சென்னை, ஜூலை 2–-
எடப்பாடி பழனிசாமி அணியுடன் இணைப்பு என்ற பேச்சுக்கே இடம் இல்லை என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
அண்ணா தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அவ்வப்போது நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. சமீபத்தில் கூட ஓ.பன்னீர்செல்வம் திருச்சியில் மாநாடு நடத்தி காட்டினார்.
இந்தநிலையில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் ஆலோசனை கூட்டம், சென்னை எழும்பூரில் நேற்று நடந்தது.
இந்த கூட்டத்தில் அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன், எம்.எல்.ஏ.க்கள் வைத்திலிங்கம், மனோஜ்பாண்டியன், அய்யப்பன், முன்னாள் எம்.எல்.ஏ. ஜே.சி.டி.பிரபாகர், முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், மகளிரணி செயலாளர் ராஜலட்சுமி, அமைப்பு செயலாளர் வளசை மஞ்சுளா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேசும்போது, ‘ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு, தர்மயுத்தம் நடத்தினோம். அண்ணா தி.மு.க. ஆட்சியை காப்பாற்ற எடப்பாடி பழனிசாமியுடன் நல்ல எண்ணத்துடன் இணைந்தோம். ஆட்சியை காப்பாற்றினோம். ஆனால், அந்த நன்றி கொஞ்சமும் இல்லாமல், 4½ ஆண்டுகள் எனக்கு அவர்கள் பாடம் கற்றுக்கொடுத்திருக்கிறார்கள்.
ஒவ்வொரு முறை தீர்ப்பு வரும்போதெல்லாம், உங்கள் நிலைப்பாடு என்ன? என்று என்னை கேட்கிறார்கள். இப்போது நாங்கள் மக்களை நாடி சென்று கொண்டிருக்கிறோம். அதுதான் எங்கள் பதில். திருச்சி மாநாடு அதை நிரூபித்து காட்டி இருக்கிறது.
ஒவ்வொரு அண்ணா தி.மு.க. தொண்டனின் உள்ளமும் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கிறது. ஒரு நல்ல முடிவுரையை தொண்டர்கள் எழுதி கொண்டிருக்கிறார்கள்”, என்றார்.
பின்னர் ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-–
திருச்சி மாநாட்டை தொடர்ந்து அடுத்த மாநாடு கொங்கு மண்டலத்தில் நடைபெற இருக்கிறது. இதையொட்டி கொங்கு மண்டல நிர்வாகிகளை தனியாக அழைத்தும் பேசினோம். எனவே மாநாடு எங்கு நடைபெறும்? என்பதை நிர்வாகிகளுடன் கலந்து பேசி அறிவிப்போம். விரைவில் மாநாட்டின் தேதி அறிவிக்கப்படும்.
நாடாளுமன்ற தேர்தலை பொறுத்தவரை எங்களிடமும் கூட்டணி குறித்து பா.ஜ.க. தலைவர்கள் பேசி வருகின்றனர். தேர்தலின்போது கூட்டணி அறிவிப்பை வெளியிடுவோம். கொங்கு மண்டலம் என்பது எம்.ஜி.ஆர்.- ஜெயலலிதாவின் கோட்டை. அங்குள்ள தொண்டர்கள் எங்களுடன்தான் இருக்கிறார்கள். எடப்பாடி பழனிசாமி தரப்பினரோடு இல்லை என்பதை ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நிரூபித்துள்ளது.
கடந்த காலத்தில் எடப்பாடி பழனிசாமி அரசை காப்பாற்றினோம். அதற்குரிய செயல் அவரிடம் இல்லை. எடப்பாடி பழனிசாமியுடன் இணைப்பு என்ற பேச்சுக்கே இடம் இல்லை. இனிமேலும் அந்தத் தவறை செய்ய மாட்டோம். நல்ல பாடம் கற்றிருக்கிறோம்.
அ.ம.மு.க.வுடன் தோழமை உணர்வுடன் இணைந்திருக்கிறோம். டி.டி.வி. தினகரன் தனிப்பட்ட முறையில் கட்சி நடத்துகிறார். நாங்கள் அண்ணா தி.மு.க.வை ஒருங்கிணைத்து வருகிறோம். அதில் வெற்றியும் கண்டிருக்கிறோம்.
தி.மு.க. ஆட்சியில் நடந்து வரும் தவறுகளை தொடர்ந்து அறிக்கை வாயிலாக சுட்டிக்காட்டி வருகிறேன். ஆனால் எங்களை தி.மு.க.வின் ‘பி’ டீம் என்கிறார்கள். நாங்கள் தி.மு.க.வின் ‘பி’ டீம் அல்ல. ஏ முதல் இசட் வரை எடப்பாடி பழனிசாமிதான் இருக்கிறார்.
தி.மு.க.வுடன், அவர் எவ்வளவு நெருக்கமாக இருக்கிறார்? என்பது அனைவருக்கும் தெரியும். அண்ணாமலை போன்றவர்கள் அண்ணா தி.மு.க.வை விமர்சித்து வருவது பற்றி கேட்கிறீர்கள். அண்ணா தி.மு.க.வை குறைத்து மதிப்பிடுவதற்கு அரசியல் ரீதியாக யாருக்கும் தைரியமில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.