பாஜக தேர்தல் அறிக்கை குறித்து செல்வப்பெருந்தகை விமர்சனம்
சென்னை, ஏப். 14–
தேர்தல் பத்திரங்களில் ஊழல் செய்த பாஜக, ஊழலை ஒழிப்பேன் என்று தேர்தல் அறிக்கை வெளியிடுவது வேடிக்கையானது என்று செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளார்.
2014, 2019 ஆகிய தேர்தல்களில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத பாரதீய ஜனதா, 2024 தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் தேர்தல் அறிக்கை வெளியிட்ட பிறகு, அவற்றை பார்த்து இன்று தேர்தல் அறிக்கை வெளியிட்டிருக்கிறது. பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கை சமூகநீதி, மதநல்லிணக்கம், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி ஆகியவற்றுக்கு எதிராக பல்வேறு அம்சங்கள் உள்ளன.
பல்வேறு மதம், மொழி, ஜாதி, இனங்களை கொண்ட பன்முகத்தன்மை கொண்ட நாட்டில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என்று சொல்வது மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் செயலாகும். ஒவ்வொரு மதத்திற்கும் இருக்கிற தனித்தன்மையை கடுமையாக பாதிக்கிற நடவடிக்கையாகும். அதேபோல, 28 மாநிலங்களில் 140 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டில் ஒரே நாடு, ஒரே தேர்தல் நடைமுறை சாத்தியமற்றதாகும்.
மோடியின் இரட்டை வேடம்
தற்போது நடைபெறுகின்ற மக்களவை தேர்தல் ஏப்ரல் 19 இல் ஆரம்பித்து ஜூன் மாதம் 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடத்தப்படுகிற நிலையில் ஒரே நாடு, ஒரே தேர்தலை எப்படி நடத்த முடியும் என்பதை பிரதமர் மோடி தான் விளக்க வேண்டும்.
புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவுக்கு பழங்குடியினத்தைச் சேர்ந்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை அழைக்காமல் புறக்கணித்த பா.ஜ.க.வினர், 2025 ஆம் ஆண்டை பழங்குடியினர் ஆண்டாக கொண்டாடுவோம் என்பது அப்பட்டமான இரட்டை வேடமாகும். ஏற்கனவே ஆயுஷ்மான் திட்டத்தில் ஊழல் புரையோடிப் போயிருக்கிற நேரத்தில் மீண்டும் அத்திட்டம் குறித்து தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவின் பெருமைமிகு தமிழ் மொழி வளர்க்கப்படும் என்று தேர்தல் அறிக்கை கூறுகிறது. நிதி ஒதுக்குவதில் தமிழ் மொழியை விட 18 மடங்கு அதிகமாக சமஸ்கிருத மொழிக்கு நிதி ஒதுக்கி பாரபட்சம் காட்டுகிற பா.ஜ.க., தமிழ் மொழி வளர்ச்சி பற்றி பேசுவதற்கு எந்த அருகதையும் கிடையாது.
தேர்தல் நன்கொடை பத்திரம் மூலமாக ரூபாய் 8,000 கோடி கார்ப்பரேட்டுகளிடம் நிதியை பெற்று குவித்த பா.ஜ.க., ஊழலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறுவது மிகுந்த கேலிக்குரியதாக இருக்கிறது. வந்தேபாரத் ரயில், புல்லட் ரயில் இவை எதுவுமே சாதாரண மக்களுக்கு பயன்படுகிற வகையில் அமைவதில்லை. தமிழ்நாட்டில் மெட்ரோ ரயிலை புறக்கணித்த பா.ஜ.க.வை எவரும் மறந்திட இயலாது.
மோடியின் போலி வாக்குறுதிகள்
மோடியின் உத்திரவாதம் நம்பகத் தன்மையை இழந்துள்ளது. ஏற்கனவே 2014 இல் ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை, விவசாயிகளின் வருமானத்தை இருமடங்காக கூட்டப்படும், கருப்பு பணத்தை ஒழித்து அனைவரது வங்கிக் கணக்கிலும் ரூபாய் 15 லட்சம் டெபாசிட் செய்யப்படும் என்ற உத்திரவாதத்தை நிறைவேற்றாத மோடியின் உத்திரவாதத்தை மக்கள் எவரும் நம்ப மாட்டார்கள்.
தேர்தல் அறிக்கையை டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாளில் வெளியிட்டதாக கூறப்பட்டுள்ளது. ஆனால், பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கையை ஜாதிவாரியாக கணக்கெடுத்து இடஒதுக்கீடு வழங்க வேண்டுமென்ற கோரிக்கையை ஏற்காத பா.ஜ.க., டாக்டர் அம்பேத்கர் பெயரை உச்சரிக்க தகுதியில்லை.
எனவே, மக்களின் நம்பகத்தன்மையை இழந்த பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கை என்பது வெறும் கண்துடைப்பு நாடகமாகவே இருக்கிறது. இதில் இந்தியாவின் வளர்ச்சி குறித்து ஆக்கப்பூர்வமான கருத்துகள் எதையும் பா.ஜ.க. கூறவில்லை. இந்த தேர்தல் அறிக்கையை நாட்டு மக்கள் நிச்சயம் புறக்கணிப்பார்கள் .கடந்த தேர்தல்களில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் நிகழ்த்திய ஜூம்லா நாடகத்தை மீண்டும் பா.ஜ.க. தேர்தல் அறிக்கை வெளியிட்டு அரங்கேற்றியிருக்கிறது. இவ்வாறு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு. செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ. தனது அறிக்கையில் கூறியுள்ளார்.