சிறுகதை

ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால்…. | ராஜா செல்லமுத்து

“உன்னை விட உன்னைச் சுற்றியிருப்பவர்களை நேசி…

நீ உயர்வாய்…”

வழக்கம் போலவே அன்றும் அஞ்சுகம் தன் வாசலைக் கோடு போட்டுக் கூட்டிக் கொண்டிருந்தாள். இதை வைத்த கண் வாங்கமால் பார்த்துக் கொண்டே இருந்தாள் கஸ்தூரி அவள் அப்படிப் பார்க்கும் போது கோபம் கண்ணில் தெறித்து விழுந்தது.

என்ன அப்படி பாத்திட்டு இருக்க என்று அஞ்சுகம் கேட்ட போது அதற்கு எந்தப் பதிலும் சொல்லாமல் தன் வாசலைப் பார்த்தவாறே இருந்தாள் கஸ்தூரி. தவறியும் கஸ்தூரி வீட்டு வாசலுக்கு அவளின் விளக்குமார் போகவே இல்லை. இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த கஸ்தூரி அன்று வாய்திறந்தே கேட்டு விட்டாள்.

என்ன அஞ்சுகம் உன்னோட விளக்கமாறு தவறியும் எங்க வீட்டு வாசப்பக்கம் வராது போல

“ஐயய்யோ அப்படியெல்லாம் எதுவுமில்லையே”

நானும் பாத்திட்டு தான் இருக்கேன் .அப்படியே லட்சுமணன் கோடு மாதிரியே கோடு போட்டுக் கூட்டிட்டு இருக்க

“இல்லையே”

“ஆமா தெனமும் நான் பாத்திட்டு தான் இருக்கேன். ஒன்னோட வாசல சரியா கூட்டி கோலம் போடுற எப்பவும் சுத்தமா வச்சுக்கிற. படி மொட்டை மாடின்னு ரொம்ப சுத்தம். ஆனா ஒரு நாள் கூட இந்தப் பக்கம் சரிபண்றதே இல்ல என்று கஸ்தூரி சொன்ன போது அஞ்சுகத்திற்கு அப்படியொரு கோபம் வந்தது.

இருந்தாலும் அதை அடங்கி கொண்டவள் அதை வெளிக்காட்டவே இல்லை.

நீங்க என்னைய தப்பா புரிஞ்சுக்கிட்டீங்கன்னு நினைக்கிறேன். இது தப்பு இல்லையே உண்மையச் சொன்னேன். உன்னோட கேரக்டர் நடத்தையச் சொன்னேன். இது தப்பு அஞ்சுகம். இப்படி இருக்காத உன்னைய திருத்திக்கோ இது நல்லதில்ல அஞ்சுகம் என்று கஸ்தூரி சொன்னது அவளுக்கு என்னவோ போலானது.

நாளைக்கு இருந்து உங்க வாசலையும் சேர்த்து கூட்டுறேன் என்ற அஞ்சுகத்தின் பேச்சை அவள் நம்புவதாக இல்லை. தினமும் இதையே தான சொல்கிறாள்.

நாளைக்கு என்ன செய்றான்னு பாப்பமே என்ற கஸ்தூரி கொஞ்சம் நம்பிக்கையை வைத்திருந்தாள்.

மறு நாள் விடிந்தது. வழக்கம் போலவே அவள் வாசலை மட்டுமே கூட்டிப் பெருக்கிக் கோலம் பூ என அத்தனையும் வைத்திருந்தாள் எப்பவும் போல் இரண்டு வீட்டு வாசல்க்கும் இடையில் லட்சுமணக் கோடுபோல ஒரு கோடு இருந்தது.

இவளெல்லாம் திருந்தவே மாட்டா என்ன ஒதுங்க இந்த காதுல வாங்கி அந்தக் காதுல விட்டுட்டு போயிட்டு இருப்பா கேட்டா நான் பொது நலம் உள்ளவள்ளன்னு இவருக்கு பேரு வேற என்ற கஸ்தூரி நாய் வாலை நிமித்த முடியுமா என்ன? என்று அவள் வாசலைக் கூட்ட ஆரம்பித்தாள்.

முன்னைப் போலவே அஞ்சுகத்தின் வாசல் படி மாடி என அவ்வளவு சுத்தம். ஒரே வீட்டுல குடியிருக்கிறவ எப்படி பிரிவினை பாக்குறான்னு பாரு. இவள மாதிரி ஆளுக இங்க நிறைய இருக்காங்க. நாமளே உடம்பு சரியில்லாத

ஆளு .இதையும் சேர்த்து கூட்டுனா இவங்களையெல்லாம் கொறஞ்சு போவாளா என்று சொல்லி ஏதும் திருத்தவே முடியாது. அவங்களா திருந்த எப்பவும் மாட்டாங்க போல என்ற கஸ்தூரி அவளின் வாசலைக் கூட்ட ஆரம்பித்தாள் .

இதை ஓரக் கண்ணால் பார்த்த அஞ்சுகம் பட்டெக வீட்டிற்க்குள் நுழைந்தாள்.

இப்படியாய் நாட்கள் பல நகர்ந்தன. நிலத்தடி நீர் இல்லாத அந்த வீட்டில் கார்ப்ப ரேசன் தண்ணீர் மட்டுமே வாழ்க்கையின் வெற்றிடத்தை நிரப்பி வைத்துக் கொண்டிருந்தது.

ஒரு நாள் கார்ப்பரேசன் குழாயில் தண்ணீருக்குப்பதில் வெறும் காற்று மட்டுமே வந்து கொண்டிருந்தது. தண்ணி வரமாட்டேங்குதே என்ன வாசர் ஏதும் போயிருச்சா? இப்படி காத்து போகுது என்ற அஞ்சுகம் டொக்… டொக்….டொக் என அந்தக் குழாயை அடித்துக் கொண்டிருதாள்.

ம்ஹூகும் தண்ணீர் வருவேனா? என்று அடம் பிடித்தது.

என்ன செய்றது என்று சிறிது நேரம் யோசித்தவள் படாரெனப் போய் கஸ்தூரியின் வீட்டுக்குழாயில் கொஞ்சம் தண்ணீரை ஊற்றினாள். சர்ரென குழாய்க்குள் தண்ணீரை உள் வாங்கிய அந்த அடிகுழாய் முழுத் தண்ணீரையும் உள் இழுத்துப் பெரு மூச்சு விட்டது. உடனே அங்கிருந்து ஓடி வந்த அஞ்சுகம் தன் வீட்டிலிருந்த குழாயை பட்பட்பட்டென அடித்தாள். அது வரையில் மெளனம் காத்து நின்ற குழாய் மொது மொதுவென தண்ணீரைக் கொட்டியது.

ஆகா என்ன இவ்வளவு தண்ணீர்கொட்டுதே என்ற அஞ்சுகம் படபடவென தண்ணீர் அடிக்க ஆரம்பித்தாள். இப்படியே தினமும் நடந்தது. இது கஸ்தூரிக்குத் தெரியவே இல்லை. கஸ்தூரி வீட்டிலுள்ள குழாயில் தண்ணீர் ஊற்றவில்லையென்றால் ஒரு பொட்டு தண்ணீர் வராது என்பது அஞ்சுகத்திற்க்குத் தெள்ளத் தெளிவாகவே தெரிந்தது. கஸ்தூரியின் வீட்டுக்குழாயில் தண்ணீர் ஊற்றினால் குற்றால அருவி போலவே அஞ்சுகம் வீட்டுக் குழாயில் தண்ணீர் கொட்டியது.

அடடா அவங்க வீட்டுல தண்ணீர் ஊத்துனா நம்ம வீட்டுல தண்ணி வருதே. நாம தான் அவங்க வீட்டக் கட்டிப் பெருக்காம ரொம்ப சுயநலமாவே இருந்திட்டோம் என்று புத்தி தெளிந்த அஞ்சுகம் –

அன்று முதல் கஸ்தூரியின் வீட்டையும் சேர்த்தே கூட்டினாள். கோலம் போட்டாள் ;பூ வைத்தாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *