பெய்ஜிங், மே 16–
எங்களுக்கு உதவ எண்ணும் சீனாவின் உண்மையான விருப்பத்தை பாராட்டுகிறேன் என்று ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.
2022-ம் ஆண்டு தொடங்கிய உக்ரைன்–ரஷ்யா போரில், உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் செயல்படுகின்றன. இந்த நாடுகள் ரஷ்யா மீது பல்வேறு பொருளாதார தடைகளையும் விதித்திருக்கிறது. ரஷ்யாவும் அந்த நாடுகள் மீது பொருளாதார தடை விதித்து எதிர்வினையாற்றியது. ரஷ்யா – உக்ரைன் என இரு நாடுகளுக்கும் ஆதரவு தராத சீனா, ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைக்கு எதிர்ப்பு தெரிவித்தது.
சீனாவுக்கு பாராட்டு
இந்த நிலையில், ரஷ்ய அதிபர் புதின் சீனா சென்றிருக்கிறார். 5 வது முறையாக பதவி ஏற்ற பிறகு மேற்கொண்ட முதல் வெளிநாட்டு பயணம் இது. அவரை சீன அதிகாரிகள் விமான நிலையத்திலிருந்து வரவேற்றனர். அதைத் தொடர்ந்து, இந்த சந்திப்பின் மூலம், இரு நாடுகளிடையே பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பு, சர்வதேச மற்றும் பிராந்திய பிரச்சினைகள் குறித்து விவாதிக்க உள்ளதாக சீன வெளியுறவு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
ரஷ்ய அதிபர் விளாதிமீர் புதின், சீன பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், “உக்ரைன் நெருக்கடியைத் தீர்க்க ரஷ்யாவுக்கு உதவும் சீனாவின் உண்மையான விருப்பத்தை பாராட்டுகிறேன் எனக் குறிப்பிட்டிருக்கிறார்.