வாஷிங்டன், ஜூன் 22–
அமெரிக்காவில் எச்-1பி விசாவை புதுப்பிக்க வெளிநாட்டு தொழில்நுட்ப பணியாளர்கள், அந்நாட்டை விட்டு வெளியே சென்றுதான் புதுப்பிக்க வேண்டியுள்ளது. இந்த நிலையில் இந்தியர்களும், மற்ற வெளிநாட்டவர்களும் அமெரிக்காவிற்குள்ளேயே தங்கள் விசாவை புதுப்பித்துக் கொள்ளலாம் என்ற வகையில் ஒரு மாற்றம் கொண்டு வரவிருப்பதாகவும், அது தொடர்பான அறிவிப்பு இந்த வாரம் வெளியாகலாம் எனத் தெரிகிறது.
எச்-1பி விசா எனப்படுவது அமெரிக்காவில் உள்ள நிறுவனங்கள் வெளிநாட்டு பணியாளர்களை (இந்தியா உட்பட), பிரத்யேக திறமை தேவைப்படும் ஒருசில பதவிகளில் பணியில் அமர்த்தி கொள்ள அமெரிக்கா வழங்கும் ஒரு குறுகிய கால அனுமதியாகும். ஆனால், இது குடியுரிமைக்கான அனுமதி அல்ல.
எனவே ஒவ்வொரு 3 ஆண்டு-கால முடிவிலும் இந்த விசாவை புதுப்பித்துக் கொள்ள வேண்டும். இதற்காக பயனாளர்கள் தங்கள் பாஸ்போர்ட்டில் புதுப்பிக்கப்பட்ட தேதியை “ஸ்டாம்பிங்” செய்து கொள்ள வேண்டும். தற்போதுள்ள நடைமுறையில் இந்த “ஸ்டாம்பிங்” பதிவை அமெரிக்காவிற்குள்ளேயே செய்து கொள்ள அந்நாடு அனுமதிப்பதில்லை.
இதனால் பயனாளர்கள் தங்கள் சொந்த நாட்டிற்கு சென்று புதுப்பித்து அதன் பிறகே மீண்டும் அமெரிக்காவிற்குள் நுழைய முடிந்தது. இந்த பயணங்களினால் பயனாளர்களுக்கு நேர விரையமும், பொருட்செலவும் ஏற்பட்டு வந்தது.
இதுகுறித்து அமெரிக்காவிலுள்ள பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் குறிப்பாக மென்பொருள் துறையை சேர்ந்தவர்கள் அவ்வப்போது முறையிட்டு வந்தனர்.
அமெரிக்காவில் பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் நிலையில், விசா புதுப்பிக்கும் முறையில் ஒரு பெரிய மாற்றத்திற்கான அறிவிப்பு விரைவில் வரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதன்படி, இனி இந்தியர்களும், மற்ற வெளிநாட்டவர்களும் அமெரிக்காவிற்குள்ளேயே தங்கள் விசாவை புதுப்பித்துக் கொள்ளலாம் என்ற வகையில் ஒரு மாற்றம் கொண்டு வரவிருப்பதாகவும், அது தொடர்பான அறிவிப்பு இந்த வாரம் வெளியாகலாம் எனத் தெரிகிறது.