செய்திகள்

ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை

Spread the love

ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை:

அமைச்சர் சி.வி. சண்முகம் எச்சரிக்கை

 

விழுப்புரம், மார்ச்.26–

ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில், அரசு உத்தரவை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார்.

விழுப்புரம் மாவட்டத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் முன்னேற்பாடு குறித்த ஆய்வுக்கூட்டம் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமை தாங்கி, மாவட்டம் முழுவதும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அவர், தடுப்பு நடவடிக்கை பணிகளை துரிதப்படுத்தும்படி உத்தரவிட்டார்.

முன்னதாக முண்டியம்பாக்கத்தில் உள்ள விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அமைச்சர் சி.வி.சண்முகம் சென்று அங்கு ஏற்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தப்பட்டோருக்கான சிகிச்சை வார்டை ஆய்வு செய்தார். தொடர்ந்து, விழுப்புரம் மனிதவள சுகாதார மேம்பாட்டு நிறுவனத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக தனி மருத்துவமனையையும், அங்கு செய்யப்பட்டுள்ள வசதிகளையும் அமைச்சர் சி.வி.சண்முகம் பார்வையிட்டார். அதன் பிறகு அவர், நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:–

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க முதல்அமைச்சர் அறிவுறுத்தலின்படி பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் விழுப்புரம் மாவட்டத்திலும் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக சுகாதாரத்துறை உள்ளிட்ட அனைத்துத்துறை அதிகாரிகளும் ஒருங்கிணைந்து சிறப்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

100 படுக்கை வசதிகள்

நோயால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தி அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு வசதியாக விழுப்புரம் நகர மருத்துவமனை 100 படுக்கை வசதிகளுடன் முழுக்க, முழுக்க மாற்றியமைக்கப்பட்டு அதற்கான பணிகள் நடந்து வருகிறது. இந்த மருத்துவமனை கொரோனா நோய்க்கான சிகிச்சை மற்றும் கண்காணிப்பு மையமாக செயல்படவுள்ளதால், எளிதில் தொற்று பாதிப்புக்கு உள்ளாகக் கூடிய முதியோர்கள், குழந்தைகள், நீரிழிவு நோயாளிகள், நீண்டநாள் சிகிச்சை பெறுவோர் தேவையின்றி இங்கு வருவதைத் தவிர்க்க வேண்டும்.

கொரோனா தொற்று சந்தேகம் உள்ளவர்கள் மருத்துவரை அணுகி சிகிச்சை பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு இந்நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்காக நமது மாவட்டத்திற்கு ரூ.2 கோடியே 5 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. அதுமட்டுமின்றி அத்தியாவசிய தேவைகளுக்காக ஊரக வளர்ச்சி நிதியில் இருந்து ரூ.1 கோடியே 35 லட்சத்தை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. எனவே மக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை. விழுப்புரம் மாவட்டத்தில் இதுவரை 139 பேர் தனிமைப்படுத்தப்பட்டு அவர்கள் தினந்தோறும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இவர்களில் 3 பேரின் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு அவர்களுக்கு வைரஸ் இல்லை என்று பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

21 நாட்கள் வெளியே வரத் தடை

இந்நோய் தடுப்பு நடவடிக்கைக்காக நமது மாவட்டத்தில் உள்ள 348 ஆரம்ப, துணை சுகாதார நிலையங்களுக்கு முக கவசங்கள், கிருமி நாசினி திரவம் வழங்கப்பட்டுள்ளது. 21 நாட்களுக்கு மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்று மத்திய அரசு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. ஆகவே மக்கள் அனைவரும் கண்டிப்பாக சுயமாக இந்த ஊரடங்கை கடைபிடிக்க வேண்டும். அங்கொன்றும், இங்கொன்றுமாக தேவையில்லாமல் வெளியே வருபவர்கள் மீது மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

அதேநேரத்தில் அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் தடையின்றி மக்களுக்கு கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காய்கறி, மளிகை, இறைச்சி கடைகள், மருத்துவமனைகள், மருந்தகங்கள், பெட்ரோல் நிலையங்கள் வழக்கம்போல் இயங்கும். மேலும் மக்கள் வீட்டிலேயே இருப்பதால் வேலைக்கு செல்வோரின் வருமானம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே தமிழக அரசின் சார்பில் குடும்ப அட்டைதாரர்கள், அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ரூ.1,000 வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இவை விரைவில் மக்களுக்கு வந்து சேரும். அதுபோல் ஏப்ரல் மாதம் பெறக்கூடிய ரேஷன் பொருட்களை இந்த மாதமே பெற்றுக்கொள்ளவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

கலெக்டர், போலீஸ் கமிஷனர்

ஆய்வு கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை, போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், கூடுதல் கலெக்டர் ஸ்ரேயா சிங், முத்தமிழ் செல்வன் எம்.எல்.ஏ., ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மகேந்திரன், நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் சண்முகக்கனி, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் குந்தவிதேவி, சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் செந்தில்குமார், கோட்டாட்சியர் ராஜேந்திரன், உதவி கலெக்டர் (பயிற்சி) கவிதா, நகராட்சி ஆணையர் தட்சிணாமூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *