சென்னை, மார்ச் 10–
சிபிஐ, அமலாக்கத்துறையை தொடர்ந்து, எதிர்க்கட்சிகளை களங்கப்படுத்த போதைப்பொருள் துறையை பாஜக கையில் எடுத்துள்ளது என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மற்றும் வழக்கறிஞரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பி.வில்சன் ஆகியோர் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது:–
திமுக உறுப்பினராக இருந்த ஜபார் சாதிக் என்பவர் பொதைபொருள் கடத்தலில் வழக்கு பதிவு செய்யப்பட்ட உடனே, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தே நீக்கப்பட்டார். ஆனால், அவர்மீது 2013 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் போதைப்பொருள் வழக்கு தொடரப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார். அவரோடு, அதிமுக, பாஜகவினர் தான் தொடர்பில் இருந்துள்ளனர். ஆனால் திமுகவில் அண்மையில்தான் சேர்ந்தார்.
அதிமுக நீக்கியதா?
திமுகவில் 2 கோடி உறுப்பினர்கள் உள்ளனர். ஒவ்வொருவரின் பின்புலத்தையும், செயல்பாடுகளையும் ஆராய்ந்து கட்சியில் உறுப்பினராக சேர்க்க முடியாது. ஆனால், ஒருவர் மீது குற்றச்சாட்டு வந்த உடனே அவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தே நீக்கப்பட்டுள்ளார். ஆனால், அதிமுக ஆட்சியில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மீது குட்கா வழக்கை சிபிஐ பதிவு செய்தது. அவரை கட்சியில் இருந்து அதிமுக நீக்கியதா? என்றும் கேள்வி எழுப்பினார்.
திமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஒருவரை வைத்து திமுகவை களங்கப்படுத்த பாஜக முயற்சி செய்கிறது. அமலாக்கத்துறை, சிபிஐ உள்ளிட்ட அமைப்புகளைத் தொடர்ந்து, போதைப் பொருள் தடுப்புத் துறையையும் பாஜக கையில் எடுத்துக்கொண்டு, எதிர்க்கட்சிகளை களங்கப்படுத்த முயற்சி செய்கிறது. ஆனால், பாஜவின் எண்ணம் ஒருபோதும் தமிழ்நாட்டில் ஈடேறாது. அதிமுகவும் பாஜகவும் கைகோர்த்துக்கொண்டு செயல்பட்டு வருகிறது என்பது இதன் மூலம் தெளிவாகிறது என்று கூறினர்.
மேலும் கூறும்போது, ஜாபர் சாதிக்கை ராஜஸ்தானில் கைது செய்தார்களா? டெல்லியில் கைது செய்தார்களா என்பதை அவர்கள்தான் கூற வேண்டும். ஆனால், அவசர அவசரமாக தேர்தல் நேரத்தில் பேட்டி கொடுத்தது சரியானது அல்ல, கண்டிக்கத் தக்கது என்றும் கூறினர்.