புதுடெல்லி, ஜன. 3–
எதிர்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக, பாராளுமன்ற இரு அவைகளும் இன்று 2வது நாளாக ஒத்திவைக்கப்பட்டது.
2023ம் ஆண்டிற்கான பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 31–ந்தேதி ஜனாதிபதி உரையுடன் தொடங்கியது. 1–ந்தேதி அன்று இந்த நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
நேற்று காலை பாராளுமன்றம் தொடங்கியதும் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக இரு அவைகளும் மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று காலை வழக்கம்போல் பாராளுமன்றத்தில் இரு அவைகளிலும் கூட்டம் தொடங்கியது. அப்போது அதானி குழும விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்த வலியுறுத்தி எதிர்க்கட்சி உறுப்பினர்களின் தொடர் முழக்கத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அமளி ஏற்பட்டதால், மக்களவை 2 மணி வரையிலும், மாநிலங்களவை 2.30 மணி வரையிலும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இன்று காலை மாநிலங்களவை எதிர்கட்சித்தலைவர் மல்லிகார்ஜூன கார்கே நாடாளுமன்ற அலுவலகத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்களின் அவசர கூட்டத்தை கூட்டினார்.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் ஊடகப் பிரிவு செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில்,”நாடாளுமன்றத்தில் ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க கார்கே தலைமையில் எதிர்க்கட்சித் தலைவர்கள் இன்று காலை கூடினார்கள். அதில் ஒரு சுதந்திரமான விசாரணையின் மூலம் மட்டுமே பிரதமரின் அழுத்தத்தின் பெயரில் அதானி குழுமத்தில் முதலீடு செய்ய கட்டாயப்படுத்தப்பட்ட எல்ஐசி, எஸ்பிஐ மற்றும் பிற பொதுத்துறை நிறுனங்களை காப்பாற்ற முடியும் என தெரிவிக்கப்பட்டதாக கூறினார்.