நாடும் நடப்பும்

எடப்பாடி, ஓபிஎஸ் இரட்டை குழல் பீரங்கி பிரச்சாரம்: அண்ணா தி.மு.க.வில் புதுத் தெம்பு

தமிழகமெங்கும் ‘இரட்டை இலை’ அலை

அதிர்ச்சியில் தி.மு.க. தேர்தல் ஆலோசக கம்பெனி

தமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் நாள் ஏப்ரல் 6 நெருங்கிவிட்ட நிலையில் அனைத்து கட்சிகளின் பிரச்சாரங்களும் உச்சகட்டத்தை எட்டி வருகிறது.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் அண்ணா தி.மு.க.வின் வெற்றிக்காக தமிழகமெங்கும் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்கள் செல்லும் இடங்களில் எல்லாம் முன்பு ஜெயலலிதாவிற்கு கிடைத்த அதே உற்சாக வரவேற்பு, இவர்களுக்கும் கிடைத்துக் கொண்டிருக்கிறது.

ஜெயலலிதாவின் பிரச்சார பாணியிலேயே வேனில் எல்லா தொகுதிகளுக்கும் சென்று வீதிவீதியாக தங்களது வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி வாக்கு வேட்டையாடி வருகிறார்கள்.

எதிர்அணியில் தி.மு.க. தரப்பில் அதன் தலைவர் ஸ்டாலினும் தீவிர பிரச்சாரத்தில் இருப்பதை பார்க்கிறோம். அவர் திருச்சியில் பிரச்சாரத்தை துவக்கிய நாளில் இளைஞர்களை கவரும் விதத்தில் ‘ரேம்ப் வாக்’ செய்தியும் மாடல் கதாநாயகன் போன்று தோன்றினார்.

ஏழைப் பாமர மக்கள் இக்காட்சியை நேரிலும் டிவி ஒளிபரப்புகளிலும் பார்த்தபோது ஆச்சரியத்தில் வாயை திறந்து பார்த்து இருந்த நேரத்தில் ஊடகங்களில் கருத்து கணிப்பை எடுத்து இருக்க வேண்டும்!

10 ஆண்டுகளாக பிரமாத ஆட்சி

2019–ல் பாராளுமன்ற வெற்றிகள், துவக்க நாளில் மக்களின் ஆச்சரிய பார்வை போன்றவற்றை வைத்தே வடநாட்டு தேர்தல் நிபுணர்கள் இது தி.மு.க.விற்கு சாதகமான தேர்தல் களமாக இருப்பதாக கருதி தேர்தல் கணிப்பாக கொடுத்து வருகிறார்கள்.

தமிழகம் 2011 முதல் அண்ணா திமுக நடத்தி வரும் நல்லாட்சியை பாராட்டும் வகையில் இம்முறை தேர்தலில் வாக்களிக்க இருக்கிறார்கள். இரட்டை இலைக்கே எங்கள் ஓட்டு என்று கிராமங்களில் குரல் ஒலிக்க ஆரம்பித்து விட்டது.

இது அதிவேக தொலைத் தொடர்பு காலக்கட்டம். பல ஆண்டுகளாக அண்ணா திமுக ஆட்சிப் பொறுப்பில் இருப்பதைக் கண்டு அந்த வலுவான கட்சியின் அடித்தளத்தை அசைத்து பார்க்கவே தேர்தல் கருத்து கணிப்புகள் தி.மு.க.வினரின் இணைப் பிரச்சாரமாக அரங்கேற்றப்பட்டு வருகிறது.

இப்படிப்பட்ட தேர்தல் கணிப்புகள் எம்.ஜி.ஆருக்கும் கூட தோல்வியை தெரிவித்தது! ஆனால் ஒரு முறை கூட அவர் தோற்கடிக்கப்படவில்லை என்பதுதான் உண்மை!

ஜெயலலிதாவிற்கும் மிகப்பெரிய சறுக்கல் என்று கடந்த முறை 2016–ல் கணிக்கப்பட்டது. அதை தமிழகம் மறக்கவில்லை!

இதே பாணி கோயபல்ஸ் பொய் பிரச்சாரத்தை ஊடகங்கள் வழியாகவும் சமூக வலைதளங்கள் உதவியுடனும் அனைத்து வாக்காளர்களின் முன் வைக்கப்பட்டுவிட்டது.

ஒரு பொய்யை மீண்டும் மீண்டும் கூறப்பட்டால் உண்மையாக இருக்கக்கூடுமோ? என்ற அச்சக் கேள்வி ஒருகட்டத்தில் எழத்தான் செய்யும்!

அ.தி.மு.க. பிரச்சார வியூகம்

இன்று அக்கட்டத்தில் சென்னை மாநகரில் ஒரு பரவலான கருத்து நிலவுகிறது! ஆனால் செங்கல்பட்டிலும் காஞ்சிபுரத்திலும் கூட இந்த கருத்துகணிப்பு பொய் என்ற நிலை இருப்பது தான் உண்மை.

பலகோடி கட்டணத்தில் அழைத்துவரப்பட்ட தேர்தல் நிறுவனம் ஜெயலலிதா இல்லாத அண்ணா தி.மு.க. தானே என்று நினைத்து தேர்தல் திட்டத்தை வகுத்து இருக்கும்.

2019–ல் தி.மு.க. பெற்ற பாராளுமன்ற தேர்தல் வெற்றியின் அடிப்படையில் 234 தொகுதிகளில் தி.மு.க. வென்று விடும் என்று நம்பி இருப்பார்கள்.

இந்தித் திரைப்பட கதாநாயகன் போல் ஸ்டாலினை தயார் செய்து தேர்தல் மேடையில் நவநாகரீக பிரச்சார உத்தியை அரங்கேற்றியும் உள்ளனர்.

ஆனால் தமிழகம் விரிந்து பரந்த மாநிலமாகும். வட தமிழகத்தில் இருக்கும் பிரச்சனை தென்பகுதிக்கு அந்நியமானது!

பின்தங்கிய கிராமப்புற வாக்காளர்களில் நம்பிக்கை எம்ஜிஆர் கண்ட’ இரட்டை இலை ‘ சின்னம் ஆகும். இன்று வரை அதன் மீது இருக்கும் நம்பிக்கை சிறிது கூட குறைந்து விடவில்லை.

என்றும் அண்ணா தி.மு.க.வின் தலைவர்கள் ஆடம்பரமாக ஹம்மர் காரிலோ பலகோடி ஜாகுவார் காரிலோ வரும் தலைவர்கள் கிடையாது.

எடப்பாடி பழனிசாமி ஓர் விவசாயி, பன்னீர்செல்வமோ ஆரம்பத்தில் சிறு கடை உரிமையாளர்.

கடந்த 3 ஆண்டுகளில் எடப்பாடி பழனிச்சாமி தான் உறுதியான முடிவுகளை எடுக்கும் முதல்வராக உயர்ந்து விட்டார். பன்னீர் செல்வமோ தொடர்ந்து 10 முறை தமிழக பட்ஜெட்டை சமர்ப்பித்த அனுபவம் பெற்றவர்.

இரட்டை குழல் துப்பாக்கி

இந்த இரு ‘இரட்டை குழல்’ துப்பாக்கிகள் தான் இன்று அண்ணா தி.மு.கவின் முன் களப்பணியாளர்கள். இருவரும் டீம் கேப்டன்கள் என்ற உணர்வுடன் செயல்படும் விதம் அரசு இயந்திரத்தின் முக்கிய அதிகாரிகளின் பாராட்டையும் பெற்றுள்ளது.

இந்த இரு அனுபவசாலிகளின் அழைப்பையும் உறுதியையும் ஏற்று இவர்களை நல்லாட்சியை தொடர தமிழகம் அண்ணா திமுகவிற்கு வாக்களித்து வெற்றிபெற தமிழகம் முடிவு செய்துவிட்டது.

இதுதொடர்பாக அண்ணா திமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் கட்சியினருக்கு எழுதியுள்ள கடிதம்:

தமிழகம் முழுவதும் சுற்றிச் சுழன்று நாங்கள் இருவரும் தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறோம். செல்லும் இடமெல்லாம் உற்சாகத்துடன் நீங்கள் ஆற்றும் பணிகளைப் பார்த்து ஆனந்தம் அடைகிறோம்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அண்ணா திமுக என்ற கட்சியே இருக்காது என்று ஆரூடம் சொன்னவர்களும் பழனிசாமி அரசு ஒருநாள் தாங்குமா, ஒரு வாரம் ஓடுமா என்றெல்லாம் ஆரூடம் கூறியவர்களின் மனக் கோட்டைகளை தகர்த்து, அவற்றையெல்லாம் தாண்டி. அனைவரும் மூக்கில்விரல் வைத்து பிரமிக்கும் வகையில் மிகச்சிறந்த ஆட்சியை மக்களுக்கு நாம் கொடுத்துள்ளோம். அதனால், தற்போது தலைநிமிர்ந்து சென்று மக்களிடம் வாக்கு கேட்கிறோம்.

3 புயல்கள், ஒரு பெருமழை, வெள்ளப்பெருக்கு, பருவம் தவறிப் பெய்த பேய் மழை, கடுமையான வறட்சி என இயற்கைப் பேரிடர்கள் அனைத்தையும் சிறப்பாக சமாளித்து, நிவாரணப் பணிகளை திறம்பட மேற்கொண்டோம்.

உலகமே அஞ்சி நடுங்கி, செயலிழந்து, முடங்கிக்கிடக்க காரணமான கொடிய கொரோனா பெருந்தொற்று நோயை சமாளித்து, போராடி, மக்களுக்கு இயன்ற வகைகளில் எல்லாம் உதவி செய்து, அனைவருக்கும் தடுப்பூசி எனும் இலக்கை நோக்கி பயணிக்கிறோம். எண்ணற்ற வளர்ச்சிப் பணிகளை மாநிலம் முழுவதும் மேற்கொண்டு அதிமுக அரசு வரலாற்றில் இடம்பெற்றுள்ளது.

நன்றி உணர்ச்சிமிக்க தமிழக மக்கள் 2011 முதல் அண்ணா திமுக அரசு ஆற்றிவரும் அரும்பணிகளுக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில், 2016-ல் தொடர் வெற்றியை அளித்தனர். அதுபோல, இப்போதும் ஒருமகத்தான வெற்றியை நமக்குதர மக்கள் காத்திருக்கின்றனர் என்பதை தேர்தல் பிரச்சாரப் பயணங்களில் நாங்கள் சந்திக்கும் மக்கள் கூட்டமும் அதன் எழுச்சியும் காட்டுகின்றன.

நம் வெற்றி உறுதி செய்யப்பட்டிருக்கிறது என்பதை எங்கள் அனுபவம் உணர்த்துகிறது.

கடந்த காலத்தில் பல கருத்துக்கணிப்புகளின் முடிவுகள் முற்றிலும் தவறாகப் போனது. எம்ஜிஆர், ஜெயலலிதா காலங்களில்கூட, கருத்துக் கணிப்பு என்ற பெயரில் திணிக்க முயன்ற கருத்துகள், மக்களின் தேர்தல் தீர்ப்புகளுக்கு முன்பு, முனை மழுங்கிப் போனதையும் தமிழகம் நன்கு அறியும்.

இப்போது கருத்துக் கணிப்பு என்ற பெயரில் நடைபெறும் பொய்பிரச்சாரங்களால் மக்கள் தங்கள் அண்ணா திமுக ஆதரவு நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளப் போவது இல்லை. நம் கட்சியினர் அனைவரும் கூட்டணிக் கட்சியினரை அரவணைத்து முழுமூச்சுடன் பணியாற்றி,தொடர் வெற்றிக்கு தொய்வின்றி உழைப்போம். வெற்றி மாலையை எம்ஜிஆர், ஜெயலலிதா நினைவிடங்களில் சமர்ப்பிப்போம்.

இந்த வேண்டுகோள் கடிதம் தமிழகத்தில் புதியதோர் சிந்தனையை சூறாவளி புயலாய் சூழன்று கொண்டு இருக்கிறது.

அந்தச் சிந்தனை மக்களின் மனதில் இருந்து ஒலிக்கும் குரலாய் மாறி அதுவே மகேசனின் தீர்ப்பு என வரும்!

அதன் வலிமையை தேர்தல் நாளில் என்ன என்பதை மே 2 வாக்கு எண்ணிக்கை நாளில் தெரிவிக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *