திருவள்ளூர், பிப்.11–
பாரத் பெட்ரோலியம் நிறுவனத்துக்காக எண்ணூர் கடலோர எரிபொருள் சேமிப்பு முனையத்தை பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அருகே உள்ள அத்திப்பட்டு கிராமத்தில், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம் சார்பில், ரூ.393 கோடி செலவில் எண்ணூர் கடலோர எரிபொருள் சேமிப்பு முனையம் அமைக்கும் பணி, கடந்த இரண்டரை ஆண்டுகளாக நடந்து வந்தது. அப்பணி சமீபத்தில் முடிவுக்கு வந்தது.
இதையடுத்து, நேற்று மதியம் திருப்பூரில் இருந்தவாறு பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் எண்ணூர் கடலோர எரிபொருள் சேமிப்பு முனையத்தை திறந்து வைத்தார்.
அப்போது எண்ணூர் அத்திப்பட்டில் நடைபெற்ற நிகழ்வில் திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் வேணுகோபால், சட்டமன்ற உறுப்பினர் சிறுணியம் பலராமன் மற்றும் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவன உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
முழுவதும் தானியங்கி மூலம் செயல்படும் இந்த சேமிப்பு முனையம் 117 டிகேஎல் கொள்ளளவு திறன் கொண்டது. தற்போது தண்டையார்பேட்டையில் உள்ள முனையத்தைவிட பெரிதாகவும், ஒரு மாற்று முனையமாகவும் இது திகழும். கடல் மார்க்கமாகவே பெட்ரோலியப் பொருட்களை கொண்டு வந்து, இந்த புதிய முனையம் மூலம் விநியோகம் நடைபெறுவதால், சாலை மார்க்கமாக பெட்ரோலியப் பொருட்களை கொண்டு வருவதைவிட செலவினம் குறையும். இந்த கடலோர எரிபொருள் சேமிப்பு முனையம் மூலம் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு எளிதாக பெட்ரோல், டீசல் சரக்குகள் சரக்குந்துகள் மூலம் எளிதாக கொண்டு செல்வதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
