செய்திகள்

ஊரக உள்ளாட்சித் தேர்தல்: 74.37 சதவீத வாக்குப் பதிவு

சென்னை, அக். 7–

உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து நேற்று 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தலின் முதல் கட்ட வாக்குப் பதிவில் 74.37 சதவிகித வாக்குகள் பதிவாகின எனத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் புதிதாக உருவாக்கப்பட்ட தென்காசி, கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருநெல்வேலி, வேலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு இரண்டு கட்டங்களாகத் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.

39 ஒன்றியங்களில் தேர்தல்

இதற்காக மொத்தம் 1,00,698 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். பரிசீலனையில் 1,246 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 14,571 பேர் மனுக்களைத் திரும்பப் பெற்றனர். 39 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 78 மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்கும், 755 ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கும், 1577 கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கும், கிராம ஊராட்சி உறுப்பினர்களுக்கான 12,252 பதவிக்கும் முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் முதல்கட்ட வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற்றது. நேற்று காலை முதல் வாக்குப்பதிவில் தொய்வு ஏற்பட்ட நிலையில் நேற்று மாலை பல்வேறு வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் அதிகளவில் வந்து வாக்களித்துச் சென்றனர்.

இதனால் நேற்று இரவு வரை ஒருசில வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் காரணமாக 9 மணி வரை வாக்குப்பதிவு நிலவரம் வெளியிடப்படவில்லை. நெல்லையில் மொத்தம் 37 வாக்குச்சாவடிகளில் இரவு வரை வாக்குப்பதிவு நடந்ததாகத் தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

74 சத வாக்குப்பதிவு

நேற்று இரவு வாக்குப்பதிவு சதவிகிதத்தை வெளியிட்ட தேர்தல் ஆணையம் மொத்தம் 74.37 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. இதில் அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டத்தில் 81.36 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.

அடுத்ததாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் 81 %, காஞ்சிபுரத்தில் 80%, திருப்பத்தூரில் 78%, தென்காசியில் 74%, கள்ளக்குறிச்சியில் 72%, திருநெல்வேலியில் 69%, செங்கல்பட்டு மற்றும் வேலூரில் தலா 67% வாக்குகள் பதிவானதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

முதல்கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், மீதமுள்ள 35 ஊராட்சி ஒன்றியங்களில் 2ஆம் கட்ட வாக்குப்பதிவு 9ஆம் தேதி நடைபெற உள்ளது. 62 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 626 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 1,324 ஊராட்சித் தலைவர்கள், 10,329 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவிகளுக்குத் தேர்தல் நடைபெறுகிறது. 2ஆம் கட்ட தேர்தலுக்கு 6,652 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *