சிறுகதை

எங்க எறங்கப் பாேறிங்க?- ராஜா செல்லமுத்து

வள்ளுவர் காேட்ட வழித்தடப் பேருந்தில் அளவுக்கு அதிகமான ஆட்களை ஏற்றிக்கொண்டு கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் விரைந்து கொண்டு இருந்தது ஒரு மாநகரப் பேருந்து.

முதுகில் பையைச் சுமந்து கொண்டு அடுத்தவர்களைத் தொந்தரவு செய்து கொண்டே போகும் பயணிகள் ஒருபுறம். ஆண்கள் இருக்கையையும் ஆக்கிரமித்து அமர்ந்திருக்கும் பெண்கள் ஒருபுறம் என்று 500 பேர் அடைத்த அந்த பேருந்து வாகன சந்தடிகளுக்கு நடுவில் நகர்ந்து கொண்டிருந்தது.

அப்போது பேருந்தின் பின் இருந்த நீண்ட பெண் இருக்கையில் இருந்து ஒரு பெண் எழுந்தாள். அவள் எழுந்த ஒரு இடத்திற்கு 10 பேர் சண்டை போட்டார்கள் .

அதில் ஒரு பெண்மணி,

நீங்க எங்க இறங்க போறீங்க? என்று கேள்வி கேட்க

ஏன் உனக்கு அட்ரஸ், பின்கோடு போன் நம்பர் குடுத்தா தான் தள்ளி உட்காருவியா ? என்று முறைப்பாக கேட்டாள்.

இல்லங்க நீங்க எறங்குற எடம் தெரிஞ்சா நான் அதுக்கு தகுந்த மாதிரி அட்ஜஸ்ட் பண்ணி உட்காருவேன் . அதுக்கு தான் கேட்டேன் என்றாள்.

இருக்கையில் அமர்ந்திருந்த பெண், நான் எங்க வேணாலும் இறங்குவேன் .நீ தள்ளி உட்காரு ’’என்றபோது அந்த பெண்ணிற்கு கோபம் வந்தது .

ஏங்க சின்ன கேள்வி. இதுக்கு கூட பதில் சொல்ல மாட்டீங்களா? தூரமா எறங்குவதாக இருந்தா நான் தள்ளி உட்காருவேன். பக்கமா உட்காருவதா இருந்தா நீங்க இங்கேயே உட்கார்ந்து இருக்கலாம். அதுக்குத்தான் நான் கேட்டேன் என்று கேட்டபோது ,அதற்கு பதில் சொல்லாமல் அந்தப் பெண் வாய் அடைத்துக் கொண்டே இருந்தாள்.

பேருந்தில் இருந்தவர்கள் அத்தனை பேரும் இரண்டு பேர் சண்டை போட்டதை வேடிக்கை பார்த்துக் கொண்டுதான் இருந்தார்களே ஒழிய யாரும் விலக்கி விடவில்லை. ஒருவருக்கு ஒருவர் பேசிப் பேசி வாக்குவாதம் முற்றி கடைசியில் இருவரும் ஓய்ந்தே போனார்கள்.

அந்தப் பின்னிருக்கை பெண்ணிருக்கையில் அமர்ந்திருந்த அத்தனை பேரும் ஏதேதோ பேசிக் கொண்டு வந்தார்கள். சண்டை போட்ட இரண்டு பெண்களில் ஒரு பெண்மணி செவிலி தாயாக இருப்பாள் போல தன் மருத்துவமனையில் நடந்த விவரங்கள், நோயாளிகள் மருத்துவர்கள், மருந்து மாத்திரைகள் என்று விலாவாரியாக பேசிக்கொண்டு வந்தாள்.

சண்டே பிடித்த இன்னொரு பெண் தன் வீட்டிற்கு ஏதோ பேசி வரும்போது மாவு வாங்கி வருவதாக சொல்லிக் கொண்டிருந்தாள்.

இன்னொரு பெண் தன் காதலனுடன் பேசுவதாக இருக்க வேண்டும் .

இப்ப பேச முடியாது நான் பஸ்ல இருக்கேன் . அப்புறமா பேசறேன் என்று அரற்றிக் கொண்டிருந்தாள். இன்னொரு பெண் புரோட்டா ஆம்லெட், ஜூஸ் என்று தன் வியாபார உத்தியை பற்றி பேசிக்கொண்டே வந்தாள்.

இன்னொரு பெண் யாருக்கும் கேட்காமலே குசு குசு என பேசிக்கொண்டே இருந்தாள்.

இப்படியாக வழிந்து நிறைந்த அந்த பேருந்தில் ஆண்கள் எல்லாம் அமைதியாக இருந்தார்கள். பெண்கள் மட்டும் பேசிக் கொண்டே வந்தார்கள்.

அப்போது எங்கே இறங்க வேண்டும் என்று சண்டை போட்ட இரு பெண்களும் இரு திசையில் திரும்பி தங்கள் செல்போன்களில் பேசிக்கொண்டு வந்தார்கள்.

தெருவெல்லாம் வழியாமல் நின்றிருக்கும் வெள்ளம் வேறு; இன்னும் மூடப்படாத பள்ளம் வேறு என்று அந்தத் தார் சாலை நீண்டிருந்தது. .

படியைத் தொடும் அளவிற்கு நிறைந்திருந்த நீரில் மெல்ல மெல்ல நகர்ந்து சென்ற அந்த பேருந்து, சடாலென பிரேக் டவுன் ஆனது.

ஓட்டுநர் எத்தனையோ முறை என்று ஏதேதோ செய்து பார்த்தார். பேருந்து அந்த இடத்தை விட்டு நகரவே இல்லை.

இனிமேல் பஸ் போகாது எல்லாரும் வண்டியை விட்டு எறங்குங்க என்று நடத்துனர் குரல் கொடுத்த போது

நீங்க எங்க இறங்கப் போறீங்க? என்று சண்டை போட்ட இரு பெண்களும் அதே இடத்தில் இறங்கினார்கள்.

அந்தப் பேருந்தில் இருந்த மொத்த ஆண்களும் அந்த இடத்தில் இறங்கியபோது ஒருவருக்கு ஒருவர் சிரித்துக் கொண்டார்கள்.

நீங்க எங்க இறங்கணும்? அப்படின்னு கேட்டுட்டு வழி விடாம ரெண்டு பேரும் சண்டை போட்டுக்கிட்டு இருந்தீங்க. இப்பப் பாத்தீங்களா, எல்லாரும் ஒரே எடத்தில எறங்கிட்டோம். இதுதான் வாழ்க்கை. எப்ப என்ன நடக்கும்னு என்று யாருக்கும் தெரியாது. விட்டுக் குடுத்துப் போங்க ; அப்பதான் வாழ்க்கை நல்லா இருக்கும். நீங்க ரெண்டு பேரும் சண்டை போட்டத நாங்க பார்த்துட்டு தான் இருந்தோம் . ஆனால யாரும் ஒரு வார்த்தை பேசல. அதுக்கு பலன் பதில் இப்போ உங்க ரெண்டு பேருக்குமே கிடைச்சிருக்கு.

நீங்க ஒரு ஸ்டாப் எறங்கணும்.அவங்க வேற ஸ்டாப்பிலிருந்து இருக்கிறவங்க ஒவ்வொருத்தரும் அவங்க அவங்க ஸ்டாப்ல எறங்கணும்.

ஆனா இயற்கை பாத்தீங்களா ? பஸ்ல இருந்த எல்லாத்தையும் ஒரே ஸ்டாப்பில எறக்கி விட்டுருச்சு. இதுதான் வாழ்க்கையோட சூட்சும் மந்திரம். இனியாவது ஒருத்தர் பேசினா இன்னொருத்தர் விட்டுக்கொடுத்து மன்னிச்சுக்கோங்கன்னு சாெல்லுங்க. அதுதான் வாழ்க்கை என்று ஒரு பெரியவர் சொன்னபோது தண்ணீரில் மூழ்கி நின்ற பேருந்து அதே இடத்தில் அசையாமல் நின்று கொண்டிருந்தது.

பேருந்து விட்டு இறங்கிய பயணிகள் பக்கத்தில் இருக்கும் பஸ் நிறுத்தத்திற்கு நடந்து கொண்டிருந்தார்கள்.

சண்டை போட்ட இரு பெண்மணிகளும் வேறு வேறு திசையில் சென்று கொண்டிருந்தார்கள்.

அவர்கள் சண்டை போட்ட பேச்சு மட்டும் அந்தப் பேருந்தில் பயணித்த பயணிகள் காதில் ஒலித்து கொண்டே இருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *