செய்திகள் நாடும் நடப்பும்

‘எண்ணும் எழுத்தும்’ திட்டம் கொண்டு வந்து பள்ளி கல்வியில் புரட்சிக்கு வழிகாணும் ஸ்டாலின்


ஆர். முத்துக்குமார்


தமிழகத்தில் பள்ளிகள் துவங்கி விட்டன. கடந்த இரண்டு ஆண்டுகளாக நிலவிய கொரோனா கட்டுப்பாடுகள் நீங்கிய பிறகு சில நாட்களுக்கு மட்டுமே பள்ளிகள் திறக்கப்பட்டன. பரீட்சைகள் நடத்தவே திறந்தனர்.

ஒருவழியாக ஆசிரியர்களும் மாணவர்களும் மீண்டும் நேருக்கு நேர் வகுப்புக்கு தயாராகி விட்டனர்.

ஆன்லைன் வகுப்புகளில் இருந்த பல்வேறு சிரமங்கள் என்ன? என்பதை இன்றைய கல்வியாளர்கள் அறிவார்கள். அதன் பயனையும் உணர்ந்தவர்கள் ஆன்லைன் வகுப்பை எப்படி கல்வி கட்டமைப்பிற்குள் கொண்டு வருவது என்று யோசிக்க ஆரம்பித்து வருகின்றனர்.

ஆன்லைன் என்பது கணினி வழி பாடம் சொல்லிக் கொடுப்பது என்பது மட்டும் கிடையாது.

ஓரு நல்ல ஆசிரியரின் பாடம் எடுத்ததை மொத்த தமிழக மாணவர்களுக்கும் பயன் பெற வைக்கும் வகையில் உபயோகிக்கலாம் என்பதையும் மறந்து விடக்கூடாது. இனி வருங்காலத்தில் ‘ஸ்மார்ட்’ பள்ளியறை என்பதில் ஆசிரியர் வகுப்பு எடுப்பதும் அதிநவீன வீடியோ வகுப்பு முறையும் கலந்ததாக இருக்கும்; இருக்க வேண்டும்.

ஒரு குறிப்பிட்ட பாடத்தை மிக சுவாரசியமான முறையில் ஓர் ஆசிரியர் எடுத்ததை மாணவர்கள் அனைவருக்கும் உபயோகமாகும் வகையில் அதை உபயோகிப்பது தான் புத்திசாலித்தனம்.

இனி வரும் காலத்தில் சுண்ணாம்பு கட்டி போய், பென்சில், பிறகு பேனா என்று மாறிவிட்டது போல் இனி தொடுதிரை கையளவு கணினி உபகரணம் கொண்டு தான் வாழ வேண்டிய தொலைத் தொடர்பு யுகத்தில் இருப்பதால் கல்வி துறையில் பள்ளிகள் மட்டத்தில் இருந்தே கணினி பயிற்சியும் உபயோகமும் கட்டாயம் என்ற காலம் வந்து விட்டதால் அதைத் தமிழகம் உணர்ந்து உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

பள்ளிப் பாடத்திட்டத்தை எப்படிக் கொண்டு செல்வது என்பதை விட எதையெல்லாம் பள்ளி மாணவர்களிடம் கொண்டு சேர்ப்பது? என்பதைப் பற்றி முதல்வர் ஸ்டாலின் முக்கியத்துவம் தந்து வருவது பாராட்டுக்குரியது ஆகும்.

பள்ளிகள் திறந்த முதல் நாளில் திருவள்ளூர் மாவட்டத்தில் அழிஞ்சிவாக்கத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று மாணவர்களுடன் சரிசமமாக அமர்ந்து பாடங்கள் துவங்குவதைக் கவனித்தார்.

பிறகு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கான ‘எண்ணும் எழுத்தும்’ என்ற திட்டத்தையும் அங்கேயே துவக்கியும் வைத்தார். அத்துடன் காணொலி, கைபேசி செயலி, திட்டப்பாடல் ஆகியவற்றையும் துவக்கி வைத்தார். மற்றும் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு ‘எண்ணும் எழுத்தும்’ திட்ட பாட நூல்கள், கற்றல் கற்பித்தல் உபகரணங்கள், ஆசிரியர் கையேடு, சான்றிதழ் உள்ளிட்டவற்றையும் வழங்கினார்.

நீர் எப்படி தாகத்தை போக்குகிறதோ, அதேபோல, கல்வி தாகத்தை, அறிவு தாகத்தை தீர்க்கக் கூடிய வகையில் ‘எண்ணும் எழுத்தும்’ திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு குழந்தையும் கற்றல் திறனை மேம்படுத்திக் கொள்ளும் வகையில் இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

இத்திட்டம் 2022-–23–ம் கல்வியாண்டில் இருந்து தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கு அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1, 2, 3 ஆகிய வகுப்புகளில் நடைமுறைப்படுத்தப்படும். தமிழ், ஆங்கிலம், கணக்கு ஆகிய 3 பாடங்களுக்கு தமிழ், ஆங்கிலம் என இரு மொழி வழியாக பயிற்சி நூல்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆடல், பாடல், கதையாக சொல்லுதல், நடித்துக் காட்டுதல், பொம்மலாட்டம், கைவினைப் பொருட்கள் என பல்வேறு வடிவங்களில் இத்திட்டத்தின் பாடங்கள் பயிற்றுவிக்கப்படும்.

சிறு வயதில் மனதில் ஏற்றப்பட்ட கல்வி வாழ்நாள் முழுவதும் உதவியாகவே இருக்கும். ஆகவே தான் முதலமைச்சரும் பள்ளி கல்விக்கு விசேஷ கவனம் செலுத்தி வருவது பாராட்டப்பட வேண்டியது,

அதைத் தமிழகமே பாராட்டிக் கொண்டு தான் இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published.