செய்திகள்

ஊரடங்கு தடையை மீறி சுற்றிய வாகன ஓட்டிகளுக்கு அபராதம்

Spread the love

மதுரை, மார்ச். 26–

மதுரை நகர், புறநகர் பகுதியில் ஊரடங்கு உத்தரவை மீறி வெளியில் சுற்றும் வாகன ஓட்டுநர்களை போலீசார் எச்சரித்தும் அபராதமும் விதித்தார்கள். சில இடங்களில் போலீசார் அடித்து விரட்டினார்கள்.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மத்திய–மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்றும் மதுரை நகரில் சில இடங்களில் மோட்டார் வாகனங்களில் சென்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி எச்சரித்தனர். இது குறித்து தகவலறிந்த மாநகர் காவல் ஆணையர் காரணமின்றி வாகனங்களில் செல்வோர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

இதையடுத்து மதுரை கோரிப்பாளையம் பகுதியிலும் அண்ணா பேருந்து நிலையம் அருகிலும் காரணமின்றி மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களில் சென்ற 100 க்கும் மேற்பட்டோரை பிடித்து அவர்களுக்கு தலா ரூ.100 வீதம் போலீசார் அபராதம் விதித்து வசூல் செய்தனர். சில இடங்களில் வாகன ஓட்டிகளுக்கு நுதன தண்டனையும் வழங்கினார்கள்.

மதுரை மாநகர் காவல் ஆணையர் அலுவலக வளாகத்தில் அனைத்து அத்தியாவசிய பொருள்கள் விற்பனை கடை உரிமையாளர்களுக்கான கொரோனா விழிப்புணர்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் வாடிக்கையாளருக்கு இடையே 1 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும். கடை உரிமையாளர்கள் விற்பனை நேரத்தை குறைத்து கொள்ள வேண்டும். என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவுறுத்தல்களை காவல் துணை ஆணையர் கார்த்திக் வழங்கினார். மாட்டுத்தாவணி, பரவை காய்கனிச் சந்தையில் உள்ள கடை உரிமையாளர்கள், நெல்பேட்டை பகுதியில் மீன் மற்றும் இறைச்சி விற்பனை செய்யும் கடை உரிமையாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மதுரை மாவட்டம் பேரையூர் காவல் துணை கண்காணிப்பாளர் மதியழகன் தலைமையிலான போலீசார் ஒலிபெருக்கி மூலம் அனைவரும் வீட்டில் இருங்கள் வெளியே யாரும் வராதீர்கள் பாதுகாப்புடன் இருக்க வலியுறுத்தி வந்தனர். அத்தியாவசியப் பொருட்கள் தேவைக்கு இருசக்கரவாகனத்தில் ஒரு நேரம் வெளியே வர மட்டும் அனுமதி வழங்கினர். அதுவும் உடனே பொருள்கள் வாங்கி வீட்டிற்குள் சென்று விடவும் என வலியுறுத்தினர். இருசக்கர வாகனங்களில் தேவையில்லாமல் வெளியே சுற்றியவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர். ஆனால் தொடர்ந்து போலீசார் அறிவுரையைக் கேட்காமல் பேரையூர் முக்கு சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்தவர்களை போலீசார் லத்தியால் அடித்து விரட்டினர். இதனைத் தொடர்ந்து தேவையில்லாமல் யாரும் வெளியில் நடமாடுவதைத் தவிர்த்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *