செய்திகள்

எண்ணெய் இறக்குமதி குறித்து அரசியல் செய்ய வேண்டாம்: இந்திய அரசு திட்டவட்டம்

டெல்லி, மார்ச் 19–

ரஷ்யாவிடம் இருந்து தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்த இந்தியாவின் சட்டப்பூர்வமான எரிசக்தி பரிவர்த்தனைகள் குறித்து அரசியல் செய்ய வேண்டாம் என்று அமெரிக்காவிற்கு இந்தியா மறைமுகமாக கூறியுள்ளது.

ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கையை எதிர்த்து, உக்ரைனுக்கு ஆதரவாக, அமெரிக்கா ரஷ்யாவின் மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இதனால் ரஷ்யாவின் கச்சா எண்ணெய்யை வாங்க ஐரோப்பிய நாடுகள் மறுத்துள்ளதால், ரஷ்யா கச்சா எண்ணெய் விலைகளை குறைத்து விற்பனை செய்ய முன்வந்துள்ளது.

இதன் காரணமாக ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்ய ஆர்வம் காட்டும் இந்தியா, முதல் கட்டமாக 3 மில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெயை இந்தியன் ஆயில் கார்ப்பொரேசன் மூலம் இறக்குமதி செய்துள்ளது.

அரசியலாக்க வேண்டாம்

இது குறித்து டெல்லி வட்டாரங்கள் கூறுகையில், ‘எண்ணெய் வளம் அதிகம் உள்ள நாடுகள், ரஷ்யாவிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகள் மீது பொருளாதார தடை விதிக்க முடியாது. இந்தியாவின் முறையான எரிசக்தி பரிவர்த்தனைகளை அரசியலாக்க வேண்டாம் என்று கூறியுள்ளது.

இது குறித்து வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கூறுகையில், ‘இந்தியா தனது எண்ணெய் தேவைகளில் பெரும்பாலானவற்றை இறக்குமதி செய்கிறது. எனவே எண்ணெய் தேவைகளை இறக்குமதி செய்வதை எதிர்கொள்ளும் இந்த சூழ்நிலையின் காரணமாக, உலகளாவிய எரிசக்தி சந்தைகளில் உள்ள அனைத்து சாத்தியக்கூறுகளையும் நாங்கள் எப்போதும் ஆராய்ந்து வருகிறோம்.

இந்தியாவிற்கு கச்சா எண்ணெயை ரஷ்யா பெரிய அளவில் சப்ளை செய்யும் நாடாக இல்லை. ஆனால் நாம் ஒரு பெரிய எண்ணெய் இறக்குமதியாளர். இதனால் எல்லா இடங்களிலும் அனைத்து விருப்பங்களையும் பார்க்கிறோம், எங்களுக்கு ஆற்றல் தேவை, என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.