செய்திகள்

எடப்பாடி பழனிசாமியுடன் பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளர்கள் சந்திப்பு

Makkal Kural Official

சென்னை, அக். 7–

அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சென்னையில் இன்று பா.ஜ.க. மேலிட பொறுப்பாளர்கள் சந்தித்து பேசினர்.

தமிழக சட்டசபைத் தேர்தல் அடுத்தாண்டு நடைபெறவுள்ள நிலையில், அண்ணா தி.மு.க.வும் பா.ஜ.க.வும் இணைந்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளன.

இதனிடையே பா.ஜ.க. சார்பில் தேர்தல் பொறுப்பாளராக தேசிய துணை தலைவர் பைஜெயந்த் பாண்டா எம்.பி., இணை பொறுப்பாளர் மத்திய இணை அமைச்சர் முரளிதர் மொஹோல் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

தேர்தல் பிரச்சாரம், கூட்டணி விவகாரம் தொடர்பாக ஆலோசனை செய்வதற்காக அவர்கள் முதல் முறையாக சென்னைக்கு நேற்று வந்தனர். தியாகராயநகரில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் நேற்று மாலை மாநில நிர்வாகிகளுடன் அவர்கள் முதல்கட்ட ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையில் பா.ஜ.க. மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய அமைச்சர் எல்.முருகன், பா.ஜ.க. மாநில பொறுப்பாளர்கள் அரவிந்த் மேனன், சுதாகர் ரெட்டி, அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம், முன்னாள் தலைவர்கள் அண்ணாமலை, டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், பொன்.ராதாகிருஷ்ணன், மூத்த தலைவர் எச்.ராஜா, வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., நடிகர் சரத்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.

எடப்பாடியுடன் சந்திப்பு

இந்த நிலையில் அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சென்னையில் இன்று பா.ஜ.க. மேலிட பொறுப்பாளர்கள் சந்தித்து பேசினர். சென்னை, கிரீன்வேஸ் சாலையில் உள்ள அண்ணா தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு பா.ஜ.க தேர்தல் மேலிட பொறுப்பாளர் பைஜெயந்த் பாண்டா மற்றும் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் வருகை தந்தனர். அப்போது நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம் மேற்கொள்வது தொடர்பாக எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அண்ணா தி.மு.க. – பா.ஜ.க. இணைந்து கூட்டு பிரச்சாரத்தை முன்னெடுக்க திட்டமிடப்பட்டு வருகிறது. மேலும் எடப்பாடி பழனிசாமியுடன் தொகுதி பங்கீடு, கூட்டணியில் மற்ற கட்சிகளை இணைப்பது உள்ளிட்டவை குறித்து பாஜக மேலிடப் பொறுப்பாளர்கள் ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *