வேலூர், பிப்.17–
தி.மு.க. ஆட்சியின் மக்கள் விரோத போக்கை மக்களிடம் எடுத்து சொல்வோம். மீண்டும் எடப்பாடி தலைமையில் அண்ணா தி.மு.க. ஆட்சியை அமைப்போம் என்று வேலூரில் நடந்த இளைஞர் பாசறை மண்டல மாநாட்டில் சூளுரைக்கப்பட்டது.
வேலூரில் இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் பாசறை மாநில செயலாளர் டாக்டர் வி.வி.பி. பரமசிவம் தலைமையில் நடந்தது. மாநகர் மாவட்ட கழக செயலாளர் எஸ்.ஆர்.கே. அப்பு வரவேற்றார்.
மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:–
போதைப்பொருள் பயன்பாடுகளும், கள்ளச்சாராயம் மரணங்களும், பெண் குழந்தைகளுக்கு பள்ளி முதல் கல்லூரி வரை பாலியல் தொல்லைகள் அதிகரித்து விட்டது.
தமிழ்நாட்டின் பெருமையை சீர்குலைக்கும் விதமாக, சட்ட ஒழுங்கை சீரழித்து, அமைதி பூங்காவாக இருந்த தமிழகத்தை சட்டவிரோத செயல்கள் நடைபெறும் கூடாரமாக மாற்றிய முதலமைச்சர் மு.க ஸ்டாலினை கழக இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் பாசறை வன்மையாக கண்டிப்பதோடு அவரை முதல்வர் பதவியில் இருந்து விலக வலியுறுத்துகிறது.
சமூக நீதியை போற்றி பாதுகாத்த தமிழக மண்ணில் இன்றைக்கு பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த மக்களும் பிறமக்களும் மோதிக்கொள்ளும் வகையில் சில சமூக விரோதிகள் செய்கிற வேலைகளை அரசு கண்டிக்காமல் தொடர்ந்து ஆதரித்துக் கொண்டிருக்கிறது.
சாதிய வன்கொடுமைகளை தடுக்க தவறிய ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசை இந்த மாநாடு வன்மையாக கண்டிப்பதோடு, சாதியின் பெயரால் தூண்டப்படுகிற வன்முறைகளுக்கு இடம் கொடுக்காமல், நாம் ஓர் தாய் பிள்ளைகளாக ஒன்றிணைந்து நிற்க வேண்டும் என அறைகூவலை இந்த மாநாடு விடுக்கிறது.
எடப்பாடியை
முதல்வராக்குவோம்
போதையினால் தள்ளாடும் தமிழகத்தை மீட்கவும், சட்ட ஒழுங்கில் சீர்கெட்டு நிற்கும் தமிழகத்தை காக்கவும், உழவனின் உழைப்புக்கு உரிய ஊதியமும் மரியாதையும் கிடைத்திட, குடிமராமத்து பணிகள் மீண்டும் புத்துயிர் பெறவும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு பணிகள் உள்ளிட்ட பல்வேறு கிராம திட்டப் பணிகளை முறையாக செய்திடவும்,
அரசு துறையில் வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளை கனிவுடன் கேட்டு ஆலோசித்து உடனடியாக நிறைவேற்றிடவும், காவல்துறை மீண்டும் தனது மிடுக்கை பெறவும், செல்லாக் காசாக மாறிய தமிழகத்தின் நிதி துறையின் செயல்பாடுகள் மீண்டும் மதிப்பு பெறவும், மின் கட்டணத்தின் மூலம் ஷாக் கொடுத்துக் கொண்டிருக்கும் நிலையை மாற்றிடவும்,
அண்டை மாநிலங்களில் கழிவுகளை கொட்டும் குப்பை மாநிலமாக தமிழகம் மாறி வரும் சூழ்நிலைகளை எல்லாம் தடுத்திட வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக இளைஞர்களின் எழுச்சி நாயகன், தமிழகத்தின் எதிர்காலம் எடப்பாடியை தமிழக முதல்வர் அரியணையில் அமர வைக்க கழக இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் பாசறை படை வேலூர் புரட்சி ஏற்பட்ட இந்த மைதானத்தில் சூளுரை ஏற்கிறது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
உறுதிமொழி
தமிழ்நாட்டில் அனுதினமும் பெண் குழந்தைகளுக்கும், மாணவிகளுக்கும், பெண்களுக்கும் எதிராக நடைபெறும் பாலியல் குற்றங்களை தடுப்பதற்கும் பெண்களை பாதுகாப்பதற்கும் அவர்களுக்கு உறுதுணையாக இருப்போம்.
அண்ணா தி.மு.க. அரசை அமைப்பதற்கு எல்லா தளங்களின் வாயிலாகவும் எல்லா வழிகளிலும் நம்முடைய முழுமையான உழைப்பை கொடுப்போம் என்றும் இந்த மாநாட்டின் வாயிலாக உறுதி ஏற்கப்பட்டது.