 தொகுதிகளிலும், அண்ணா தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் பூவை ஜெகன் மூர்த்தியும் வெற்றி பெற்று இருந்தனர். இதுதவிர கூட்டணி கட்சிகளான பா.ம.க. 5 தொகுதிகளிலும், பா.ஜ.க. 4 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது.

தேர்தலில் வெற்றி பெற்று தி.மு.க. ஆட்சி அமைத்து இருக்கிறது. அதேபோல், சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி வரிசையில் அண்ணா தி.மு.க. இடம் பெற்று இருக்கிறது. எதிர்க்கட்சி வரிசையில் இருக்கும் அண்ணா தி.மு.க. தரப்பில் இருந்து தலைவர் ஒருவர் தேர்வு செய்யப்பட வேண்டும்.

அந்த வகையில் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரை தேர்வு செய்வது தொடர்பாக, அண்ணா தி.மு.க.சார்பில் எம்.எல்.ஏ.க்களின் ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று மாலை நடைபெற்றது.

இந்த கூட்டத்துக்கு கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமை ஏற்றனர்.

கூட்டம் தொடங்குவதற்கு முன்பு ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி, கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், பா.வளர்மதி, பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, செங்கோட்டையன், மனோஜ் பாண்டியன், நத்தம் விஸ்வநாதன் உள்பட முக்கிய நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர். கூட்டத்தில் சட்டமன்ற அண்ணா தி.மு.க. தலைவராக (எதிர்க்கட்சி தலைவராக) யாரை தேர்வு செய்வது?, கொறடாவாக யாரை நியமிப்பது? என்பது பற்றி விவாதிக்கப்பட்டது.

இந்த கூட்டம் சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது. அதில் எடுக்கப்பட்ட சில முக்கிய முடிவுகளின் அடிப்படையில், அதன் பின்னர் எம்.எல்.ஏ.க்களுடன் சுமார் 30 நிமிடம் ஆலோசனை நடத்தினர். கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

10–ந்தேதி கூட்டம்

இந்த நிலையில் அண்ணா தி.மு.க. கழகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், அண்ணா தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள்‌ கூட்டம்‌ தலைமைக்‌ கழகத்தில்‌ வருகின்ற 10.5.2021 (திங்கட்‌ கிழமை) காலை 9.30 மணிக்கு, கழக ஒருங்கிணைப்பாளர்‌ ஓ. பன்னீர்செல்வம்‌, கழக இணை ஒருங்கிணைப்பாளர்‌ எடப்பாடி பழனிசாமி ஆகியோர்‌ தலைமையில்‌ நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில்‌, கழக சட்டமன்ற உறுப்பினர்கள்‌ அனைவரும்‌ தவறாமல்‌ கலந்துகொள்ளுமாறு கேட்டுக்‌ கொள்கிறோம்‌ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *