செய்திகள்

ஊரடங்கிலும் சுறுசுறுப்பாக இயங்கி கொண்டிருக்கும் தென்னக ரெயில்வே அதிகாரிகள்

Spread the love

சென்னை, மார்ச் 26–

அடுத்த மாதம் (ஏப்ரல்) 14–ந் தேதி வரை நாடெங்கும் ரெயில்கள் எதுவும் ஓடாது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது அல்லவா? இதுபற்றி தென்னக ரெயில் அதிகாரியிடம் பேசியபோது, ‘தற்போது நாங்கள் நேரம் போதாது என்ற அளவிற்கு வேலை செய்கிறோம்’ என்று பெருமிதத்தோடு தெரிவித்தார்.

பயணிகள் ரெயில் சேவை முற்றிலும் நின்றுவிட்டாலும் சரக்கு ரெயில் சேவை நடைபெறுகிறது. தினமும் 9000 சேவைகள் நாட்டின் எல்லா பகுதிகளையும் இணைத்து செயல்படுவதாக தெரிவித்தார்.

தேசிய உணவு கழகம் எல்லா மாநிலங்களுக்கும் ரேஷன் கடைகள் முதல் தெருமுனை மளிகை கடைகள் வரை உணவு தானியங்களை அனுப்பியாக வேண்டும், அதற்காக ரெயில்வே துறையின் உதவியை தான் நம்பி இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

அரிசி, கோதுமை, சர்க்கரை, பருப்பு முதலிய அனைத்து அன்றாட அவசியத்தேவை உணவுப்பொருட்கள், சமையல் எண்ணை மற்றும் பெட்ரோல், டீசல் வரை மாநிலங்களுக்கு கொண்டு செல்லும் மகத்தான பணியில் ஈடுபட்டிருக்கும் ரெயில்வேயின் சரக்கு ரெயில் போக்குவரத்து நிறுத்தப்படாமல், 24 மணி நேரமும் பணியாற்றிக் கொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட 9000 சரக்கு ரெயில்கள் நாடெங்கும் ஓடிக்கொண்டிருப்பதை பாதுகாப்பாக செயல்பட வைக்கும் பணியில் ஒரு பெரிய படையே ரெயில்வே துறையின் சார்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்றார்.

காவல்துறை, தீயணைப்பு துறை, மாநில அரசு இயந்திரம், மருத்துவர்கள் போன்ற அவசரப்பிரிவு அதிகாரிகள் மட்டுமின்றி ரெயில்வே அதிகாரிகளும் அந்த பட்டியலில் இருப்பதை பெருமையுடன் அவர் சுட்டிக் காட்டினார்.

பெரும்பாலான ரெயில்வே அதிகாரிகள் ‘வொர்க் ஃப்ரம் ஹோமில்’ வீட்டில் இருந்தபடி ஈடுபட்டு இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

டிக்கெட் ரத்து எப்படி?

ஏப்ரல் 14–ந் தேதி வரை பயணிகள் ரெயில் சேவை முழுமையாக ரத்து செய்யப்பட்டுவிட்டதால் வாங்கிய டிக்கெட்டை ரத்து செய்து திரும்ப பணம் பெறுவது பற்றி கவலைப்பட வேண்டாம் என்றும் அவர் உறுதி கூறினார்.

ஆன்லைனில் இ–டிக்கெட் எடுத்தவர்களுக்கு ரத்து செய்யப்பட்ட ரெயில் டிக்கெட்டின் முழு கட்டணமும் எந்தவிதப் பிடித்தமுமின்றி அவர்களது வங்கி கணக்கிற்கு திரும்ப தரப்பட்டு விட்டதாக தெரிவித்தார்.

கவுண்டரில் டிக்கெட் எடுத்தவர்கள் ஏப்ரல் 15–ந் தேதி முதல் மூன்று மாதங்களுக்குள் எப்போது வேண்டுமானாலும் ரத்தான ரெயிலில் எடுக்கப்பட்ட டிக்கெட்டை திரும்பக் கொடுத்து முழு கட்டணத்தையும் திரும்ப பெற்று கொள்ளலாம். ஆக உடனே அவசர அவசரமாக நெரிசலாக செல்ல வேண்டிய அவசியம் கிடையாது என்றும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *