சிறுகதை

எண்ணங்கள் – ராஜா செல்லமுத்து

பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது உமா பலசரக்கு கடை. அந்த தெருவில் வீட்டுக்கு ஒரு கடை என்பது மாதிரி விட்டுவிட்டு கடை வைத்திருந்தார்கள். இருபது முப்பது வீடுகள் இருக்கும். அந்த தெருவில் கடைகள் பத்து பதினைந்து இருக்கும்.

வீட்டில் சும்மா இருக்கிறதுக்கு பதிலா கட வச்சு அதில் ஏதாவது இரண்டு காசு சம்பாதிக்கலாம் என்பதை விட வீட்டில் இருக்கிறது போரடிக்குது. சும்மா கடையில் உட்காரலாம்ன்னு சொல்வதற்கு அங்கு கடை வைத்திருக்கிறாள் உமா என்று ஆட்கள் பேசிக் கொண்டார்கள்.

மாவு வாங்க ஒரு கூட்டம். பால் பாக்கெட் வாங்க ஒரு கூட்டம். சர்க்கரை வாங்க ஒரு கூட்டம் நின்றிருந்தது.

ஐந்தாறு பெண்களுக்கு பின்னால் மனோஜ் வந்தான்.

அவன் ஒரு பால் பாக்கெட் வேண்டும் என்று பெண்களுக்குப் பின்னால் நின்று கொண்டு கேட்டுக் கொண்டிருந்தான்.

அவர்கள் அதை யாரும் பெரிதாக எடுத்ததாகத் தெரியவில்லை.

‘இப்பத்தான் வந்தாய்; வரிசையில நின்னு வாங்கிட்டு போ. வந்ததுமே பாலை வாங்கி, காச்சி குடிச்சுடணுமா’ என்று இளக்காரம் பேசினார்கள் பெண்கள்.

மனோஜுக்கு முன்னால் இருந்த பெண்களுக்கு வியாபாரம் செய்து கொண்டிருந்தார்கள்.

அங்கே இருந்த ஆட்கள் ஒருவாராகப் பேசிக் கொண்டார்கள்.

உமாவுக்கு கட வச்சுத்தான் பணம் சம்பாதிக்கும்ற நிலை இல்ல. ஏற்கனவே பணம் இருக்கு. சும்மா இந்தக் கடை வச்சிருக்குறா’ என்று ஒரு பெண் சொல்ல, ‘ஆமா உண்மைதான். பொழுது போவதற்காகத் தான் இந்தக் கடைய வச்சிருக்கா’ என்று மற்றவர் சொன்னார்.

‘இதெல்லாம் எதுக்கு இந்த வெட்டிப் பேச்சு. கடை வச்சிருந்தா ஏவாரம் பண்ணலாம். பொருளக் கொடுக்கலாம். நாலு காசு சம்பாதிக்கலாம். அதுக்காகத்தான் எல்லாரும் கடை வப்பாங்க. இந்தக் கடை இருக்கிறது சும்மா அப்படின்னு சொல்றது எல்லாம் சும்மா. முதல்ல பால் குடுங்க’ என்றான் மனோஜ்.

அவன் பேசுவதை ஒருமாதிரியாக பார்த்த ஒரு பெண்,

‘நீ என்னப்பா இப்படி பேசுற?’ என்று சலித்துக் கொண்டாள்.

‘இவங்க எதுக்கு கட வச்சிருக்காங்க காலையில தெறக்குறாங்க. நைட்டு மூடுறாங்க பணம் சம்பாதிக்க தானே. இல்ல எதுக்கு இவங்க சும்மா வச்சிருக்காங்க கதவ மூடிட்டு வீட்டுக்குள் வச்சுக்கிர வேண்டியது தானே? எல்லா மனுசனங்களும் அப்படிதான் சாெல்லுவாங்க’ என்று மனாேஜ் சொன்னபோது

உமா அவனை முறைத்துப் பார்த்தாள். எதுவும் பேசாமல் நின்று கொண்டிருந்தான் மனாேஜ்.

எங்களுக்கு அப்படி எல்லாம் இல்ல. எங்களுக்கு போதுமான சொத்து இருக்கு. இங்க வந்து சும்மாதான் கட வச்சுருக்கம் என்று முறைத்துக் கொண்டு சாென்னாள் உமா.

ஆட்களுக்கு வியாபாரம் செய்து கொண்டிருந்தாள். அப்போது அந்தக் கடைக்கு ஒருவர் வேகமாக வந்தார்.

‘உங்களுக்கு ஒரு சங்கதி தெரியுமா?’ என்றார்.

‘என்ன?’ என்று உமா கேட்டபோது…..

‘நம்ம எட்டாவது தெருவில இருக்கிறார்ல சுப்பிரமணி’.

‘ஆமா, இப்ப தான் கடையில பொருள் வாங்கிட்டு போனாரு’ என்று உமா சொன்னாள்.

‘அவரு இப்ப தவறிட்டாரு’ என்று அவர் சொன்னபோது , அதைக் கேட்ட உமா ஒரு வார்த்தை கூட பேசாமல், ‘ஐய்யய்யோ 250 ரூபா போச்சே. வாங்கின கடன் தரல. அவரு 250 ரூபா ஒரு தரனும். 250 ரூபாய் போச்சு’ என்று சொன்னாள்.

அப்போது அங்கு நின்றிருந்த பெண்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.

மனோஜ் சொன்னான்

‘பாத்தீர்களா? இது தான் உலகம். பணக்காரன் பணக்காரன்னு சொன்னீங்க. ஒரு மனுஷன் இறந்துட்டான் அவனப் பத்தி வருத்தப்படாம, அவன் செத்ததுனால 250 ரூபா போச்சுங்கிறாங்க. இது தான் உலகம்’ என்று சொன்ன போது

இனிமேல் இவன நிக்க வைத்தால் நம் மானத்தை வாங்கி விடுவான் பாேல என்று மனோஜின் கையில் பால் பாக்கெட்டைத் தினித்தாள் உமா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *