செய்திகள்

எடப்பாடி சந்தித்து நடிகை கவுதமி அண்ணா தி.மு.க.வில் இணைந்தார்

சென்னை, பிப்.15-

எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்த நடிகை கவுதமி அண்ணா தி.மு.க.வில் இணைந்தார்.

பாரதீய ஜனதாவில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வந்த நடிகை கவுதமி, சமீபத்தில் அக்கட்சியை விட்டு விலகினார். நில அபகரிப்பு தொடர்பான பிரச்சினையில் தனக்கு கட்சி உதவவில்லை என்று அப்போது அவர் குற்றம் சாட்டினார். இந்த நிலையில் அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் கவுதமி நேற்று சந்தித்து அண்ணா தி.மு.க.வில் இணைந்தார்.

பின்னர் நடிகை கவுதமி நிருபர்களிடம் கூறியதாவது:-

எல்லோரும் இணைந்து ஒன்றாக வேலை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்பட்டு வரும் எடப்பாடி பழனிசாமியை மக்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அவரது செயல்பாடு என்னை கவர்ந்தது. அரசியல் மூலமாக பொதுமக்களுக்கு, அவர்களது உரிமைகளை கொண்டு செல்ல அண்ணா தி.மு.க. சரியான கட்சி என்ற நம்பிக்கை வந்திருக்கிறது. நான் கிட்டத்தட்ட பாரதீய ஜனதாவில் 25 ஆண்டுகளாக இருந்திருக்கிறேன். சமீபத்தில் சில காரணங்களுக்காக அக்கட்சியில் இருந்து விலகினேன். ஆனால் சரியான காரணங்களுக்காக சரியான நேரத்தில் அ.தி.மு.க.வில் இணைந்தது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.

ஒரு பொறுப்பை எடுத்துக்கொண்டால் நான் இறங்கி வேலை செய்வேன். ஜெயலலிதாவுக்கு பிறகு கட்சியை சிறப்பாக வழி நடத்தி வரும் எடப்பாடி பழனிசாமியை பார்க்கும் போது முழுமையான நம்பிக்கை வந்திருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *