சென்னை, பிப். 22-–
எக்ஸ்பிரஸ் ரெயில்களில் தற்போது முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளின் எண்ணிக்கை குறைக்கப்படவில்லை என்றும் மார்ச் மாதம் முதல் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் கூடுதல் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகள் இணைக்கப்பட உள்ளது என்று தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
இது குறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தெற்கு ரெயில்வே சார்பில் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளின் எண்ணிக்கையை குறைக்க திட்டமிட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் வெளியாகிவரும் செய்திகள் ஆதாரமற்றவை மற்றும் தவறானவையாகும்.
எக்ஸ்பிரஸ் ரெயில்களில் முன்பதிவு செய்யப்படாத பயணிகள் பயனடையும் வகையில் பிப்ரவரி மாதம் முதலே பொது பெட்டிகளின் எண்ணிக்கை அதிகரிக்க தெற்கு ரெயில்வே திட்டமிட்டது. ஆனால், அதற்காக ஒதுக்கப்பட்ட பெட்டிகள் தற்போது மகா கும்பமேளாவிற்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக தமிழகம் மற்றும் கேரளாவிலிருந்து வாரணாசிக்கு இயக்கப்படும் சிறப்பு ரெயில்களில் பயன்படுத்தப்படுகின்றது.
இந்த நிலையில், மகா கும்பமேளா வரும் 26-ந் தேதியுடன் முடிவடைவதை அடுத்து மார்ச் மாதம் முதல் இந்த பெட்டிகள் தெற்கு ரெயில்வே சார்பில் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் கூடுதலாக இணைத்து இயக்கப்படும்.
அந்த வகையில், சென்னை சென்டிரல் – -ஈரோடு இடையிலான ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரெயிலிலும் ஐதராபாத், நாகர்கோவில், திருவனந்தபுரம், ஆலப்புழா, மைசூரு, பாலக்காடு, நெல்லை ஆகிய பகுதிகளுக்கு செல்லும் 14 எக்ஸ்பிரஸ் ரெயில்களில் மார்ச் மாதத்தில் இருந்து ஒன்று அல்லது 2 பொது பெட்டிகள் கூடுதலாக இணைக்கப்பட உள்ளன. இதன்மூலம் ஒவ்வொரு ரெயிலிலும் பொது பெட்டிகளின் எண்ணிக்கை 4 ஆக அதிகரிக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.