இந்திய கடற்படை தளபதிகளின் மாநாட்டில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு
பானாஜி, மார்ச் 7–
எதிர்கால தாக்குதல்கள் கணிக்க முடியாததாக இருக்கும் என்பதால் எதற்கும் தயாராக இருக்க வேண்டும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
2023-ம் ஆண்டுக்கான கடற்படைத் தளபதிகள் மாநாட்டின் முதல் கூட்டம் நேற்று தொடங்கியது. கடற்படைத் தளபதிகள் மட்டத்தில் ராணுவ-பாதுகாப்பு உத்தி போன்ற விவகாரங்கள் குறித்து கலந்துரையாடவும், அரசின் மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளவும் இந்த மாநாடு திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த மாநாட்டில் புதுமையாக, கமாண்டர்கள் மாநாட்டின் முதல் கூட்டம், கடலில், நாட்டின் முதல் உள்நாட்டு விமானம் தாங்கிக் கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்தில் கோவா கடற்கரையில் நடைபெற்றது. இந்த 3 நாள் மாநாட்டை தொடங்கி வைத்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது:–
மோதலை கணிக்க முடியாது
எதிர்கால மோதல்கள் கணிக்க முடியாததாக இருக்கும். வடக்கு மற்றும் மேற்கு எல்லைகளிலும், முழு கடற்கரையிலும் தொடர்ந்து கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். எதிர்காலத்தில் ஏற்படும் அனைத்து சவால்களையும் எதிர்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும். அதிகரித்து வரும் அச்சுறுத்தல்களை திறம்பட எதிர்கொள்ளும் வகையில், ஆயுதப்படைகள் திறன்களை வளர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.
அதே நேரத்தில் கடற்கரையோரங்களிலும் சீனா மற்றும் பாகிஸ்தான் எல்லைகளிலும் அதிக பாதுகாப்புடன் இருக்க வேண்டும். சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்தை உறுதி செய்வதற்கு எல்லைகளை பாதுகாப்பது அவசியம். பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் இந்தியா குறிப்பிடத்தக்க வகையில் முன்னேறி வருகிறது.
சீனாவும் இந்தியாவும் கடந்த 3-4 ஆண்டுகளில் குறிப்பாக லடாக் மற்றும் அருணாச்சல பிரதேசத்தில் இரண்டு முறை எல்லை மோதல்களில் ஈடுபட்டுள்ளன. ஜம்மு காஷ்மீர் மற்றும் கேரளா போன்ற எல்லை மாநிலங்களில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் சில தந்திர வேலைகளில் ஈடுபடுவதாக கிடைத்த உளவுத்துறை தகவலின்படி, அவற்றை எதிர்கொள்ளும் உத்திகளும் உருவாக வேண்டும் என்று ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.