செய்திகள்

எதிரணியில் 10 பிரதமர் வேட்பாளர்கள்: நாடு தாங்குமா? அமைச்சர் பி.தங்கமணி பேச்சு

ஈரோடு ஏப். 12

எதிரணியில் 10 பிரதமர் வேட்பாளர்கள் உள்ளனர். நாடு தாங்குமா? என்று அமைச்சர் பி.தங்கமணி கேள்வி எழுப்பி உள்ளார்.

குமாரபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பள்ளிபாளையம் நகராட்சிப்பகுதியில் ஈரோடு நாடாளுமன்ற அண்ணா தி.மு.க. வேட்பாளர் வெங்கு மணிமாறனை ஆதரித்து அமைச்சர் பி.தங்கமணி பள்ளிபாளையம் அக்ரஹாரம் விஸ்வேஸ்வரர் பாலமுருகன் கோவிலில் சிறப்பு பூஜை செய்து சாமி தரிசனம் செய்து வாக்கு சேகரித்தார்.

பள்ளிபாளையம் நகராட்சி 30 வார்டுகளில் உள்ள 78 வீதிகளில் வேட்பாளருடன் திறந்த ஜீப்பில் சென்று இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்தார். அப்போது அக்ஹாரம் பஸ் நிறுத்தம் அருகே ஜீப்பில் நின்றபடி அமைச்சர் பி.தங்கமணி பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:

நாட்டின் பிரதமராக மீண்டும் மோடி வரவேண்டும் என்று இத்தோ்தலை அண்ணா தி.மு.க. கூட்டணி சந்திக்கிறது. ஆனால் எதிரணியில் 10க்கும் மேற்பட்ட பிரதமர் வேட்பாளர்கள் இருக்கிறார்கள். இது நாடு தாங்குமா? தி.மு.க. தலைவர். ஸ்டாலின் ராகுல்காந்தி பெயரை பிரதமர் பதவிக்கு முன்மொழிந்தார். ஆனால் காங்கிரஸ் கட்சிக்கூட இதுவரை ராகுலை பிரதமராக முன் நிறுத்தவில்லை. எதிர்க்கட்சிகளில் மாயாவதி, சந்திரபாபு நாயுடு, மம்தா பானர்ஜி, சந்திரசேகரராவ், தேவகவுடா ஆக 10க்கும் மேற்பட்ட பிரதமர் வேட்பாளர்கள் இருக்கிறார்கள். எனவே இவர்களுக்கு வாக்கு அளித்தால் நாட்டில் குழப்பம்தான் மிஞ்சும். கடந்த காலங்களில் இவ்வாறு எதிர்கட்சிகளுக்கு வாக்களித்ததில் ஒன்று அல்லது ஒன்றரை ஆண்டுகளில் அரசு கவிழ்ந்தது.

நாடு பாதுகாப்பாக இருக்க…

இன்று நாட்டுக்கு ஒரு வலிமையான பிரதமர் தேவை. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு கூட பாகிஸ்தான் தீவிரவாதிகள் காஷ்மீரில் தாக்குதல் நடத்தினார். அதை வெற்றிகரமாக சமாளித்து பாகிஸ்தானுக்கு பாடம் கற்பித்து தந்தவர் பிரதமர் மோடி. இந்த நாடு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றால் அவரைப் போன்று ஒரு வலிமையான தலைவர் வரவேண்டும் என்று நாங்கள் வாக்கு சேகரிக்கிறோம்.

தமிழகத்தைப் பொறுத்தவரை எடப்பாடி பழனிசாமி, முதல்வராக சிறப்பாக செயல்படுகிறார். அவர் அருகில் உள்ள சேலம் மாவட்டத்தில் சிறிய கிராமத்தைச் சோ்ந்தவர். ஒரு விவசாயி. ஏன் விவசாயி இந்த நாட்டை ஆளக்கூடாதா? ஸ்டாலின் அவரது ஆட்சியை கவிழ்க்கப் பார்க்கிறார். இரண்டு மாதம், மூன்று மாதம் என கெடு விதிக்கிறார். ஆனால் அத்தனை எதிர்ப்பையும் மீறி கடந்த இரண்டு ஆண்டுகளாக மக்களுக்கு பல்வேறு திட்டங்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி செயல்படுத்தி வருகிறார்.

ரூ.420 கோடியில் குடிநீர் திட்டம்

பள்ளிபாளையத்தையும், ஈரோட்டை இணைக்க காவிரியின் குறுக்காக ஒரு பாலம், பள்ளிபாளையம் எஸ்.பி.பி காலனியில் ஒரு பாலம் கட்டப்பட்டுள்ளது. பள்ளிப்பாளையத்திற்கு குடிநீர் தி்ட்டம் உருவாக்கப்பட்டது. மாதப்பாளையம், திருச்செங்கோடு ஒன்றியங்களுக்கு ரூ.420 கோடியில் குடிநீர் தி்ட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்பகுதிக்கு புதிய கலைக்கல்லூரி, ஆர்.டி.ஓ. அலுவலகம், எனப் பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. சுதந்திரம் அடைந்ததிலிருந்து இதுவரை இல்லாத அளவிற்கு திட்டங்கள் இம்மாவட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன. நாங்கள் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்கிறோம். ஆனால் தி.மு.க தலைவர் சொல்வதற்கு ஒன்றுமில்லை என பொய்க்குற்றச்சாட்டுக்ளை கூறி வாக்கு சேகரிக்கிறார்.

தொண்டர் முதல்வராக வரமுடியும்

ஏன் தமிழகத்தில் ஒரு கடைக்கோடி தொண்டன் கூட முதலமைச்சராக வர முடியும் என்ற நிலையை அண்ணா தி.மு.க. தான் உருவாக்கி உள்ளது. ஸ்டாலின் போன்று தந்தை கருணாநிதியின் வழியில் பதவியைப் பிடித்தவர் அல்ல பழனிசாமி. ராகுல்காந்தி தான் அக்கட்சியின் வழிவழியாக வாரிசாக தலைவராக வந்துள்ளார். ஆனால் அண்ணா தி.முக. மட்டுமே ஒரு தொண்டர் கூட தலைவராக முதல்வராக வரமுடியும் என்ற நிலை ஏற்படுத்தி உள்ளது.

எனவே இந்த அரசு பொங்கல் பண்டிகையின் போது தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் ரூ.1000 பொங்கல் பரிசு வழங்கியது. ஆனால் அதைக்கூட கோர்ட்டுக்கு சென்று தடுக்க முயற்சித்தார் ஸ்டாலின்.

தற்போது வறட்சியால் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதால் அனைவருக்கும் 2 ஆயிரம் வழங்க முதல்வர் உத்தரவிட்டார். ஆனால் அதையும் கோர்ட்டுக்கு சென்று ஸ்டாலின் தடுத்துள்ளார். தோ்தலுக்கு பிறகு அனைவருக்கும் 2 ஆயிரம் வழங்கப்படும்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் அனைத்து திட்டங்களும் தொடர மத்தியில் மோடி தலைமையில் வலுவான ஆட்சி அமைய இரட்டை இலையை ஆதரியுங்கள். இவ்வாறு அமைச்சர் பி.தங்கமணி பேசினார்.

பிரச்சாரத்தில் பள்ளிபாளையம் ஒன்றியச் செயலாளர் செந்தில், நகர ஜெயலலிதா பேரவைச் செயலாளர் டி.கே.எஸ் (எ) டி.கே.சுப்பிரமணி, பள்ளிபாளையம் நகரச் செயலாளர் பி.எஸ். வௌ்ளிங்கிரி, மாவட்ட வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர் சந்திரசேகர், ஆலாம்பாளையம் பேரூர் கழகச் செயலாளர் தனசேகர், ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர் முகில், நகரத்துணைச் செயலாளர் ஜெயகணேஷ் மற்றும் அண்ணா தி.மு.க கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *