செய்திகள்

எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்க பாட்னா சென்றடைந்தார் முதலமைச்சர் ஸ்டாலின்

பீகார் முதல்வர் நிதிஷ்குமார் உற்சாக வரவேற்பு

சென்னை, ஜூன் 23–-

எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, நேற்று பாட்னா சென்ற முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை பீகார் முதல்வர் நிதிஷ்குமார் வரவேற்றார்.

தேசிய அளவில் நடைபெறும் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பீகாருக்கு புறப்பட்டுச் சென்றார்.

இன்று (வெள்ளிக்கிழமை) பாட்னாவில் 20 கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்றுள்ளார். இதற்காக அவர் சென்னை விமான நிலையத்தில் இருந்து நேற்று மாலை 5.30 மணியளவில் தனி விமானத்தின் மூலம் புறப்பட்டார். அவருடன் தி.மு.க. எம்.பி. டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் சென்றனர்.

தனி விமானம் மூலம் பாட்னாவுக்கு புறப்பட்ட முதலமைச்சர் ஸ்டாலினை, சென்னை விமான நிலையத்தில் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, தா.மோ.அன்பரசன், ஆ.ராசா எம்.பி., சிறுபான்மை வாரிய தலைவர் பீட்டர் அல்போன்ஸ், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைவர் பூச்சி முருகன், எஸ்.ஆர்.ராஜா எம்.எல்.ஏ. உள்பட பலர் வழியனுப்பி வைத்தனர்.

பாட்னாவுக்கு சென்ற மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அளிக்கப்பட்ட வரவேற்பை தொடர்ந்து, தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் அந்த படங்களை பகிர்ந்து, அதில் அவர் கூறியிருப்பதாவது:–-

‘நான் பாட்னாவுக்கு வந்திருக்கிறேன், பீகார் மாநிலத்தின் முதல்-வர் நிதிஷ்குமார், துணை முதல்-வர் தேஜஸ்வி யாதவ் மற்றும் பீகார் தமிழ்ச்சங்கத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளிடமிருந்து அன்பான வரவேற்பை பெற்றேன். ‘ஆசியாவின் ஒளி’ புத்தர், ‘ஜன்நாயக்’ கர்பூரி தாக்கூர் மற்றும் பி.பி.மண்டல் போன்றோரை நமக்கு வழங்கிய மண்ணில் இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

இந்த பாசிச, எதேச்சதிகார ஆட்சியை முடிவுக்கு கொண்டுவந்து, மதசார்பற்ற, ஜனநாயக இந்தியாவின் மறுபிறப்பை அனுமதிக்க, சமூக நீதியின் பூமியான இங்கிருந்து ஒன்றிணைந்து எதிர்க்கட்சிகளின் போர் முழக்கம் எழுந்ததில் ஆச்சரியமில்லை.

இவ்வாறு அதில் அவர் பதிவிட்டுள்ளார்.

லாலு பிரசாத்

தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், மூத்த தலைவர் லாலு பிரசாத்தை அவரது இல்லத்தில் சந்தித்தேன். கலைஞர் மீது லாலு பிரசாத் கொண்டிருந்த அன்பை நாம் அனைவரும் நன்கறிவோம். அதே அன்புடன் என்னையும் வரவேற்று, சமூகநீதிச் சுடரை உயர்த்திப் பிடிக்க வாழ்த்தினார். நீண்ட காலம் நலமுடன் திகழ்ந்து எங்களை வழிநடத்திட வேண்டும் என்று நானும் அவரிடம் கோரினேன். வரலாற்றுச் சிறப்புமிக்க நாளைய கூட்டத்துக்குத் தயாராகிறேன் என்று கூறியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *