பெங்களூரு, ஜூலை.19-–
நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக பெங்களூருவில் சோனியா காந்தி தலைமையில் 26 கட்சி தலைவர்கள் 2-வது நாளாக கூடி முக்கிய முடிவு எடுத்துள்ளனர்.
எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு ‘இந்தியா’ என்று பெயர் சூட்டவும், 11 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழு அமைக்கவும் முடிவு செய்திருப்பதாக அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அறிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் கடந்த மாதம் (ஜூன்) 23-ந் தேதி பாட்னாவில் கூடி ஆலோசனை நடத்தின.
அதைத்தொடர்ந்து எதிர்க்கட்சிகளின் 2-வது கூட்டம் பெங்களூருவில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் நேற்று முன்தினம் தொடங்கியது. முதல் நாளில் எதிர்க்கட்சி தலைவர்களுக்கு அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி இரவு உணவு விருந்தளித்தார்.
26 கட்சிகள் பங்கேற்பு
இதில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, ஐக்கிய ஜனதாதளம் தலைவர் நிதிஷ்குமார், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ், ராஷ்டிரீய ஜனதாதள தலைவர் லாலுபிரசாத் யாதவ், மார்க்சிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் டி.ராஜா, தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா, ஜார்கண்ட் மாநில முதல்-மந்திரி ஹேமந்த் சோரன் உள்பட 26 கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இதனையடுத்து 2-வது நாள் கூட்டத்தில் எத்தகைய திட்டங்களை ஆய்வு செய்வது என்று பேசிவிட்டு கலைந்தனர்.
இந்நிலையில், எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று 2-வது நாளாக அதே ஓட்டலில் நடந்தது.
கேரள முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி மறைவால், காலை 11 மணிக்கு தொடங்க இருந்த கூட்டம் பகல் 12 மணிக்கு தொடங்கியது.
இதில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, பிகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கேஜ்ரிவால், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் உள்ளிட்ட 26 கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
தமிழகத்தில் இருந்து விடுதலை சிறுத்ததை கட்சித்தலைவர் திருமாவளவன், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈஸ்வரன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் காதர் மொய்தீன், அகில இந்திய பார்வர்டு பிளாக் சார்பில் தேவராஜன் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.
உம்மன் சாண்டிக்கு அஞ்சலி
கூட்டத்தின் தொடக்கத்தில் தலைவர்கள் எழுந்து நின்று, கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி மறைவுக்கு மவுன அஞ்சலி செலுத்தினர். பின்னர், 5 மணி நேரத்துக்கும் மேலாக தீவிர ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
கூட்டணிக்கு என்ன பெயர் வைப்பது என்று ஆலோசிக்கப்பட்டது. ஒவ்வொரு தலைவரும் ஒரு பெயரை சிபாரிசு செய்தனர்.
தொகுதிகளை பரஸ்பரம்
விட்டுக்கொடுக்க முடிவு
மாநில அளவில் கட்சிகள் எப்படி ஒருங்கிணைந்து செயல்படுவது என்பது பற்றி பேசப்பட்டது. ஒவ்வொரு மாநிலத்திலும் தொகுதி பங்கீடு செய்து கொள்வது பற்றியும் விவாதிக்கப்பட்டது. வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை பரஸ்பரம் விட்டுக்கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.
கூட்டத்தில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
நாட்டில் மதசார்பற்ற ஜனநாயகம், பொருளாதார இறையாண்மை, சமூக நீதி, கூட்டாட்சி ஆகியவை குழிதோண்டி புதைக்கப்பட்டு வருகின்றன. மணிப்பூர் வன்முறை குறித்து பிரதமர் மோடி மவுனம் சாதித்து வருவது அதிர்ச்சி அளிக்கிறது. மணிப்பூரில் அமைதி திரும்ப செய்வது உடனடி தேவை ஆகும். கூட்டாட்சி முறையை பலவீனப்படுத்த திட்டமிட்ட முயற்சி நடந்து வருகிறது.
சட்ட விதிகளை மீறும்
கவர்னர்களின் செயல்பாடு
பாரதீய ஜனதா அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்களின் கவர்னர்களின் செயல்பாடுகள், அரசியல் சட்ட விதிமுறைகளை மீறுவதாக உள்ளன. அரசியல் எதிரிகளுக்கு எதிராக விசாரணை அமைப்புகள் தவறாக பயன்படுத்தப்படுகின்றன. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களின் சட்டபூர்வ தேவைகள், உரிமைகள் மத்திய அரசால் மறுக்கப்படுகின்றன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சிகளின் கூட்டணி
பெயர் ‘இந்தியா’
இதனையடுத்து கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து ஒருங்கிணைந்த பத்திரிகையாளர் சந்திப்பில் மல்லிகார்ஜுன கார்கே கூறியதாவது:-–
அனைத்துக்கட்சிகளும் ஒரே கருத்து அடிப்படையில் சில தீர்மானங்களை நிறைவேற்றி உள்ளோம்.
அதில் முக்கியமாக எதிர்க்கட்சி களின் கூட்டணிக்கு இந்திய தேசிய வளர்ச்சி கூட்டணி (இந்தியா) என்று பெயரிட்டு உள்ளோம்.
இந்த இந்தியா பெயர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டது. இந்த பெயரை கண்டு அனைத்துக்கட்சி தலைவர்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
இந்த கூட்டணிக்கு தலைவர், ஒருங்கி ணைப்பாளர் தேர்வு செய்யப்படவில்லை.
மும்பையில் அடுத்த கூட்டம்…
26 கட்சிகள் ஓரணியில் திரண்டு இருப்பதே எங்கள் கூட்டணியின் முதல் சாதனை. எங்கள் கூட்டணியின் அடுத்த கூட்டத்தை மும்பையில் நடத்த முடிவு செய்து உள்ளோம். 11 பேர் அடங்கிய ஒருங்கிணைப்பு குழுவை உருவாக்க முடிவு செய்து உள்ளோம். இந்த குழுவில் இடம் பெறும் உறுப்பினர்கள் யார்-–யார் என்பது குறித்து மும்பையில் நடைபெறும் அடுத்த கூட்டத்தில் முடிவு செய்து அறிவிக்கப்படும். கூட்டணியின் பிரச்சார நிர்வாக குழு அமைக்கப்படுகிறது. இந்த குழு டெல்லியில் இருந்து செயல்படும்.
நாட்டின் நலன் கருதி
ஒன்று சேர்ந்துள்ளோம்
மத்திய பாரதீய ஜனதா ஜனநாயகம், அரசியல் சாசனத்தை அழிக்க விரும்புகிறது. சி.பி.ஐ., அமலாக்கத்துறை போன்ற விசாரணை அமைப்புகளை பயன்படுத்தி எதிர்க்கட்சி தலைவர்களை மிரட்டுகிறது. அதனால் நாட்டில் தற்போது மிக மோசமான நிலை நிலவுகிறது. அரசியல் ரீதியாக மாநிலங்களில் எங்களிடையே கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், நாட்டின் நலன் கருதி நாங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்துள்ளோம்.
காங்கிரசுக்கு பிரதமர் பதவி மீது ஆசை இல்லை என ஏற்கெனவே கூறியிருக்கிறேன். இந்த கூட்டணியை பார்த்து பிரதமர் நரேந்திர மோடி பயப்படுகிறார். அதனாலேயே, அவசரமாக 30-க்கும் மேற்பட்ட கட்சிகளை அழைத்து கூட்டம் நடத்தியுள்ளார். எனது 52 ஆண்டு அரசியல் வாழ்க்கையில் எதிர்க்கட்சிகளின் குரல்கள் இந்த அளவுக்கு நசுக்கப்பட்டு பார்த்தது இல்லை.
இவ்வாறு மல்லிகார்ஜுன கார்கே கூறினார்.