சிறுகதை

ஊர்ப்பேச்சு | ராஜா செல்லமுத்து

என்னடா.. எப்பிடி இருக்க..?

‘‘சாப்பட்டுக்கு என்ன பண்ற..?’’ கரிசனையோடு கேட்டாள் திலகா.

‘‘எப்பிடியோ போய்ட்டு இருக்கு என்ன பண்றது..? இதல்லாம் நாம வாங்கி வந்த வரம்.அப்பிடி நெனச்சிட்டு போய்ட்டே இருக்க வேண்டியது தான்.. அப்புறம் என்ன பண்ணமுடியும்..?’’ என்று கொஞ்சம் சலிப்பாகவே சொன்னான் சதீஷ்.

‘‘என்னடா இவ்வளவு சலிப்பா பேசுற..? சாப்பிட்டுயா..? இல்லையா..?

நான் வேணும்னா வீட்டுக்கு சாப்பாடு கொண்டு வரவா..’’ என்று திலகா கேட்க

வேண்டான் என்றான் சதீஷ்.

‘‘ஏன்..?’’

‘‘நானே சமச்சுக்கிறேன்..’’ என்று பட்டும் படாமல் பதில் சொன்னான்.

‘‘நல்லதுன்னு நெனச்சிக்கோ.. இல்ல ஓட்டல்லயே சாப்பிட்டுட்டு உடம்ப கெடுத்திருப்ப..’’

‘‘ஆமாமா.. பெருசா ஒடம்பு..’’ வெறுப்பாய் பேசியவனை

‘‘ஏண்டா என்னாச்சு..?’’

‘‘சமைக்கிறது கூட பெரிய விசயமில்ல.. இந்த பாத்திரங்கள கழுவுற வேலை இருக்கே அப்பப்பா.. அதான் ரொம்ப கஷ்டம்..’’

‘‘ம்ம்.. ஆமாடா ஆம்பளை பயலுக்கு பாத்திரங்கள கழுவுறது கஷ்டம் தான்..’’ என்று இருவரும் பேசிக்கொண்டிருக்கும் போதே சதீஷ் மெல்லச்சிரித்தான்

‘‘என்னடா.. ஏன்.. சிரிக்கிற..?’’

‘‘ஒண்ணுல்ல.. இன்னைக்கு வீட்டுக்கு பக்கத்தில் ஒரு சின்ன நிகழ்வு அத நெனைச்சேன் சிரிச்சேன்..’’ என்றான் சதீஷ் .

‘‘என்ன சொல்லுடா..’’ என்று திலகா கேட்டாள்.

‘‘அத நீங்க விரசமா எடுக்கலன்னா.. சொல்லுவேன் ; இல்ல வேண்டாம்..’’ என்று சதீஷ் சொன்னான்.

‘‘நீ சொல்றது பொறுத்து தான் இருக்கு.. அது விரசமா இல்லையான்னு..’’ திலகா சொன்னாள்.

‘‘ம்ம்.. இது இயற்கை, கடவுள் எல்லா உயிர்களையும் எப்பிடி படைச்சிருக்கான்னு பாருங்க..’’ என்ற சதீஷ்

‘‘எங்க வீட்டுக்கு பக்கத்து வீட்டுல ஆள் இல்ல. அதுவும் அந்த வீட்டுல கதவு போடல. எப்பவும் திறந்தே கிடக்கும் அந்த வீட்டுக்குள்ள ரெண்டு மூன்று பூனைகள் கெடக்கும். கொஞ்ச நாளைக்கு ஒரு புது ஆண் பூனை எங்கிருந்தோ வந்துச்சு. வந்த அந்தப்பூனை அங்க இருந்த பெண் பூனையை டார்ச்சர் பண்ணிட்டே இருக்கு ஆனா.. அந்த பெண் பூனையோ.. அதுக்கு கொஞ்சங் கூட இடம் கொடுக்கல ஆனா.. அந்த பெண் பூனைய விடாம துரத்திட்டே இருக்கு.. அந்த ஆண் பூனை நான் இதுவரைக்கும் இப்பிடி ஒரு நிகழ்வ பாத்ததே இல்ல.. அந்தப் பெண் பூனை எங்கெங்க போகுதோ அங்கயெல்லாம் பின்னாடியே போகுது.

இந்த ஆண் பூனை பக்கத்தில போறது தன்னோட முன்னங்கால வச்சு பிராண்டுது. கூட படுத்திட்டு அத எங்கெங்க போகுதோ அங்கயெல்லாம் பிள்ளாடியே போயி ஒக்காந்திட்டு அந்த பெண் பூனைய எவ்வளவு டார்ச்சர் பண்ணமுடியுமோ.. அவ்வளவு டார்ச்சர் பண்ணிட்டு இருக்கு.. பூனைக்கு அறிவு இருக்கும் போல. அந்தப் பெண் பூனை ஆண் பூனை பக்கத்தில வர முடியாது சின்ன திட்டுல ஏறிப் படுத்துக்கிரும் . ஆனா.. இந்த ஆண் பூனை ரெண்டு மூணு நாளா பெண் பூனைய கொஞ்சங்கூட வெலக விடுறதிலட்ல.. மனுச இனத்தில ஆம்பளைங்க தான் இப்பிடி இருக்காங்கன்னா.. விலங்குகள்ல கூட ஆண் தான் ரொம்ப அராஜகம் பண்ணிட்டு இருக்கு. ரேப் கேஸ்ன்னு விலங்குகளுக்கு சட்டதிட்டம் போட்டா.. இந்த பூனைய தூக்குல போட்டுக்கொல்லணும்..’’ என்று சதீஷ் சொல்ல திகலாவிடமிருந்து பதில் வராமல் விசும்பல் சத்தம் மட்டுமே வந்தது.

‘‘ஹலோ என்ன..? ஏன் அழுறீங்க..?’’ சதீஷ் கேட்டான்.

தேம்பிக்கொண்டே இருந்தாள் திலகா.

‘‘நான் ஏதும் தப்பா சொல்லிட்டேனா..?’’ என்று கேட்டான் சதீஷ் .

‘‘இல்ல ஒரு பூனைக்கே இந்த மாதிரி நீ.. வருத்தப்பட்டய்ன்னா.. நான் படுற பாட்டக்கேட்டா ஒனக்கு மண்ட வெடிச்சிரும்..’’ என்று அழுதுகொண்டே சொன்னாள் திலகா.

‘‘ஏன்..? என்னாச்சு..?’’

‘‘நான் இருக்கிறது உனக்குத் தெரியும்ல..’’

‘‘ஆமா..’’

‘‘என்னோட வீட்டுக்காரரு செத்து அஞ்சு வருசம் ஆகுமில்ல..’’

‘‘ஆமா..’’

‘‘இந்த அஞ்சு வருசத்தில் என்னைய என்ன மாதிரி பேசுறாங்க என்கிட்ட ஆளுகெல்லாம் எப்படி நடத்திட்டு இருக்காங்கன்னு தெரியுமா..? அதெல்லாம் வெளிய சொல்ல முடியாம என் நெஞ்சுக் கூட்டுக்குள்ளயே அடச்சு வச்சிட்டு தான் வாழ்ந்திட்டு இருக்கேன்.. ரொம்ப கஷ்டம்டா..இங்க நிறைய பேர் ஆம்பளைங்களா இருக்காங்க.. ஆனா நல்ல மனுசனா யாரும் இல்ல.. எல்லாமே ரொம்ப தப்பா கேட்டுட்டு இருக்காங்கடா.. யார் போன் பேசுனாலும் டபுள் மீனிங்கல தான் பேசுறாங்க. வேற மாதிரி அர்த்தத்தில பாக்குறாங்க. வெளிய இருக்கிற ஆளுங்க பரவாயில்ல. ஆனா..! சொந்த பந்தமா இருக்கிற ஆளுங்க ரொம்ப மோசம்டா. கிராமத்துக்கு போனா இல்லாத கேள்வியெல்லாம் கேக்குறாங்க.. ரெண்டு பிள்ளைங்கள வச்சுட்டு நீ.. டவுன்ல எப்படி சமாளிக்கிற..? தப்பா நீ.. நடக்காம எப்படி உன்னால சமாளிக்க முடியுதுன்னு.. என் கூடப் பெறந்த அண்ணனே கேட்டுட்டு இருக்கான். ஏண்டா.. ஒரு பொண்ணு கணவன் இல்லாம வாழ்றது தப்பா..? ஏன் புருசன் இல்லன்னா கூட ஒழுக்கமா வாழமுடியாதா..? ஏன் இந்த சமூகம் ஒரு பெண்ண இப்படி பாத்திட்டு இருக்கு. ரொம்ப வேதனையா இருக்குடா..’’ என்று திலகா சொல்லச்சொல்ல சதீஷ்க்கு என்னவோ போலானது.

‘‘ஸாரிங்க.. நான் ஏதோ பூனைக்கதை சொல்லப்போயி ஓங்களோட மனச காயப்படுத்திட்டேன் போல..’’ என்று சதீஷ் சொன்னான்.

‘‘ச்சே.. அப்பிடியில்ல.. சதீஷ் ஒரு பூனைக்கே இரக்கப்படுற நீ எங்க..? என்னைய தப்பா பேசுற மனுசங்க எங்க..? என்னோட மொபைல்ல நியை நம்பர பிளாக் பண்ணிட்டேன்டா. ஒரு பொண்ணு ஆம்பளை துணையில்லாம சுத்தமா வாழ்ந்தாலும் இங்க இருக்கிற மனுசங்க வாழ்ந்தாலும் இங்க இருக்கிற மனுசங்க அந்த பொண்ண தப்பா தான் பாக்குறாங்க. தப்பா தான் பேசுறாங்க. என்ன பண்ண..? மனசு ஒடஞ்சு நான் ஏதாவது பண்ணிட்டா.. என் குழந்தய யார் பாக்குறது..? ரெண்டு பேரும் அனாதையா போவானுகடா அதான் யார் என்ன பேசுனாலும் இதெல்லாம் நம்ம விதின்னு நினைச்சிட்டு வாழ்ந்திட்டு இருக்கேன்.’’ என்று திலகா தேம்ப சதீஷ்க்கு ரொம்பவே வேர்த்துக்கொட்டியது

‘‘சரி போன வச்சுரவா..?’’ என்று திலகா கேட்டாள்.

‘‘ம்ம்..’’ என்று பதில் சொன்னான் சதீஷ்

‘‘ச்சே.. நாம தான் தேவையில்லாம அவங்களோட மனச காயப்படுத்திட்டோம் போல..’’ என்ற படியே வீட்டிற்குள் நுழைந்தான் சதீஷ்.

அந்தப்பெண் பூனையை மறுபடியும் டார்ச்சர் செய்து கொண்டிருந்தது அந்த ஆண் பூனை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *