சிறுகதை

எதற்கும் ஒரு எல்லை உண்டு- கவிஞர் திருமலை. அ

அன்று ஞாயிற்றுக் கிழமை என்பதால் தி.நகரில் கூட்டம் நிரம்பி வழிந்தது. ஆட்டோக்களும் கார்களும் ஒரவரை ஒருவர் முந்திக் கொண்டு சென்றதால் பாதசாரிகள் பாடு – பெரும்பாடாகி விட்டது.

இந்த நெருக்கடியான சூழலில் ரெங்கராஜனும் அவரது மனைவி அமுதாவும் கடைகளில் சாப்பிங் செய்துவிட்டு ஆளுக்கு மூன்று பைகளைக் கைகளில் தூக்கிக் கொண்டு மதிய சாப்பாட்டுக்கு ஓட்டலைத் தேடினார்கள். ஒரு வழியாக சிலரிடம் விசாரித்து நல்ல ஓட்டல் ஒன்றைக் கண்டு பிடித்து அந்த ஓட்டலுக்குள் நுழைந்தார்கள்.

இருவரும் வயதானவர்கள் என்பதால் சர்வர் அய்யா என்ன சாப்பிடுகிறீர்கள்? என்றார். அதில் கொஞ்சம் மரியாதையும் கலந்திருந்தது. சாப்பாடு, மீன் குழம்பு,முட்டை பொரியல் ஆர்டர் செய்தார்கள். எல்லாமே அவர்களுக்கு பிடித்த மாதிரி சூடாக வந்தது. சுவைத்து சாப்பிட்டார்கள்.

பில் வந்தது.சர்வரிடமே பணத்தை கொடுத்தார் ரெங்கராஜன்.

‘‘வெரிகுட் நல்ல சர்வீஸ் செஞ்சீங்க’’, என்று சர்வரைப் பாராட்டியதோடு டிப்ஸ் கொடுக்கவும் மறக்கவில்லை.

பிறகு கணவன் மனைவி இருவரும், ஆட்டோவை எதிர் பார்த்து நின்றனர்.அப்போது தன் கணவரிடம் ஒரு பை குறைவாக இருப்பதை அமுதா பார்த்து விட்டார். இது குறித்து கணவரிடம் விசாரித்தார்.

பதறிப்போன ரெங்கராஜன் இங்கே நில் என்று சொல்லி விட்டு சாப்பிட்ட ஓட்டலை நோக்கி விரைந்தார். நேராக சாப்பிட்ட இடத்தை சுற்றிப் பார்த்தார். அங்கு சர்வர் இல்லை. நேராக கல்லாவில் இருந்த முதலாளியிடம் தனது கைப்பை குறித்து கேட்டார். இதோ இங்கே இருக்கிறது என்று பையை எடுத்து கொடுத்தார் முதலாளி.

வெளியே சிறிது தூரம் நடந்ததும் கையில் இருந்த பையை திறந்து பார்த்தார். முகத்தில் அதிர்ச்சி; பையில் வைத்திருந்த பணம் முழுவதையும் காணவில்லை. அதற்கு பதில் நான்கு ஸ்கூல் நோட்புக் இருந்தது. நோட்புக்கை எடுத்துப் பார்த்தார். அப்போது அதில் இருந்து பில் கீழே விழுந்தது.

பில்லில் புத்தகக் கடை முகவரி இருந்தது. அந்தக் கடை ஓட்டலுக்கு எதிர்புறம் உள்ளதை ரெங்கராஜன் பார்த்து விட்டார். உடனே நேராக அந்தக் கடைக்கு சென்றார்.

புத்தகக் கடையில் இருந்தவர் பில்லைப் பார்த்ததும் இப்போது தான் அந்த ஓட்டல் முதலாளி அவசரமாக வாங்கி சென்றதாக கூறினார்.அதன் பிறகுதான் பணம் கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில் ரெங்கராஜன் நிம்மதி பெருமூச்சு விட்டார். ஏனெனில் அவர் தவறவிட்ட பணம் ஐந்து இலட்சம் ரூபாய் .

அதன் பிறகு ஓட்டல் முதலாளியிடம் சென்று பில்லைக் கொடுத்தார். ஓட்டல் முதலாளி எதுவும் பேசவில்லை. தனது கல்லாவுக்கு கீழே மறைத்து வைத்திருந்த பணக் கட்டுகளை எடுத்து ரெங்கராஜனிடம் கொடுத்தார். பிறகு ஓட்டல் முதலாளி ரெங்கராஜனிடம் மன்னிப்பு கேட்டார். அப்போது சர்வர் மணியும் அங்கு வந்து விட்டார்.

ரெங்கராஜனும் பரவாயில்லை இது உங்களுக்கு மட்டும் தலை குனிவல்ல; உங்கள் ஓட்டல் பெயரையும் கெடுத்து விடும். கவனமாக இருங்கள் என்று சொல்லி விட்டு இருவருக்கும் வாழ்த்துக்கள் சொல்லி அங்கிருந்து விடை பெற்றார் ரெங்கராஜன்.

அப்போது சர்வர் மணி, முதலாளியிடம் முதலாளி உங்களுக்கு இப்போது இருக்கும் வசதியே ஏழு தலை முறைக்குத் தாங்கும். எதுக்கு முதலாளி உங்களுக்கு இந்த பேராசை? பேராசை என்பது கொடிய நோய்; அதுவும் நம்பிக்கை துரோகம் மிகப்பெரிய பாவச் செயல்; அது அழிவைத்தான் கொடுக்கும்.

எதற்கும் ஒரு அளவிருக்கிறது முதலாளி; அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்று சொல்வார்கள். இருப்பதை விட்டு விட்டு பறப்பதற்கு ஆசைப்படுகிறீர்கள். அது ஆபத்தில் போய் முடிந்து விடும். இதெல்லாம் நான் சொல்ல வேண்டிய நிலை வந்து விட்டது. சாரி முதலாளி என்று சொல்லி விட்டு புறப்பட்டார் சர்வர் மணி; அப்போது சர்வர் மணியின் இரு கைகளையும் பிடித்துக் கொண்டு என்னை மன்னித்து விடு மணி; ‘நீ உயர்ந்து விட்டாய்; நான் தாழ்ந்து விட்டேன்’ என்றார் ஓட்டல் முதலாளி. அப்போது இருவர் கண்களிலும் நீர்த் துளிகள் மெதுவாக எட்டிப் பார்த்தன.

Leave a Reply

Your email address will not be published.