செய்திகள்

எங்களை சாதிக்கட்சி என்பதை நிறுத்த வேண்டும்: அன்புமணி ராமதாஸ் பேச்சு

Makkal Kural Official

மது ஒழிப்பில் திருமாவளவன் எல்கேஜி; பாமக பிஎச்டி

மதுரை, செப். 15–

அமைச்சரவையில் பங்கு வேண்டும் என திருமாவளவன் பதிவிட்டது மிகவும் சரியானதுதான், ஆனால் அந்த வீடியோவை நீக்கியது தான் தவறு” என்று பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது:–

“தமிழ்நாட்டில் போதைப் பொருளால் இளைஞர்கள் அழிந்து கொண்டிருக்கிறார்கள். முதலமைச்சருக்கு இதெல்லாம் தெரியுமா தெரியாதா? தமிழ்நாட்டில் அதிகமான வெளிநாட்டு பறவைகள் வரும் இடம் சென்னை தான். தமிழ்நாட்டிற்கு வரும் பறவைகளில் மூன்றில் ஒரு பங்கு சென்னைக்குதான் வருகின்றன. அந்த இடத்தில் ஹெலிகாப்டர் சுற்றுலா தளம் கொண்டு வருவதினால் பறவைகள் பாதிக்கப்படும் என்றார்.

மேலும் அவர் கூறுகையில், திருமாவளவன், பா.ம.க-வை ஜாதி கட்சி என்கிறாரே? என்ற கேள்விக்கு, விடுதலை சிறுத்தைகள் கட்சி மட்டும் என்ன கட்சியாம்? என கேள்வி எழுப்பியதுடன் “பா.ம.க சமூக நீதிக்காக தொடங்கப்பட்ட கட்சி. அருந்ததியர்கள், இஸ்லாமியர்கள் என மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு இட ஒதுக்கீட்டை பெற்றுக் கொடுத்த கட்சி பாமக. சுற்றுச்சூழலுக்காகவும், நீர் நிலைகளை பாதுகாக்கவும், கல்விக்காகவும், மருத்துவத்திற்காகவும், மது ஒழிப்புக்காகவும், நேர்மையான ஆட்சிக்காகவும் போராடி வரக்கூடிய கட்சி பா.ம.க.

மது ஒழிப்பில் பிஎச்டி

இப்படி எத்தனையோ சாதனைகள் செய்த கட்சியை திருமாவளவன் தொடர்ந்து அவதூறு செய்து வருகிறார். அதனை அவர் தவிர்க்க வேண்டும். இத்தோடு அவர் நிறுத்திக் கொள்ள வேண்டும். அதேபோல வி.சி.க-வை பற்றி தரக்குறைவாக எங்களாலும் பேச முடியும்”. மது ஒழிக்க வேண்டும் என்பது அனைவரின் விருப்பம்.

இந்தியாவில் எந்த கட்சி, மது ஒழிப்பிற்கு எதிராக கூட்டம், மாநாடு நடத்தினாலும் நாங்கள் ஆதரிப்போம். எனவே அந்த அடிப்படையில் திருமாவளவன் எங்களை அழைத்தாலும் அழைக்காவிட்டாலும் நாங்கள் அந்த மாநாட்டை ஆதரிக்கிறோம். ஏனென்றால் இது எங்கள் கட்சியின் அடிப்படை கொள்கை. மது ஒழிப்பில் பா.ம.க பிஎச்டி முடித்துள்ளது, திருமாவளவன் தற்போதுதான் எல்.கே.ஜி வந்துள்ளார்.

திருமாவளவன் தற்போது தான் மது ஒழிப்பை தொடங்கி இருக்கிறார். ஆனால், எங்கள் நிறுவனர் ராமதாஸ் கட்சி தொடங்குவதற்கு முன்பிருந்தே மது எதிர்ப்பு போராட்டங்களை முன்னெடுத்தவர். மது ஒழிப்பு போராட்டத்தில் பங்கேற்று பா.ம.க-வை சேர்ந்த 15,000 பெண்கள் சிறைக்கு சென்றிருக்கிறார்கள். பா.ம.க தொடர்ச்சியாக நடத்திய போராட்டங்கள் காரணமாக தமிழ்நாட்டில் 3,321 மதுக்கடைகளையும், இந்திய அளவில் 90,000 மது கடைகளையும் மூடி உள்ளோம்.

வீடியோவை நீக்கியது தவறு

திருமாவளவன் தன்னுடைய மது ஒழிப்பு மாநாட்டிற்கு கனிமொழியை அழைக்க வேண்டும். அவர்தான் மது ஒழிப்பிற்காக பேசுகிறார். மதுவினால் ஏற்படும் சீரழிவுகள் பற்றி விளக்கும் அவரை தமிழ்நாடு முதலமைச்சரிடம் வலியுறுத்தி நடவடிக்கை எடுக்கச் சொல்லுங்கள். தமிழ்நாட்டில் மதுவை ஒழிக்க வேண்டும் என்ற எண்ணம் திருமாவளவனுக்கு இருந்திருந்தால் முதலில் அவர் பாட்டாளி மக்கள் கட்சிக்குதான் அழைப்பு விடுத்திருக்க வேண்டும்.

அமைச்சரவையில் பங்கு என்ற திருமாவளவனின் வீடியோ பதிவு மிகவும் சரியானது. அதே நேரத்தில் அந்த வீடியோவை நீக்கியது தான் தவறு. அனைத்து கட்சிகளும் தாங்கள் ஆட்சிக்கு வரவேண்டும். தங்களுடைய கொள்கைகளை அமல்படுத்த வேண்டும் என்று தான் கட்சி ஆரம்பிக்கிறார்கள். எனவே திருமாவளவனின் கருத்தில் தவறு இல்லை.

திருமாவளவனுக்கு மதுவை ஒழிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால், மது உற்பத்தி செய்யும் ஆலைகளின் உரிமையாளர்களான டி.ஆர்.பாலு, ஜெகத்ரட்சகன் ஆகியோருக்கு தேர்தலில் ஏன் வாக்கு கேட்டீர்கள்? என்றும் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *