பிரபாகரனுக்குப் பிரச்சனையே அவனுடைய எண்ணங்கள் தான். பின்னால் விளையும் நிகழ்வுகளை முன்னாலே அறிந்து கொள்வதாக தம்பட்டம் அடித்துக் கொள்ளும் சுய புத்தி இல்லாதவன். அதனால் தான் அவன் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் தவறாகப் போய் முடியும்
அவனுக்கு எவ்வளவோ தடவை எடுத்துச் சொன்னாலும் அவன் எதையும் காதில் வாங்காமல் போய்க் கொண்டே இருப்பான். தான் ஓர் அறிவாளி என்ற அச்சில் வாழ்ந்து வருபவன்.
அவனைச் சுற்றி நல்ல ஆட்கள் இருந்தாலும் அவனுடைய எண்ணம் மட்டும் தவறாக நினைத்துக் கொண்டிருக்கும்.அந்த நிலையை மாற்ற வேண்டும் என்று யார் சொன்னாலும் கேட்க மாட்டான் பிரபாகரன் .
ஒரு முறை மதிய நேரம் சுரேஷ் பிரபாகரனுக்கு போன் செய்துவிட்டு அவனைப் பார்க்க வந்திருந்தான்.
அது மதிய உணவு உடை இடைவெளி என்பதால் சுரேஷைப் பார்த்த பிரபாகரன்
சரியா சாப்பிட நேரத்துக்கு வந்து இருக்கான். டைம் பார்த்து தான் மீட் பண்ண வருவாங்களா என்று தனக்குத்தானே புலம்பிக் கொண்டு சுரேஷை வரவேற்றான்.
இருவரும் செல்ல வேண்டிய இடத்திற்கு சுரேஷின் இருசக்கர வாகனத்தில் சென்றார்கள்.
லஞ்ச் முடிந்ததா என்று கேட்டால் தான் வாங்கி கொடுக்க வேண்டும் எதற்கு கேட்க வேண்டும் என்று அமைதியாகவே பயணமானான் பிரபாகரன்.
அவனுக்கு பசி எடுத்தாலும் சுரேஷிடம் சொல்வதற்கு பயமாக இருந்தது. ஏனென்றால் சாப்பிட்டு முடித்த பிறகு பில் கொடுக்க வேண்டுமே யார் கொடுப்பது? என்ற கவலை, வருத்தம் அதனால் எதுவும் பேசாமல் இருந்தான்.
ஒரு கட்டத்திற்கு மேல் அவனால் கேட்காமல் இருக்க முடியவில்லை .காரணம் அவர்கள் ஒரு மணி நேரம் பயணம் செய்தால் தான் அவர்கள் போக வேண்டிய இடத்தை அடைய முடியும்.
இப்போதே மணி மதியம் இரண்டை கடந்திருந்தது. வேறு வழி இல்லை என்று நினைத்த பிரபாகரன்
சுரேஷ் நீங்க சாப்பிடீங்களா ?என்ற போது
இல்ல சாப்பிடல என்றான் சுரேஷ்.
சுரேஷ் சொல்லும் வார்த்தையை கேட்கும் போதே பிரபாகரனுக்குள் உதறல் எடுத்தது.
சாப்பிடலாம் என்று பிரபாகரன் சொல்ல சுரேஷ் தன் இருசக்கர வாகனத்தை ஒரு ஹோட்டலில் நிறுத்தினான்.
இருவரும் சாப்பிடப் போனார்கள் அதுவரை மலர்ந்திருந்த பிரபாகரன் முகம் இப்போது சூம்பி சுருங்கி இருந்தது.
காரணம் தான் தான் பில் கொடுக்க வேண்டும் என்று தவறாக நினைத்துக் கொண்டிருந்தான். பிரபாகரனால் சாப்பிடவே முடியவில்லை. மிகவும் வேகமாக சாப்பிட்ட சுரேஷ் கை கழுவிக் கொண்டு வெளியே வந்தான்
சாப்பிட்டுட்டாரு துரை என்று நினைத்த பிரபாகரன், அவனும் சாப்பிட்டு விட்டு பாதி மனதாக கல்லாவிற்கு சென்றபோது
சார் பில் கொடுத்துட்டேன் வந்துருங்க என்றான் சுரேஷ்
அதைக் கேட்ட பிரபாகரனுக்கு ஒரு பக்கம் மகிழ்ச்சியாகவும் இன்னொரு பக்கம் அவமானமாகவும் இருந்தது.
என்ன நாமதான் பில் கொடுக்கணும்னு நெனச்சாேம். ஆனா சுரேஷ் கொடுத்துட்டானே என்று குற்ற உணர்வு அவனை குடைந்தது.
போலாமா என்று சுரேஷ் கேட்டபோது
போகலாம் என்றான் பிரபாகரன்.
ஆனால் அவன் எண்ணம். மட்டும் தவறான சிந்தனையில் இருந்தது. இப்போது நேர் படுத்திக் கொண்டான்.
இருசக்கர வாகனமும் நேர் திசையில் போய்க் கொண்டிருந்தது.