செய்திகள்

எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி தேர்வு

அண்ணா தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் ஒருமனதாக முடிவு

சென்னை, மே 10–

தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமி இன்று ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அண்ணா தி.மு.க. தலைமைக் கழகத்தில் அண்ணா தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கூடி எடப்பாடி பழனிசாமியை ஏகமனதாக தேர்ந்தெடுத்தனர்.

உடனடியாக இதற்கான கடிதத்தை சட்டசபை செயலாளர் சீனிவாசனிடம் முன்னாள் அமைச்சர்களும், அண்ணா தி.மு.க. மூத்த தலைவர்களுமான பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி ஆகியோர் நேரில் வழங்கினார்கள்.தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அண்ணா தி.மு.க. 65 தொகுதிகளில் வெற்றி பெற்று சட்டமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெற்றது. இந்த நிலையில் சட்டமன்ற அண்ணா தி.மு.க. கட்சி தலைவரை (எதிர்க்கட்சி தலைவரை) தேர்ந்தெடுப்பதற்காக சென்னை ராயப்பேட்டையில் உள்ள அண்ணா தி.மு.க. தலைமை அலுவலகத்தில் கடந்த 7ந் தேதி அண்ணா தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. அன்றைய தினம் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

மீண்டும் ஆலோசனை

இதைத்தொடர்ந்து அண்ணா தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் மீண்டும் இன்று நடந்த திட்டமிடப்பட்டது. தற்போது கொரோனா 2வது அலையை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக இன்று முதல் 24ந்தேதி வரை முழு ஊரடங்கு அமுலுக்கு வந்துள்ளது.

முழு ஊரடங்கு கட்டுப்பாட்டின்படி அரசு கூட்டங்கள் தவிர்த்து பிற கூட்டங்கள் நடத்துவதற்கு அனுமதி கிடையாது. எனினும் நாளை கலைவாணர் அரங்கத்தில் சட்டசபை கூடுகிறது. இதனால் எதிர்க்கட்சி தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயம் அண்ணா தி.மு.க.வுக்கு ஏற்பட்டுள்ளது.

எனவே அண்ணா தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை திட்டமிட்டபடி இன்று நடத்துவதற்கு அனுமதி கேட்டு சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அண்ணா தி.மு.க. மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான நா.பாலகங்கா நேற்று மனு அளித்தார்.

இதற்கு அவர் ஒப்புதல் வழங்கியதையடுத்து அண்ணா தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை கழக அலுவலகத்தில் இன்று காலை 9.30 மணியளவில் தொடங்கியது.

அண்ணா தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது.

சுமார் 3 மணி நேரம் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. எதிர்க்கட்சி தலைவர் தேர்வு மற்றும் சட்டமன்ற தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவு உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

எடப்பாடி ஒருமனதாக தேர்வு

இந்த கூட்டத்தில் சட்டமன்ற கட்சி தலைவராக (எதிர்க்கட்சி) முன்னாள் முதலமைச்சரும், அண்ணா தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இது குறித்து எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

அண்ணா தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள்‌ கூட்டம்‌ இன்று (10–ந்தேதி) திங்கட்‌கிழமை) காலை 9.30 மணிக்கு, சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம்‌ சாலையில்‌ உள்ள தலைமைக்‌ கழகத்தில்‌, கழக ஒருங்கிணைப்பாளர்‌, முன்னாள்‌ துணை முதலமைச்சர்‌ ஓ. பன்னீர்செல்வம்‌, கழக இணை ஒருங்கிணைப்பாளர்‌, முன்னாள்‌ முதலமைச்சர்‌ எடப்பாடி பழனிசாமி ஆகியோர்‌ தலைமையில்‌ நடைபெற்றது.

இக்கூட்டத்தில்‌, அண்ணா தி.மு.க. சட்டமன்றக்‌ கட்சித்‌ தலைவராக முன்னாள்‌ முதலமைச்சர்‌ எடப்பாடி பழனிசாமி கழக சட்டமன்ற உறுப்பினர்களால்‌ ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்‌ என்பதைத்‌ தெரிவித்துக்‌ கொள்கிறோம்‌ என்று கூறியுள்ளனர்.

சட்டசபை செயலாளரிடம் கடிதம்

எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதற்கான அதிகாரபூர்வ கடிதத்தை சட்டசபை செயலாளர் சீனிவாசனிடம் முன்னாள் அமைச்சர்கள் பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி ஆகியோர் வழங்கினார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *