செய்திகள் போஸ்டர் செய்தி

ஊரக உள்ளாட்சித் தேர்தல்: நாளை வாக்கு எண்ணிக்கை

Spread the love

சென்னை, ஜன.1–
தமிழகத்தில் 27 மாவட்டங்களில் 2 கட்டங்களாக நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை காலை 8 மணிக்கு எண்ணப்படுகின்றன.
தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 10 மாவட்டங்கள் தவிர மீதமுள்ள 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சிகளுக்கு மட்டும் 2 கட்டங்களாக கடந்த டிச.27 மற்றும் 30-ம் தேதிகளில் வாக்குப்பதிவு நடை பெற்றது.
முதல் கட்டமாக 156 ஊராட்சி ஒன்றியங்களுக்கு நடைபெற்ற தேர்தலில் 76.19 சதவீதம் வாக்குகள் பதிவாகின. தொடர்ந்து நடந்த 2-ம் கட்டமாக 158 ஒன்றியங்களில் நடைபெற்ற தேர்தலில் 77.73 சதவீதம் வாக்குகளும், 30 வாக்குச் சாவடிகளில் நடைபெற்ற மறுவாக்குப்பதிவில் 72.70 சதவீதம் வாக்குகளும் பதிவாகின.
தேர்தலில் பதிவான வாக்குகள் அடங்கிய பெட்டிகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் மேல்புறம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு யந்திரங்கள் அந்தந்த பகுதிகளில் அமைக்கப்பட்ட வாக்கு எண்ணிக்கை மையங்களில் வைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
315 மையங்கள்
இதற்கிடையில், 2-ம் கட்ட தேர்தலில் வாக்குச்சீட்டு மாற்றி கொடுக்கப்பட்டதால் ஏற்பட்ட குழப்பம் காரணமாக மதுரை, தேனி, நாகை, தூத்துக்குடி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் 9 வாக்குச் சாவடி களில் தேர்தல் நிறுத்தப்பட்டது. இந்த வாக்குச்சாவடிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இந்நிலையில் 27 மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள 315 வாக்கு எண்ணிக்கை மையங்களில் நாளை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. இதற்கான ஏற்பாடுகளை அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் செய்துள்ளன.
தேர்தலில் 4 பதவிகளுக்கும் ஒரே நேரத்தில் வாக்குப்பதிவு நடைபெற்றதால், ஒவ்வொரு வாக்காளர்களும் தலா 4 வாக்குகள் பதிவு செய்து உள்ளனர் என்பதால் முதலில் ஓட்டு எண்ணும் மையத்தில் அமைக்கப்பட்டு உள்ள 30 மேஜைகளில் வாக்குச்சீட்டுகள் கொட்டப்படுகிறது.
ஒவ்வொரு மேஜைக்கும் ஒரு கண்காணிப்பாளர் மற்றும் 3 வாக்கு எண்ணுபவர்கள் பணியில் இருப்பார்கள். இவர்கள், ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி தலைவர், யூனியன் கவுன்சிலர் மற்றும் மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் பதவிகளுக்கு பதிவான வாக்குகளை தனித்தனியாக பிரிப்பார்கள்.
1 மணிக்கு மேல் முடிவு
பின்னர் 4 பதவிகளுக்கும் பதிவான வாக்குகளை எண்ணுவதற்காக தனித்தனியாக அறைகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. இந்த 4 அறைகளிலும் அந்த அறைகளுக்கான வாக்குகள் கொண்டு செல்லப்படுகிறது. பின்னர் அங்கு 8 ரவுண்டுகளாக வாக்கு எண்ணும் பணி நடக்கும். இந்தப்பணியே நாளை பகல் 1 மணி வரை நடக்க வாய்ப்பு உள்ளது. பின்னர் படிப்படியாக வாக்குகள் எண்ணி முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.
அனைத்து வாக்கு எண்ணும் மையங்களிலும் நடக்கும் நிகழ்வுகள் வீடியோ பதிவு செய்யப்படுகிறது. குறிப்பாக ஒவ்வொரு அறையிலும் 2 கேமராக்கள் பொருத்தப்பட்டு வாக்கு எண்ணும் பணி பதிவு செய்யப்படுகிறது. இந்த காட்சிகளை அதிகாரிகள் மற்றும் பார்வையாளர்கள் உள்பட யாரும் பார்க்க முடியாது.
வாக்கு எண்ணும் மையத்தில் நடக்கும் நிகழ்வுகள் அனைத்தும் ரகசியமாக வீடியோ பதிவு செய்து பாதுகாக்கப்படும். இதில் பிரச்சினை ஏற்படும் பட்சத்தில் அந்த வீடியோ காட்சிகள் பார்க்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். வாக்கு எண்ணிக்கை நடைபெறும் 27 மாவட்டங்களிலும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதுதவிர வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் ஆசிரியர்களை கருத்தில் கொண்டு பள்ளிகள் திறப்பதற்கான தேதியும் 4-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
கோயம்பேட்டில் உள்ள மாநில தேர்தல் ஆணையத்தில், தமிழக தேர்தல் ஆணையர் ஆர்.பழனிசாமி தலைமையில் வாக்கு எண்ணிக்கைக்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. 27 மாவட்டங்களில் ஆட்சியர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுடன் காணொலி காட்சி மூலம், தேர்தல் ஆணையர் கலந்துரையாடினார்.
குறிப்பாக, வாக்கு எண்ணிக்கையின் போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு குறித்து விவாதித்தார். அப்போது, மாநில தேர்தல் ஆணைய செயலாளர் இல.சுப்பிரமணியன், தேர்தல் பிரிவு ஐ.ஜி. சேஷசாயி, தேர்தல் பிரிவு எஸ்.பி. கண்ணம்மாள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *