செய்திகள்

எச்சில் கறையை அகற்ற ஒவ்வொரு ஆண்டும் ரூ.1200 கோடி செலவு: இந்திய ரெயில்வே தகவல்

புதுடெல்லி, அக். 11–

பான் மற்றும் புகையிலைப் பொருள்களைப் பயன்படுத்தும் பயணிகள், ரெயில்களிலும், ரெயில் நிலையங்களிலும் துப்பும் எச்சில்களைக் கழுவி சுத்தம் செய்ய இந்திய ரெயில்வே ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1200 கோடி ரூபாயை செலவு செய்கிறது. அது மட்டுமல்ல இப்பணிக்காக பல லட்சம் லிட்டர் தண்ணீரும் வீணடிக்கப்படுகிறது.

இந்த செலவை குறைக்க மாற்று வழியாக எச்சில் துப்ப கையடக்க பை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

வெறும் ரூ.5 மற்றும் 10க்கு இந்த பைகள் பயணிகளுக்கு விற்பனை செய்யப்பட உள்ளது. கையடக்க பைகளில் சிறு மரங்களின் விதைகளும் இருக்கும். இந்தப் பையை வாங்கி வைத்துக் கொண்டு, பயணிகள் எப்போது வேண்டுமானாலும், எதை வேண்டுமானாலும் அந்தப் பையில் துப்பி தங்களது உடைமைகளோடு வைத்துக் கொள்ளலாம். தீய நுண்மிகளை அழிக்கும் மாக்ரோமோல்க்யூல் பல்ப் என்றும் தொழில்நுட்ப உதவியோடு இந்தப் பைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இதற்குள் எச்சிலைத் துப்பியதும் அது கெட்டியாகிவிடும்.

இதனை மீண்டும் மீண்டும் 15 முதல் 20 முறை வரை பயன்படுத்தலாம். ஒரு வேளை இதன் பயன் முடிந்துவிட்டது என்று தூக்கி எறிந்தாலும், அது உடனடியாக மண்ணோடு மக்கி, அதிலிருக்கும் விதை முளைக்கத் தொடங்கிவிடும்.

இதன் மூலம் ரெயில்களும் ரெயில் நிலையங்களும் மாசடைவது தவிர்க்கப்படும். இதன் மூலம் பல கோடி ரூபாய் மிச்சமாகும் என்று இந்திய ரெயில்வே நம்புகிறது.

இதற்காக வடக்கு ரெயில்வே, மத்திய ரெயில்வே மற்றும் மேற்கு ரெயில்வே மண்டலங்களில் 42 ரெயில் நிலையங்களில் கையடக்க பை வழங்கும் கடைகளும், விற்பனை யந்திரங்களும் நிறுவப்பட்டு வருகின்றன. இதற்கான ஒப்பந்தம், ‘ஈசிஸ்பிட்’ என்ற நிறுவனத்துக்கு அளிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *