செய்திகள்

எடப்பாடி பழனிசாமியுடன் ஜி.கே.வாசன் சந்திப்பு

சென்னை, மார்ச் 16–

அண்ணா தி.மு.க. கூட்டணியில் த.மா.கா. இடம்பெற்றுள்ள நிலையில், அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் நேற்று மாலை சென்னை அடையாறு கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் இல்லத்துக்கு சென்று அவரை சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பின்போது, அமைச்சர்கள் பி.தங்கமணி, கடம்பூர் ராஜூ, கே.பி.அன்பழகன் மற்றும் அண்ணா தி.மு.க. நிர்வாகிகள், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் ஞான தேசிகன், கோவை தங்கம், விடியல் சேகர் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

பின்னர், சாலிகிராமம் சென்று கூட்டணியில் உள்ள மற்றொரு கட்சியான தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தையும் சந்தித்து பேசினார்.

இரு சந்திப்புகளும் மரியாதை நிமித்தமாக நடந்ததாக கூறப்படுகிறது.

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை சந்தித்த பிறகு ஜி.கே.வாசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தின் முக்கிய அரசியல் தலைவர் என்கிற முறையில் விஜயகாந்தை சந்திக்க வந்தேன். அவர் அமெரிக்காவில் சிகிச்சை எடுத்து வந்தபோது தொடர்ந்து அவரது உடல் நலம் குறித்து விசாரித்தேன். அவர் உடல்நலத்துடன் இருப்பதை பார்த்து மகிழ்ச்சி அடைகிறேன். நிச்சயம் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்.

மக்களின் எண்ணத்தின் அடிப்படையில் இந்த கூட்டணி அமைந்துள்ளது. கூட்டணி கட்சிகளின் பலம் கூட்டணியின் வெற்றியாக அமையும். வெற்றி கூட்டணியாக இந்த கூட்டணி வெளிவரும். த.மா.கா.வின் தேர்தல் அறிக்கை வளமான தமிழகம் வலிமையான பாரதம் என்ற அடிப்படையில் இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *