பெங்களூரு, ஜூலை 17–
நாடாளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதாவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் தீவிரம் காட்டி வரும் நிலையில் பெங்களூருவில் இன்றும், நாளையும் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெங்களூர் சென்றார்.
சென்னையிலிருந்து விமானம் மூலம் காலை 11 மணிக்கு பெங்களூர் புறப்பட்டு சென்றார். முன்னதாக சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு (2024) நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெற்று 3-வது முறையாக ஆட்சி அதிகாரத்தை பிடிக்க பாரதீய ஜனதா தீவிரம் காட்டி வரும் நிலையில், எதிராக வலுவான கூட்டணி அமைக்க எதிர்க்கட்சி தலைவர்கள் முடிவு செய்துள்ளனர்.
பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் கியோர் இதற்கான முன்னெடுப்பை மேற்கொண்டு வருகிறார்கள்.
இதனையடுத்து கடந்த மாதம் (ஜூன்) 23-ந் தேதி காங்கிரஸ், தி.மு.க., ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம், திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட 17 கட்சிகளின் தலைவர்கள் பீகார் தலைநகர் பாட்னாவில் கூடி ஆலோசனை நடத்தினர். கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். அதில் ஓரணியில் திரண்டு நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இதனையடுத்து எதிர்க்கட்சி தலைவர்களின் 2-வது ஆலோசனை கூட்டம் பெங்களூருவில் இன்றும் (திங்கட்கிழமை), நாளையும் (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. பெங்களூரு தாஜ் வெஸ்ட் எண்டு ஓட்டலில் இந்த கூட்டம் நடைபெறுகிறது.இதற்கான ஏற்பாடுகளை கர்னாடக காங்கிரஸ் தலைவரும், துணை முதலமைச்சருமான டி.கே.சிவக்குமார் செய்து வருகிறார்.
இன்று மாலை 6 மணிக்கு முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் எதிர்க்கட்சி தலைவர்கள் கூடுகிறார்கள். அப்போது தலைவர்களுக்கு விருந்து அளிக்கப்படுகிறது. அதைத்தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர்களின் முக்கிய ஆலோசனை கூட்டம் நாளை காலை 11 மணிக்கு நடக்கிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்குமாறு 24 கட்சிகளை சேர்ந்த எதிர்க்கட்சிகளுக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், ராஷ்டிரிய ஜனதா தளம் சார்பில் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவ், மராட்டிய முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் சார்பில் சரத்பவார், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி சார்பில் முதலமைச்சர் ஹேமந்த் சோரன், கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் சீதாராம் யெச்சூரி, தேசிய மாநாட்டு கட்சி சார்பில் உமர் அப்துல்லா, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் திருமாவளவன், ம.தி.மு.க. சார்பில் வைகோ, மக்கள் ஜனநாயக கட்சி சார்பில் மெகபூபா முக்தி உள்பட 24 கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.
இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது, கூட்டணிக்கு என்ன பெயர் சூட்டுவது, குறைந்தபட்ச பொது செயல் திட்டங்களை உருவாக்குவது, ஒருவேளை எதிர்க்கட்சிகள் வெற்றி பெற்றால் பிரதமராக யாரை தேர்ந்தெடுப்பது என்பது குறித்து விரிவாக விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அடுத்த கூட்டம் நடைபெறும் தேதி மற்றும் இடம் ஆகியவை தற்போது நடைபெறும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட உள்ளது.