சென்னை, ஜூன் 27–
கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய மரணங்கள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க தவறிய தி.மு.க. அரசை கண்டித்தும், இந்த விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை நடத்த கோரியும் அண்ணா தி.மு.க.பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அண்ணா தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் இன்று நடத்தினார்கள். எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இன்று காலை தொடங்கிய இந்த உண்ணாவிரதப் போராட்டம் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.
கள்ளக்குறிச்சி நகராட்சிக்கு உட்பட்ட கோட்டைமேடு கருணாபுரத்தை சேர்ந்த சிலர் கடந்த 18, 19-ம் தேதிகளில் மெத்தனால் கலந்த கள்ளச் சாராயம் குடித்துள்ளனர். இதில் உடல்நலம் பாதிக்கப்பட்டு கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனைகள், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் மொத்தம் 225 பேர் சேர்க்கப்பட்டனர். இச்சம்பவத்தில் இதுவரை 63 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதற்கிடையே இந்த மரணங்கள் தொடர்பாக சிபிஐ விசாரணை வேண்டும் என கோரிக்கை வைத்து தமிழகம் முழுவதும் அண்ணா தி.மு.க. போராட்டம் நடத்தியது. சட்டசபையிலும் கடந்த 4 நாட்களாக கள்ளக்குறிச்சி மரணங்கள் தொடர்பாக விவாதம் நடத்த வேண்டும் எனவும் அமளியில் அண்ணா தி.மு.க.வினர் ஈடுபட்டனர்.
இதையடுத்து அண்ணா தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரையும் இந்த கூட்டத் தொடர் முழுவதும் சஸ்பெண்டு செய்து சபாநாயகர் அப்பாவு நடவடிக்கை எடுத்தார்.
இந்த நிலையில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க தவறிய தி.மு.க. அரசை கண்டித்தும், இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்த வலியுறுத்தியும், சட்டசபை கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்டு செய்யப்பட்டதை கண்டித்தும் அண்ணா தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் இன்று சென்னையில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனர்.
இதையடுத்து சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே அண்ணா தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் உண்ணவிரதம் இருக்க போலீசார் அனுமதி அளித்தனர். மேலும் உண்ணாவிரதத்துக்கு பல்வேறு கட்டுப்பாடுகளையும் போலீசார் விதித்தனர். உண்ணாவிரதத்தை அமைதியாக நடத்த வேண்டும், தனி நபர்களை தாக்கி பேசக்கூடாது, உருவ பொம்மை எரிக்கக் கூடாது, கூம்பு வடிவ ஒலிபெருக்கி பயன்படுத்தக்கூடாது, மேடை அமைக்கக்கூடாது, பேனர்கள் வைக்கக்கூடாது, கொடி கட்டக்கூடாது, பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடாது என்பது உள்பட 23 கட்டுப்பாடுகளை விதித்தனர்.
போலீசாரின் கட்டுப்பாடுகளை பின்பற்றி அண்ணா தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் இன்று காலை முதல் மாலை 5 மணி வரை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று காலை 9 மணிக்கு அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் உண்ணாவிரத போராட்டம் தொடங்கியது. இந்த உண்ணாவிரத போராட்டத்தில் அண்ணா தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 61 பேரும் கருப்பு சட்டை அணிந்து பங்கேற்றனர்.
––––––––
போராட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி.வேலுமணி, கே.ஏ.செங்கோட்டையன், பி.தங்கமணி, கே.பி.முனுசாமி, பொள்ளாச்சி ஜெயராமன், டி.ஜெயக்குமார், செல்லூர் ராஜூ, கடம்பூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அண்ணா தி.மு.க. முக்கிய நிர்வாகிகளும் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டனர். உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட எம்.எல்.ஏ.க்கள் ஒவ்வொருவராக பேசினார்கள். மேலும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உண்ணாவிரத போராட்டத்துக்கு வந்திருந்தனர். சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிர்வாகிகளும், தொண்டர்களும் அங்கு குவிந்திருந்தனர். உண்ணாவிரதத்தில் பரங்கிமலை கிழக்கு ஒன்றிய செயலாளர் பெரும்பாக்கம் ராஜசேகர், துரைப்பாக்கம் டி.சி.கோவிந்தசாமி, முன்னாள் கவுன்சிலர் சின்னையன், இலக்கிய அணி மாநில துணை செய லாளர் கே.எஸ்.மலர்மன்னன், வக்கீல் பழனி, டாக்டர் சுனில், வட பழனி சத்திய நாராயணமூர்த்தி, ராயபுரம் பாலாஜி ஆகியோர் கலந்து கொண்டனர்.உண்ணாவிரத போராட்டம் நடைபெற்ற இடத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. அங்கு சுமார் 400-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
––––––––––
இந்த உண்ணாவிரதப் போராட்டம் தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் இபிஎஸ் வெளியிட்டுள்ள பதிவில், “கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய மரணங்கள் குறித்து எனது தலைமையிலான அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் நேர்மையான விவாதம் நடத்த பல முறை சட்டமன்றத்தில் முயன்றும் திமுக முதல்வர் தயங்குவது ஏன்?
கள்ளச்சாராய மரணங்கள் 60-ஐ தாண்டியுள்ள நிலையில், இன்றுவரை கள்ளக்குறிச்சி சென்று மக்களை சந்திக்காதது ஏன்? பயமா ஸ்டாலின்?. கள்ளச்சாராய மரணங்கள் குறித்து சிபிஐ விசாரிப்பதோடு, இதற்கு பொறுப்பேற்று முதல்வர் ஸ்டாலின் உடனடியாக பதவி விலக வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
போராட்டம் தொடர்பாக பேட்டியளித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “கள்ளக்குறிச்சி விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். சிபிஐயிடம் வழக்கை ஒப்படைக்கும் வரை எங்கள் போராட்டம் தொடரும். சட்டசபையில், இந்த பிரச்சினையை எழுப்ப வாய்ப்பு தரவில்லை. சபாநாயகர் அப்பாவு ஒருதலைபட்சமாக நடந்துகொண்டுள்ளார். ஜனநாயகம் கொல்லப்படுகிறது. இது தமிழகத்தில் பற்றி எரியும் பிரச்சினை. அப்படிப்பட்ட பிரச்சினையை பற்றி விவாதிக்க ஒருமணிநேரம் கேள்வி நேரத்தை ஒத்திவைக்க மறுக்கிறார் சபாநாயகர்” என்று தெரிவித்துள்ளார்.