போஸ்டர் செய்தி

எங்களைப் பற்றி பேச ஸ்டாலினுக்கு எந்த அருகதையும் இல்லை: எடப்பாடி பழனிசாமி பேட்டி

Spread the love

கோவை, செப். 12–

தி.மு.க. ஆட்சியில் எத்தனை தடுப்பணைகள் கட்டினீர்கள், எத்தனை ஏரிகள், குளங்களை தூர்வாரினீர்கள் என்று ஸ்டாலினுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி காட்டமாக கேட்டார்.

எங்களை பற்றி பேச ஸ்டாலினுக்கு எந்த தகுதியும், அருகதையும் கிடையாது என்றும் முதல்வர் கூறினார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, அனைவரும் அன்போடு என்னை வரவேற்றார்கள். அத்தனை பேருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அதே போல வெளிநாடு பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை வந்தபோது விமான நிலையத்தில் பிரமாண்டமான வரவேற்பை அளித்த அமைச்சர்களுக்கும், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களுக்கும், மாவட்ட கழகச் செயலாளர்களுக்கும், கழக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் அனைவருக்கும் எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.

கேள்வி : எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் வெளிநாட்டு பயணம் குறித்து வெள்ளை அறிக்கை கேட்கின்றாரே?

பதில்: அவர்களுடைய ஆட்சிக் காலத்தில் எத்தனை வெள்ளை அறிக்கைகள் வெளியிட்டு இருக்கின்றார்? எவ்வளவு முதலீட்டை ஈர்த்து இருக்கின்றார்? அவர் சொல்வது அத்தனையும் பொய்யான செய்தி. தி.மு.க. ஆட்சியில் 2006 முதல் 2011 வரைக்கும் 5 ஆண்டு காலத்தில் 26 ஆயிரம் கோடி ரூபாய் தான் தமிழகத்திற்கு தொழில் முதலீடாக கொண்டு வந்திருக்கிறார்கள். ஆனால் அம்மா முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில் 2015-ல் உலக முதலீட்டாளர் மாநாட்டை நடத்தி 2 லட்சத்து 42 ஆயிரம் கோடி ரூபாய் தொழில் முதலீட்டை ஈர்த்து, அதன் மூலம் ரூபாய் 53 ஆயிரம் கோடியில் இன்றைக்கு தொழில் துவங்கப்பட்டிருக்கின்றது. 29 தொழில்கள் துவங்கப்பட்டுவிட்டன, 67 தொழில்கள் துவங்குவதற்கு முன்நிலையில் இருக்கின்றன. இதெல்லாம் அம்மா இருக்கின்ற பொழுது துவங்கப்பட்ட திட்டம். ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டால், உடனேயே அந்தத் திட்டத்தை நிறைவேற்ற முடியாது. அந்தத் தொழிற்சாலைக்கு வேண்டிய நிலத்தை கையகப்படுத்த வேண்டும். அதற்குத் தேவையான நிதி ஆதாரத்தை அவர்கள் திரட்ட வேண்டும். எல்லோரும் வங்கியின் மூலமாக கடனைப் பெற்றுத்தான் தொழில் செய்கின்றார்கள். எனவே, பெரிய தொழில் செய்வதென்றால் 5 அல்லது 6 ஆண்டுகள் ஆகும், குறைவான முதலீட்டில் தொழில் துவங்குவதென்றால் 2 அல்லது 3 ஆண்டுகள் ஆகும். அதுகூட தெரியாமல், எதிர்க்கட்சித் தலைவர் விமர்சனம் செய்து கொண்டிருக்கின்றார். அவருக்கு நான் எப்போது முதலமைச்சராக பொறுப்பேற்றேனோ அன்றிலிருந்து இன்று வரை எங்களை குறை சொல்வது தான் அவருடைய நோக்கம்.

40 ஆண்டுகளாக யாரும் செல்லவில்லை

இப்பொழுது நான் வெளிநாடுகளுக்கு சென்றபொழுது, அதன் மூலமாக ரூபாய் 8,830 கோடி தொழில் முதலீடு செய்வதற்கு தொழில் அதிபர்கள் முன்வந்திருக்கின்றனர். 41 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் நாங்கள் போட்டிருக்கின்றோம். கிட்டத்தட்ட இதன் மூலமாக 37,300 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும். மிகக் குறுகிய காலத்தில் நான் சென்றேன். ஒவ்வொரு மாநிலத்தின் முதலமைச்சரும் வெளிநாடு பயணம் சென்று அங்கிருக்கின்ற தொழில் அதிபர்களை சந்தித்து அந்தந்த மாநிலத்தில் தொழில் துவங்க வேண்டுமென்று கோரிக்கை வைக்கிறார்கள். அண்டை மாநிலமான ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு முதலமைச்சராக இருந்த காலத்தில் 4 மாதத்திற்கு ஒருமுறை வெளிநாடு சுற்றுப் பயணம் மேற்கொண்டார். நான் இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் ஆகிய நாடுகளுக்கு சென்றபொழுது, அங்கிருக்கும் தொழில் முதலீட்டாளர்கள் எல்லாம் தமிழ்நாட்டிலிருந்து சுமார் 40 ஆண்டுகாலமாக எந்த முதலமைச்சரும் வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவில்லை. அதனால் தமிழ்நாட்டில் தொழில் துவங்குவதற்கு எங்களுக்குத் தெரியவில்லை. இப்பொழுது நீங்கள் வந்திருக்கிறீர்கள், எங்களுக்கு மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. தமிழகத்திலே தொழில் துவங்க நாங்கள் முன்வருகிறோம் என்று சொல்லித்தான் ரூபாய் 8,830 கோடி மதிப்பீட்டில் அவர்கள் தொழில் துவங்க முன்வந்திருக்கிறார்கள். இன்னும் பல தொழில் அதிபர்கள் தமிழகத்திற்கு தொழில் துவங்க என்னோடு பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருகின்றார்கள்.

விமர்சிக்காமல் இருந்தால் போதும்

கேள்வி: இது உண்மையென்றால், எதிர்க்கட்சித்தலைவர் பாராட்டுவிழா நடத்துகிறேன் என்று சொல்கிறாரே?

பதில்: அவருடைய பாராட்டு விழாவை வைத்துக் கொண்டுதான் அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறதா? அவர் விமர்சனம் செய்யாமலிருந்தாலே பாராட்டுக்குரியது தான். எந்தத் திட்டத்தையும் உடனடியாக தொடங்க முடியாது, அது அவருக்குத் தெரியும், அவருக்கு பாராட்ட மனம் இல்லை, குறுகிய எண்ணம் படைத்த ஒரு எதிர்க்கட்சித் தலைவர், தமிழ்நாட்டு எதிர்க்கட்சித் தலைவர். இந்த ஆட்சியில் எதுவும் நடக்கவில்லை என்று சொன்னார்.

கோவை மாவட்டத்தில் மட்டும் அத்திக்கடவு– அவினாசி திட்டம் 50 ஆண்டுகால திட்டம், முழுக்க, முழுக்க மாநில நிதியிலிருந்தே நிதி ஆதாரத்தைத் திரட்டி ரூபாய் 1682 கோடி திட்டத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டு பணி துவங்கப்பட்டு விட்டது. இதையெல்லாம் அவரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

கோவை மாநகரத்தில் சுங்கம் சந்திப்பில் ரூபாய் 250 கோடியில் மேம்பாலம் பணி துவங்கப்பட்டுவிட்டது, கவுண்டம்பாளையம் சந்திப்பில் ரூபாய் 61 கோடியில் மேம்பாலம், பி.என்.மில் சந்திப்பில் ரூபாய் 45 கோடியில் மேம்பாலம், உக்கடம் சந்திப்பில் ரூபாய் 127 கோடியில் ஆற்றுப்பாலம்.

காந்திபுரம் உயர்மட்டப்பாலம் பற்றி இவர்கள் பேசினார்கள். ஆனால் செயல்படுத்தவில்லை, நாங்கள் வந்து தான் டெண்டர் விட்டு நிறைவேற்றி திறக்கப்பட்டது. இரண்டாம் கட்டமாக நவம்பர் மாதம் திறக்கவிருக்கிறோம்.

கோவை மெடிக்கல் மருத்துவமனையிலிருந்து உப்பிலியாபுரம் வரை 9 கிலோ மீட்டர் அளவிற்கு ஒரு உயர்மட்டப்பாலம் கட்டவிருக்கிறோம், சுமார் ரூபாய் 90 கோடி முதல் 100 கோடி வரை செலவாகும். அந்தப் பணியையும் இன்னும் 3, 4 மாதங்களுக்குள் ஆரம்பிக்கவிருக்கிறோம். மேற்கு புறவழிச்சாலை அமைக்கிற பணியும் துவங்கப்பட்டு, நிலம் எடுக்கும்பணி நடைபெறுகிறது. மெட்ரோ ரயில் திட்டத்தை கோவையில் நடைமுறைப்படுத்துவதற்கும் ஆய்வுப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கோவை மாநகர மக்களுக்கு தினந்தோறும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குவதற்கு மூன்றாம் கட்ட குடிநீர் திட்டத்தை வகுத்து, அந்தப் பணியும் துவங்க விருக்கிறது. நவீன பேருந்து நிலையம் கோவை மாவட்டத்தில் கட்டவிருக்கின்றோம். ஆட்சிப்பொறுப்பேற்ற குறைந்த நாட்களில் இவ்வளவு பணிகளையும் செய்திருக்கிறோம். ஏர்போர்ட் விரிவாக்கம் செய்ய வேண்டுமென்று 20 ஆண்டுகாலமாக இருக்கும் கோரிக்கையையும் நாங்கள் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம். இந்த மாவட்டத்தில் இவ்வளவு திட்டங்களை நாங்கள் செயல்படுத்தியிருக்கிறோம். மேலும் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருக்கின்றோம்.

ஸ்டாலினுக்கு அருகதை இல்லை

எதிர்க்கட்சித் தலைவர் வேண்டுமென்றே திட்டமிட்டு ஒரு தவறான, பொய்யான செய்தியை விளம்பரப்படுத்திக் கொண்டிருக்கிறார். இன்னொன்றும் சொல்கிறார், நான் இஸ்ரேல் சென்று அங்கிருக்கின்ற நீர் ஆதாரத்தை எப்படி பயன்படுத்துகிறார்கள் என்ற ஒரு விரிவான ஆலோசனையை மேற்கொள்வதற்காக செல்வேன் என்று சொன்னேன். அதற்கு ஒரு கிண்டல் செய்து இன்று பத்திரிகையில் வெளியிட்டிருக்கிறார். இங்கிருக்கும் உபரிநீரையே நீங்கள் சேமிக்க வேண்டும் என்று சொல்கிறார். இவர்களுடைய ஆட்சிக்காலத்தில் இவருடைய தந்தை 5 முறை முதலமைச்சராக இருந்திருக்கிறார். காவிரி ஆற்றில் கொள்ளிடம் வரை பருவகாலங்களில் பெய்கின்ற மழைநீர் உபரியாக சென்று கடலில் கலக்கிறதே, எத்தனை தடுப்பணைகளை நீங்கள் கட்டியிருக்கிறீர்கள்? எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினுக்கு பேசுவதற்கு என்ன அருகதை, தகுதி இருக்கிறது?

எத்தனை தடுப்பணை கட்டினீர்கள்?

புரட்சித்தலைவி அம்மா கொள்ளிடத்தில் ஒரு தடுப்பணை கட்டப்படும் என்று அறிவித்தார். நான் முதலமைச்சராக பதவியேற்ற பிறகு விரிவான திட்ட அறிக்கை தயாரித்து, டெண்டர் விட்டு, அந்தப் பணி நடந்து கொண்டிருக்கிறது. ஸ்டாலின் தெரிந்து பேசவேண்டும். புகழூர் காகித ஆலையின் அருகில் காவிரி ஆற்றின் குறுக்கே தண்ணீரை தேக்குவதற்கு எங்களுடைய அரசு நடவடிக்கை எடுத்திருக்கிறது. இன்னும் ஒரு மாதத்தில் விரிவான திட்ட அறிக்கை தயாரித்து பணி துவங்கப்படும். காவிரி ஆற்றில் கொள்ளிடம் வரை மேலும் 3 தடுப்பணைகள் கட்டுவதற்கும் ஆய்வுப்பணி மேற்கொண்டிருக்கிறோம். எனவே, நான் பொறுப்பேற்று இந்த குறுகிய காலத்தில் உபரியாக வெளியேற்றுகின்ற நீரை ஆங்காங்கே தடுப்பணை கட்டி தண்ணீரைத் தேக்கி நிலத்தடி நீர் உயர்வதற்கு நாங்கள் நடவடிக்கை எடுத்திருக்கிறோம். எத்தனை முறை கருணாநிதி முதலமைச்சராக இருந்தார், நீங்கள் துணை முதலமைச்சராக இருந்தீர்கள், காவிரி ஆற்றில் எத்தனை தடுப்பணை கட்டியிருக்கின்றீர்கள்? விவசாயத்திற்கு என்ன செய்தார் என்று சொல்கிறார்? நான் இதையெல்லாம் செய்திருக்கிறேன், புள்ளிவிவரத்தோடும், ஆதாரத்தோடும் சொல்கிறோம்.

அதுமட்டுமல்லாமல், நீர் மேலாண்மையை உருவாக்குவதற்காக ஓய்வு பெற்ற 2 தலைமைப் பொறியாளர்கள், 3 கண்காணிப்பு பொறியாளர்களை நியமித்து அவர்கள் ஆய்வு செய்து, எங்கெங்கெல்லாம் உபரியாக தண்ணீர் வெளியேறி கடலில் கலக்கிறதோ என்பதை கண்டறிந்து அங்கே தடுப்பணை கட்டவேண்டுமென்று அரசினுடைய கவனத்திற்கு அறிக்கையாக தாக்கல் செய்து கொண்டிருக்கிறார்கள். அதனடிப்படையில் தான் அம்மாவினுடைய அரசு, சட்டமன்றத்தில் ரூபாய் 1,000 கோடியில் தடுப்பணை கட்டப்படும் என்ற அறிவிப்பை கொடுத்து, இப்பொழுது ரூபாய் 600 கோடிக்கு தடுப்பணை கட்டுகின்ற பணியை நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கின்றோம். இதெல்லாம் ஸ்டாலினுக்கு தெரிவதற்கு வாய்ப்பே இல்லை. அவர் யாரோ எழுதிக் கொடுப்பதை வைத்து பேசிக் கொண்டிருக்கிறார். அரசாங்கம் செயல்படுவது பற்றி அவருக்குத் தெரியவே தெரியாது. அதில் கவனமும் செலுத்துவதில்லை.

ஒரு சொட்டு நீரை வீணாக்க மாட்டோம்

ஒரு சொட்டு நீர் கூட வீணாகாமல் இருக்க வேண்டுமென்பது தான் அரசின் நோக்கம். அந்த அடிப்படையில் செயலாற்றிக் கொண்டிருக்கின்றோம். ஓடை, நதிகளின் குறுக்கே தடுப்பணை கட்டுகிறோம். மேலும், ஏரிகள், குளங்கள் தூர்வாராமலேயே இருந்தது. இப்பொழுது பருவகாலங்களில் பெய்கின்ற மழைநீரை சேமித்து வைப்பதற்காக நாங்கள் ஏரிகள், குளங்களை தூர்வாருகிறோம். அதையும் குறை சொல்லிக் கொண்டிருக்கிறார். ஊழல், ஊழல் என்று சொல்கிறார், எப்படி ஊழல் செய்ய முடியும்? இது முழுக்க முழுக்க அந்தந்த பகுதியிலிருக்கும் விவசாயிகளிடத்திலேயே இந்தப் பணியை ஒப்படைக்கிறோம். டெண்டரே கிடையாது.

90 சதவீத நிதி அரசு கொடுக்கிறது, 10 சதவீத நிதி அங்கிருக்கின்ற விவசாயிகள் சங்க பிரதிநிதிகள், சங்கங்கள், ஆயக்கட்டுதாரர்கள் ஆகியோரை பயன்படுத்தி அவர்களிடத்திலே இந்தப் பணியை ஒப்படைத்து மேற்கொள்ளப்படுகிறது. இதில் எப்படி ஊழல் செய்ய முடியும்? எல்லாப் பகுதிகளிலுமே பணி நடக்கிறது. முதற்கட்டமாக ரூபாய் 100 கோடி ஒதுக்கினேன். 1,519 ஏரிகளை பரிட்சார்த்த முறையில் எடுத்து பணிகள் நடைபெற்றன. இதற்கு பொது மக்களிடத்தில், விவசாயிகளிடத்தில் நல்ல வரவேற்பு.

தி.மு.க. ஆட்சியில் செய்தது என்ன?

தி.மு.க. ஆட்சியில் எத்தனை குளங்கள், ஏரிகள் தூர்வாரினார்கள்? எவ்வளவு நிதி ஒதுக்கினார்கள்? இரண்டாம் கட்டமாக ரூபாய் 328 கோடி ஒதுக்கி 1,511 ஏரிகள் எடுத்து, அந்தப் பணிகள் நிறைவு பெறும் நிலையில் இருக்கிறது. மூன்றாம் கட்டமாக 2019–2020 ஆண்டிற்கு ரூபாய் 500 கோடி ஒதுக்கியிருக்கிறோம், பொதுப்பணித் துறையால் பராமரிக்கப்படுகின்ற 1,829 ஏரிகள் தூர்வாருவதற்கு எடுக்கப்பட்டு, அந்தப் பணிகளும் துவங்கப்பட்டுவிட்டன. அதுமட்டுமல்லாமல், டெல்டா பாசன பகுதியில் இருக்கின்ற கால்வாய்களை தூர்வாருவதற்காக ரூபாய் 66 கோடி ஒதுக்கி அந்தப் பணிகள் சிறப்பான முறையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இன்றைக்கு ஒவ்வொரு மாவட்டத்திற்கும் இந்திய ஆட்சிப்பணி அலுவலர் நியமிக்கப்பட்டு, அவருடைய நேரடி பார்வையில் குடிமராமத்துப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆகவே, எங்கு ஊழல் நடந்தது என்று சொன்னால் நாங்கள் நடவடிக்கை எடுப்போம். இந்தத் திட்டம் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. வேண்டுமென்றே இந்தத் திட்டத்தை கொச்சைப்படுத்தி, இதை எப்படியாவது திசை திருப்ப வேண்டும், குறை சொல்ல வேண்டும் என்பதுதான் அவருடைய நோக்கம்.

கேள்வி: தமிழக அமைச்சர்களை சுற்றுலா அமைச்சர் என்று சொல்லியிருக்கிறாரே?

வெளிநாடு சென்றது ஏன்?

பதில்: அவருக்கு நாட்டினுடைய வளர்ச்சியைப் பற்றித் தெரிந்தால் பரவாயில்லை, நாட்டைப் பற்றியே கவலைப்படாத ஒரு கட்சி என்றால் தி.மு.க., தலைவர் என்றால் எதிர்க்கட்சித் தலைவர் தான். வெளியில் சென்று பார்த்தால் தான் நாம் என்ன செய்ய வேண்டும் என்று தெரியும். எல்லோரும் அமெரிக்காவில் அப்படி இருக்கிறது. துபாயில் இப்படி இருக்கிறது. இங்கிலாந்தில் இப்படி இருக்கிறது என்று சொல்கிறார்கள். அதையெல்லாம் நேரில் பார்வையிட்டால் தான் நம்முடைய பகுதியில் என்ன செய்ய முடியும். அதற்குத்தான் அரசாங்கம் இருக்கிறது. அதற்குத்தான் அமைச்சர்கள் இருக்கிறார்கள். முதலமைச்சர் இருக்கிறார். இதையெல்லாம் பார்வையிட்டு வந்தால் தான் செயல்படுத்த முடியும். அங்கிருக்கும் தொழிலதிபர்கள் சொல்லுகிறார்கள், ஐந்தாண்டு காலத்தில் சந்திரபாபு நாயுடு கிட்டத்தட்ட 10 முறை அமெரிக்க சென்றிருக்கிறார்.

வெளிநாட்டிற்கு சென்று தொழிலதிபர்களை நேரடியாக சந்தித்து பேசுகின்றபொழுது, முதலீடு செய்வதற்கு சாத்தியக்கூறுகளை தெளிவுபடுத்தினால் நாங்கள் தொழில் செய்ய முடியும் என்று அங்குள்ள தொழில் முதலீட்டாளர்கள் கூறினார்கள். தமிழ்நாட்டை பொறுத்தவரை மின்மிகை மாநிலமாக இருக்கிறது. தேவையான மின்சாரம், தேவையான நிலம் கொடுக்கிறோம், ஒற்றைச் சாளர முறையில் அனுமதி போன்றவற்றை ஒரு மாதத்திலே கொடுக்கிறோம். இவையெல்லாம் வெளிநாடுகளில் உள்ளவர்களுக்கு தெரியவில்லை. நாம் சென்று தெளிவுபடுத்தினால் தான் தொழில் துவங்க முடியும். அந்த அடிப்படையில் தான் நாங்கள் வெளிநாட்டிற்குச் சென்று தொழில் முதலீட்டாளர்களை சந்தித்து அவர்களை தமிழகத்தில் தொழில் துவங்கும் முயற்சியில் தான் நாங்கள் ஈடுபட்டிருக்கிறோம். இதன் மூலமாக தமிழகத்திற்கு புதிய தொழில்கள் வரும், படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும், தமிழ்நாடு வளர்ச்சி அடையும்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *