சென்னை, பிப்.16-–
தேசிய கல்விக்கொள்கையை ஏற்காவிட்டால் தமிழகத்துக்கு நிதி இல்லை என்ற மத்திய அமைச்சர் பேச்சுக்கு, அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தன்னுடைய ‘எக்ஸ்’ தளப் பக்கத்தில் எம்மிடம் இருந்து பறித்து கொண்டதை கேட்கிறோம்; பிச்சையல்ல என்று அண்ணா குறிப்பிட்டதை மேற்கோள்காட்டி பதில் அளித்துள்ளார்.
மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ‘தமிழக அரசு புதிய கல்விக் கொள்கையை ஏற்க மறுக்கிறது அதனால் விதிகளின்படி எங்களால் நிதி ஒதுக்க முடியாது’ என திட்டவட்டமாக கூறினார்.
இதற்கு பதில் அளிக்கும் வகையில் தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தன்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தில் அண்ணா குறிப்பிட்டதை மேற்கொள்காட்டி சில கருத்துகளை பதிவு செய்துள்ளார். அதன் விவரம் வருமாறு:-
வாழ்ந்தவர்கள் என்பதை நினைவூட்ட வரலாறு இருக்க, எதற்காக வடவரிடம் பிடரியைக் கொடுத்து விட்டுப் பிறகு மெல்ல மெல்ல வலிக்கிறது வலிக்கிறது என்று வேதனை குரலொலித்துக் கிடக்க வேண்டும்? மாதாவுக்கு மத்தாப்பு வண்ணச் சேலையா கேட்கிறோம்? அன்னையின் ஆடையை, அக்கிரமக்காரனே பிடித்திழுக்கத் துணிகிறாயே, ஆகுமா இந்த அக்கிரமம் என்றல்லவா கேட்கிறோம்.
உரிமையைக் கேட்கிறோம்; உபகார மல்ல, இழந்ததைக் கேட்கிறோம்; இரவல் பொருளல்ல. எம்மிடமிருந்து பறித்துக்கொண்டதைக் கேட்கிறோம்; பிச்சையல்ல. இந்த மூலக்கருத்தை உணரா முன்னம் வடவரின் கொட்டம் அடக்கப்படுவது முடியாத காரியமாகும்.
இவ்வாறு அதில் அவர் பதிவிட்டுள்ளார்.
மேலும் அந்த பதிவுக்கு கீழே மும்மொழி ஏன் வேண்டாம்? என்பது பற்றி அண்ணா 2 நிமிடம் 38 நொடிகள் பேசிய ஆடியோவையும் இணைத்து இருந்தார்.