செய்திகள்

ஊர் ஊராக சென்று பொய் பேசும் ஸ்டாலின்: எடப்பாடி கண்டனம்

அண்ணா தி.மு.க. ஆட்சியில் எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம்

தி.மு.க. ஆட்சியில் செய்ததை சொல்ல முடியுமா?

ஊர் ஊராக சென்று பொய் பேசும் ஸ்டாலின்:

எடப்பாடி கண்டனம்

திருமங்கலம், மார்ச் 26–

ஊர் ஊராக சென்று ஸ்டாலின் பொய் பிரச்சாரம் செய்து வருகிறார். தி.மு.க. ஆட்சியில் நிறைவேற்றிய திட்டங்களை அவரால் சொல்ல முடியுமா? என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று மதுரை மாவட்டம், திருமங்கலம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட செக்கானூரணியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கூறியதாவது:–

வருகின்ற சட்டமன்ற தேர்தலில் திருமங்கலம் சட்டமன்ற தொகுதி அண்ணா தி.மு.க.வின் நமது வெற்றி வேட்பாளர் ஆர்.பி. உதயகுமாருக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களியுங்கள். அவர் உங்களுக்கு நன்கு பரிச்சயமானவர். ஏற்கனவே சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றியவர். அவர் வருவாய் துறை அமைச்சராக சிறப்பாக பணியாற்றி, தனது முத்திரையை பதித்தவர். திறமையானவர், பண்பாளர், கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வந்து சேவை செய்பவர். திருமங்கலம் தொகுதி மக்களுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளார்.

ஸ்டாலின், நமது கூட்டணியை பற்றியும், கழகத்தை பற்றியும், அரசை பற்றியும் போகும் இடங்களில் எல்லாம் அவதூறு செய்தியை தொடர்ந்து பரப்பி வருகிறார். அவர் மக்களை பற்றி சிந்திப்பதே இல்லை. தி.மு.க. ஆட்சியில் செயல்படுத்திய திட்டங்களை பற்றியும் பேசுவதே இல்லை, ஆட்சிக்கு வந்தால் செய்ய போகும் திட்டங்களை பற்றியும் பேசுவது இல்லை. ஏற்கனவே ஏதாவது செய்தால் தானே பேசுவதற்கு. ஆனால் நாங்கள் அப்படியல்ல. ஆட்சியில் இருந்த போது மக்களுக்கு என்னென்ன வேண்டுமோ அத்தனையும் நிறைவேற்றிய அரசு அண்ணா தி.மு.க. அரசு.

மருதுபாண்டியர்களுக்கு சிலை

சிவரக்கோட்டை, கரிசல்காலப்பட்டி, சுவாமிமள்ளம்பட்டி ஆகிய பகுதி விவசாய பெருங்குடி மக்களின் நலனை கருத்தில் கொண்டு சிப்காட் அமைக்கும் திட்டம் ரத்து செய்யப்படுகிறது. திருமங்கலம், விமான நிலைய சாலையில் ரெயில்வே மேம்பாலம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. திருமங்கலம் பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைத்திட புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட உள்ளது. சிவரக்கோட்டையில் மாமன்னர் மருதுபாண்டியர்களுக்கு வெண்கல திருவுருவச் சிலை அமைக்கப்படும். டி.கல்லுப்பட்டி பேரூராட்சியில் மாமன்னர் பெரும்பிடுகு முத்திரையருக்கு வெண்கல திருவுருவச் சிலை அமைக்கப்படும். கப்பலூர் ஊராட்சியில் மாமன்னர் வீரபாண்டிய கட்டபொம்மன் மற்றும் மாமன்னர் திருமலை நாயக்கருக்கு வெண்கல திருவுருவச் சிலைகள் அமைக்கப்படும்.

கப்பலூர் ஊராட்சியில் கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனாருக்கு வெண்கல திருவுருவச் சிலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உசிலம்பட்டியில் மூக்கையா தேவருக்கு வெண்கல திருவுருவச் சிலை அமைக்கப்படும். உசிலம்பட்டி, சேடப்பட்டி ஒன்றியம், பெருங்கமாநல்லூரில் 1.45 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கைரேகை சட்டத்தினை எதிர்த்து போராடிய வீரத்தியாகிகளின் நூற்றாண்டு நினைவு மணிமண்டபம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வளவு திட்டங்களை அம்மாவுடைய அரசு செய்திருக்கிறது. இது ஸ்டாலின் கண்ணுக்கு தெரியவில்லை. அவருக்கு தெரியப்போவதும் இல்லை. அதை பற்றி கவலைப்படப்போவதில்லை. அண்ணா தி.மு.க அரசு அமைந்த பிறகு நல்ல சாலை வசதி, குடிநீர் வசதிகளை கொடுத்துள்ளோம். வேளாண் பெருமக்கள் பயன்பெற குடிமராமத்து திட்டத்தினை கொடுத்துள்ளோம். தடுப்பணைகளை கட்டியுள்ளோம்.

ஸ்டாலின் பொய்

ஸ்டாலின் செல்லுமிடமெல்லாம் ஊழல், ஊழல் என்று கூறி வருகிறார். இன்றைக்கு தகவல் தொழில் நுட்பத்துறையில், பாரத் நெட்வொர்க் டெண்டரே இப்பொழுதுதான் விடப்பட்டுள்ளது. அதற்குள் அதில் ஊழல் என்று பொய் பேசி வருகிறார். அரசாங்கத்தின் மீதும், அமைச்சர் மீதும் குற்றம் சொல்வதுதான் அவரது வாடிக்கை. அண்ணா தி.மு.க.வின் சார்பில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்படும்.

வருவாய்துறை அமைச்சரின் நடவடிக்கையினால் தமிழகத்தில் தான் அதிகமானோருக்கு பட்டா கொடுத்துள்ளோம், பட்டா மாறுதல் செய்து கொடுத்துள்ளோம். திருமங்கலம் சட்டமன்ற தொகுதி அண்ணா தி.மு.க.வின் நமது வெற்றி வேட்பாளர் ஆர்.பி. உதயகுமாருக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்யுங்கள்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

மதுரை ஆரப்பாளையத்தில்முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று (25–ந் தேதி) மதுரை மாவட்டம், மதுரை மத்தியம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆரப்பாளையத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசியதாவது:–-

வருகின்ற சட்டமன்ற தேர்தலிலே மதுரை மத்தியம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வெற்றி வேட்பாளர் என்.ஜோதிமுத்துராமலிங்க தேவருக்கு இரட்டை இலை சின்னத்திலே வாக்களியுங்கள். எளிமையானவர், கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வரக்கூடியவர். இந்த தொகுதி மக்களின் கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டுவந்து நிறைவேற்றக்கூடிய பண்பாளர், திறமையானவர். அவருக்கு இரட்டை இலை சின்னத்திலே வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்யுங்கள். அவர் ஒரு உழைப்பாளி, அந்த உழைப்பாளி உங்களுக்கு உழைத்திட ஒரு வாய்ப்பை தாருங்கள்.

தி.மு.க. தலைவர் ஸ்டாலின், எங்கு சென்றாலும் என்னைப் பற்றியும், அமைச்சர்களைப் பற்றியும் தான் பேசி வருகிறார். நான்கு வருடத்திற்கு முன்பு இந்த எடப்பாடி பழனிசாமியை யார் என்றே தெரியாது என்றார். ஆனால் தற்பொழுது என்னைப் பற்றி பேசாமல் அவருக்கு தூக்கம் வருவது இல்லை. யார் என்றே தெரியாத ஒருவரை ஏன் தொடர்ந்து பேசி வருகிறார் என்று தெரியவில்லை.

இந்த எடப்பாடி பழனிசாமி கிராமத்தில் இருந்து வந்தவன். எளிதாக ஆட்சியை கவிழ்த்து விடலாம், கட்சியை உடைத்து விடலாம் என்று நினைத்தார். அவர் கனவு ஒன்று கூட பலிக்கவில்லை. உங்களுடைய ஆதரவுடன் அனைத்தையும் தவிடுபொடியாக்கினேன். ஒரு சாதாரண மனிதன் முதலமைச்சரானால் எவ்வளவு கஷ்டம் என்பதை உணர்ந்தேன். மக்களாகிய உங்களுடைய ஆதரவினால் அனைத்திலும் வெற்றி கண்டேன்.

தி.மு.க. அட்டகாசம்

நான் முதலமைச்சராக ஆன பிறகு சட்டமன்றத்திலே பெரும்பான்மையை நிரூபிக்க கவர்னர் உத்தரவு போட்டார். அப்படி பெரும்பான்மையை நிரூபிக்கின்ற வேளையிலே, என்ன அட்டகாசம் செய்தார்கள். எழுந்து மேசையின் மீது நடனமாடுகிறார்கள். புத்தகத்தை தூக்கி வீசுகிறார்கள். இதற்கு எல்லாவற்றிற்கும் மேல் நீதிபதி இருக்கைக்கு சமமான சபாநாயகர் இருக்கைக்கு சென்று சபாநாயகரை கீழே தள்ளிவிட்டு அவர்கள் அமர்ந்த கொடுமையை நான் பார்த்தேன்.

சட்டமன்றத்திலே ரவுடித்தனம் செய்து கொண்டிருக்கிறார்கள் தி.மு.க.வினர். நாங்கள் பெரும்பான்மையை நிரூபித்த உடன் சட்டையைக் கிழித்துக் கொண்டு வெளியிலே செல்கிறார். இப்படிப்பட்ட தலைவர் தான் ஆட்சிக்கு வரவேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். நான் கிளைச்செயலாளர், ஒன்றியம், மாவட்டம், தலைமைப் பொறுப்புகளுக்கு வந்து, சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர், அமைச்சர் என படிப்படியாக உயர்ந்து, உங்கள் ஆதரவோடு முதலமைச்சர் என்ற பணி செய்து வருகிறேன்.

ஏதோ, ஸ்டாலின் தான், எனக்கு முதலமைச்சர் பதவி கொடுத்ததைப் போல, எப்போழுது பார்த்தாலும் ஊர்ந்து போனீயா, பறந்து போனீயா என்று பேசிவருகிறார். மக்கள் ஆதரித்தார்கள், பெரும்பான்மை சட்டமன்ற உறுப்பினர்கள் என்னை ஆதரித்தார்கள். அதனால் முதலமைச்சர் ஆனேன். ஸ்டாலினா என்னை முதலமைச்சர் ஆக்கினார். நீங்கள் எதிர்கட்சி தலைவர் பணியையாவது ஒழுங்காக செய்தீர்களா என்றால் அதுவும் கிடையாது.

அவர் சட்டமன்றத்திற்கும் வர மாட்டார், என்ன நடக்கிறது என்றும் அறிந்து கொள்ள மாட்டார். நான் முதலமைச்சர் ஆனதிலிருந்து ஒருநாள் கூட சட்டமன்றத்திற்கு செல்லாமல் விடுமுறை எடுத்தது இல்லை. நூற்றுக்கு நூறு சதவிகிதம் நான் பணியாற்றி உள்ளேன். இதுவரை தமிழக வரலாற்றில் சட்டமன்ற கூட்டத்தில் அனைத்து நாட்களும் பங்கேற்ற முதலமைச்சர் நான் மட்டுமே. உன்னால் முடியுமா. நான் கிராமத்திலிருந்து வந்தேன். நாட்டு மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்பதற்காக செயலாற்றினேன். சட்டமன்றத்தில் என்ன நடக்கிறது என்று அறிந்து கொள்ளாத ஒரே தலைவர் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தான்.

தொழில் வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்களை நாங்கள் செயல்படுத்தி வருகின்றோம். தென் மாவட்டங்களில் தொழில் தொடங்க வரும் நிறுவனங்களுக்கு நிலத்தின் மதிப்பில் 50 சதவிகிதத்தை மானியமாக வழங்குகின்றோம். அதேபோல தொழில் முதலீட்டிற்கும் மானியம் கொடுக்கிறோம். தென் மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவேண்டும் என்பதற்காக பல புதிய தொழில்களை கொண்டு வருவதற்காக அம்மாவுடைய அரசு புதிய தொழில் கொள்கையை அறிவித்திருக்கிறோம். இதன்மூலம் புதிய புதிய தொழில்கள் தென்மாவட்டங்களுக்கு வரும்.

அண்ணா தி.மு.க. சார்பில் தேர்தல் அறிக்கை வெளியிட்டு இருக்கிறோம். மீண்டும் அம்மாவின் அரசு அமைந்தவுடன், இந்த அறிவிப்புகள் எல்லாம் நிறைவேற்றப்படும். எல்லா அரிசி அட்டை குடும்பதாரர்களுக்கும் ஒரு ஆண்டிற்கு விலையில்லாமல் 6 சிலிண்டர்கள் வழங்கப்படும். இல்லத்தரசிகளின் சுமைகளை குறைப்பதற்காக எல்லா அரிசி அட்டை குடும்பதாரர்களுக்கு விலையில்லாமல் வாஷிங்மெஷின் வழங்கப்படும்.

மாதந்தோறும் எல்லா குடும்பங்களுக்கும் 1,500 ரூபாய் வழங்கப்படும். கேபிள் டி.வி. இணைப்பு கட்டணமில்லாமல் கொடுக்கப்படும். முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் உதவித்தொகை உயர்த்தி வழங்கப்படும். ரேஷன் பொருட்கள் அனைத்து இல்லங்களுக்கும் வீடு தேடி வந்து கொடுக்கப்படும். 18 வயது நிரம்பியவர்களுக்கு ஓட்டுனர் பயிற்சி அளிக்கப்பட்டு ஓட்டுனர் லைசென்ஸ் வழங்கப்படும். மாணவர்களின் கல்விக் கட்டணம் தள்ளுபடி செய்யப்படும்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *